மஹர சிறைச்சாலை மஸ்ஜித் விவகாரத்தில் NPP அரசு தனது நம்பகத் தன்மையை வெளிப்படுத்துமா?- சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ்.எல்.யூஸுப்

Date:

சட்டதரணி மாஸ் எல் யூசுஃப் LLB (Honors)

எனவே, நாகரிகமாக நடப்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல என்பதையும் நேர்மை எப்போதும் நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்றும் என்பதையும் இரு தரப்பினரும் மனதில் நிறுத்தி இனி புதிதாக ஆரம்பிப்போமாக. ஒருபோதும் நாம் பயத்தின் காரணமாக பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். அதே போன்று பேச்சுவார்த்தை நடத்த நாம் ஒருபோதும் பயப்படவும் மாட்டோம்’-காலம் சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கெனடியின் தொடக்க உரை 1961

இனவாதத்தை ஒழித்து, ஒன்றுபட்ட இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக பாடுபடுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு நான் ஒரு சவாலை முன்வைக்க விரும்புகிறேன்.

மேற்படி வாக்குறுதியின் முக்கிய அம்சமாக நல்லிணக்கம், பரஸ்பர சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை நோக்கி சமூகத்தை வழிநடத்துவது உட்பட்டுள்ளது. ‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ என்ற கருத்தாக்கத்துடன் கூடிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், வேற்றுமை காட்டுதல் மற்றும் அநீதி போன்றவற்றை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்டுவதை செயலாலேயே காட்டுவதாக உறுதியளித்தது.

இவை அனைத்தும் சிறந்த மற்றும் மிகவும் பாராட்டத்தக்க வாக்குறுதிகளே. அனைத்து இலங்கை குடிமக்களும், வேறுபாடுகளை விடுத்து, இவ்விடயத்தில் அரசிட்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

நேர்மையானவர்கள் தங்கள் வாக்குறுதிகளை காப்பாற்றுவார்கள் எனக் கூறப்படுவதுண்டு. அதே போன்று, அத்தகைய நேர்மையானவர்கள் தாம் நிறைவேற்ற எண்ணாத வாக்குறுதிகளை வழங்கவும் மாட்டார்கள் என்றும் கூறப்படுவதுண்டு.

இப்போது ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய தருணம் வந்துள்ளது.

இக்கட்டுரை மூலம் அரசின் கவனத்தை மஹர சிறைச்சாலையில் உள்ள மஸ்ஜித் தொடர்பான பிரச்சினை பக்கம் கொண்டு வர நான் விரும்புகின்றேன். மேற்படி மஸ்ஜித் 120 ஆண்டுகளுக்கும் மேலாக மஹரயில் இருக்கும் ஒரு முஸ்லிம் மதஸ்தலம் ஆகும்.

தேசிய ஆவணக் காப்பகத்தின் பதிவுகளின்படி, பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில், மஹர சிறைச்சாலை வளாகத்திற்குள், அச்சமயத்தில்  அதை சூழ வாழ்ந்து வந்த சில மலாய் குடும்பங்களுக்காக ஒரு மஸ்ஜித் மற்றும் அடக்கஸ்தலம் அமைப்பதற்காக அரசாங்கத்தால் நிலம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.

இதன் வரலாறு 1903 ஆம் ஆண்டு பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது (தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களம், இலங்கை நிர்வாக அறிக்கை 1902-1903).

மஹர சிறைச்சாலை வளாகத்தில் மலாய் குடும்பங்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது தொடர்பான ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.

1956 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் மஸ்ஜித்கள் மற்றும் அறக்கட்டளைச் சட்டம் (வக்ஃப் சட்டம்) நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மஹர மஸ்ஜித் 1967 மார்ச் மாதம் முஸ்லிம் மத மற்றும் கலாச்சார விவகாரத் திணைக்களத்தால் ஒரு முஸ்லிம் வழிபாட்டுத் தலமாகப் பதிவு செய்யப்பட்டது.

இப்பதிவு மஸ்ஜிதின் இருப்பை மேலும் சட்டப்பூர்வமாக்கியது. மேற்படிப் பதிவிற்கு அப்போதைய சிறைச்சாலை ஆணையர் எஃப். டி. எல். ரத்நாயக்கவும் ஒப்புதல் அளித்திருந்தார். தொழுகை உட்பட்ட தினசரி மத அனுஷ்டானங்கள் நடைபெறும் மஸ்ஜிதைப் பராமரித்தல், புதுப்பித்தல் மற்றும் தேவைக்பேற்ப மேலதிக கட்டுமானங்களை இணைத்தல் போன்றன அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டன.

இந்த மஸ்ஜித் 1950 ஆம் ஆண்டு ஒரு அரசாங்க கட்டிட ஒப்பந்ததாரரால் புதுப்பிக்கப்பட்டதுடன் அச்சேவையைப் பாராட்டி அமைக்கப்பட்ட ஒரு தகடு இன்றும் வளாகத்தில் காணப்படுகின்றது.

சட்டம் மற்றும் உண்மை

எந்தவித அசம்பாவிதமும் பிரச்சினையும் இன்றி இந்த மஸ்ஜித் மற்றும் அதை அண்டிய அடக்கஸ்தலம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அமைதியாக இருந்து வந்தது.

இந்த மஸ்ஜிதையும் அடக்கஸ்தலத்தையும் சூழ வசிக்கும் முஸ்லிம்களும், மஹர சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் கைதிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

மஹர சிறைச்சாலை மஸ்ஜித் சட்ட ரீதியாகவும், உண்மையாகவும் முஸ்லிம் சமூகத்திற்குச் சொந்தமான ஒரு பொதுச் சொத்து என்பதை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிப்பதற்கு மேற்படி விளக்கங்களே போதுமான சான்றாகும்.

மஹர மஸ்ஜித் மற்றும் அடக்கஸ்தலம் சில மலாய் குடும்பளுக்காக நிறுவப்பட்டதன் வரலாறு பற்றி நாம் சற்று பார்ப்போம். 1902 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது 81 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

இது இலங்கை சிறைச்சாலைகள் வரலாற்றில் அதிகூடிய கைதிகள் தப்பிச் சென்ற சாதனை நிகழ்வாகும்.

இந்த சம்பவம் தொடர்பான இலங்கை நிர்வாக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: ‘1902 ஜூன் மாதம் கலவரம் ஏற்பட காரணமாக அமைந்த சிறைச்சாலையில் பணியாற்றிய சிங்கள அதிகாரிகளின் மோசமான நடத்தை மீது அரசாங்கத்திற்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மேற்படி சிறைச்சாலையின் அதிகாரிகளாக ‘மஹர மலாய் காவற்படை’ என்று அழைக்கப்படும் மலாய் இனத்தவர்களை கொண்ட அணி ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்தது.

மேலே உள்ள பட்டியலில் இருந்து இது தெளிவானாலும், மலாய் இனத்தவர்களின் முழு ஆற்றல் இன்றுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் எனது உதவியாளர்  ஓல்ட்ஹெம் ஒரு முன்னணிப் பங்கை வகித்தார்.

அவரது முயற்சிகளின் பயனாக, இங்கு ஒரு பொழுது போக்கு அறையுடன் கூடிய ஒரு கிளப் ஹவுஸ் மற்றும் சிறார்களுக்கான ஒரு பாடசாலை அமைக்கப்பட்டது. மேலும் ஒரு மஸ்ஜித் மற்றும் அடக்கஸ்தலத்திட்கான நிலமும் அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்டது’ (தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களம், இலங்கை நிர்வாக அறிக்கை 1902-1903).

நாகரிகமான மற்றும் அநாகரிகமான நடத்தை

ஏப்ரல் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மஹர மஸ்ஜிதிற்குள் பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு வருவது தடைசெய்யப்பட்டது. தாக்குதல்களின் ஆரம்ப நாட்களில்- அதற்கு முழு இலங்கை முஸ்லிம்களினதும் ஆதரவு இருந்தது என்ற சந்தேகத்தின் பேரில்- நாடு முழுவதும் முஸ்லிம் எதிர்ப்பு மனப்பான்மையை கடுமையாக வெளிப்பட்டது (இப்போது அந்த சந்தேகம் அடிப்படையற்றது என நிரூபிக்கப்பட்டுள்ளது).

எந்தத் தவறும் செய்யாமலேயே, இலங்கை முஸ்லிம் சமூகம் விசாரணைக் கூண்டில் நிறுத்தப்பட்டு பல்வேறு துண்புறுத்தல்களுக்கு ஆளாகினர்.

அப்போது நிலவிய முஸ்லிம் விரோதச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் பட்டப்பகலில் மஹர மஸ்ஜிதின் சொத்துக்களை சட்டவிரோதமாகக் கைப்பற்றியதோடு அவ்வளாகத்தில் புத்தர் சிலைகளையும் கொண்டு வந்து வைத்தனர்.

இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு சந்தர்ப்பவாதச் செயலாகும். தமது மூதாதையர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த மஸ்ஜிதில்  வழிபாடுகளை மேற்கொள்ளும் உரிமையைப் பறிப்பதன் மூலம், ஒரு சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன. இது மத அவமதிப்பை நோக்கமாகக் கொண்ட ஒரு இழிவான செயலுமாகும்.

நவீன நாகரிகத்தின் சில அடிப்படைக் கோட்பாடுகள், ஒவ்வொரு நபருக்கும் அவரவருக்குரிய சொந்த இடம் இருப்பதை ஏற்கின்றன. உதாரணமாக, பொது லிஃப்ட் அல்லது பொது போக்குவரத்தில் பயணிக்கும்போது, ஒவ்வொரு நபருக்கும் வருகை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உரிமை கிடைக்கின்றது.

அதே போல, சிறுபான்மையினர் உட்பட, ஒவ்வொரு சமூகமும் சமூக-கலாச்சார-மத சூழலில் சொந்த இடம்பாடுகளுக்கு உரிமை பெறுகின்றது.

இந்த இடம்பாடு சிவில் நடைமுறையால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாவதால் அது மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அத்தகைய இடம் ஒரு தனிநபருக்கோ அல்லது மக்களில் ஒரு பிரிவினருக்கோ நியாயமற்றதாகவும் அநீதியாகவும் மறுக்கப்படும் போது அது சமூக கட்டமைப்பிற்குள் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றது.

நேர்மை நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் இலங்கை முஸ்லிம் சமூகம் விடுக்கும் வேண்டுகோளாகும்.

நேர்மையானவர்கள் தாம் நிறைவேற்ற எண்ணாத வாக்குறுதிகளை வழங்கவும் மாட்டார்கள் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக எதிர்மறையான விமர்சனங்கள் பல தற்சமயம் உள்ளமையை மறுப்பதற்கில்லை.

இத்தகைய சூழ்நிலையில், ஜனாதிபதியும் அரசும் அளித்த வாக்குறுதிகள்,

வெறும் வார்த்தைகள் அல்ல, மாறாக செயல்படுத்தப்படவுள்ளமை எனவும்,

அவை வெறும் முழக்கங்கள் அல்ல, மாறாக ஆழமான அர்த்தத்தைக் கொண்டவை எனவும்,

அவை துஷ்பிரயோகத்திற்கான கருவிகள் அல்ல, மாறாக நேர்மையானவை எனவும்

அவை நேர்மையற்ற தூண்டுதல்களுக்காகக் கொடுக்கப்பட்டவை அல்ல, மாறாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பத்துடன் அளிக்கப்பட்டவை எனவும்,

நிரூபிக்க ஒரு பொன்னான வாய்ப்பு உருவாகியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, நாடு தற்போது எந்தவிதமான பாரதூரமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவில்லை. ‘ஐக்கிய இலங்கையர்’ என்ற கருப்பொருளில், வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், மஹர சிறைச்சாலை மஸ்ஜிதை அதன் முன்னைய அசல் நிலைக்கு மீட்டெடுக்குமாறு நாம் ஜனாதிபதி அவர்களை கேட்டுக்கொள்கின்றோம்.

இதன் மூலம் இவ்வாட்சியில் மக்களிடையே பாகுபாடுகளுக்கோ அநியாயம் மற்றும் அநீதிக்கோ சிறிதும் இடமில்லை என்பதை உலகிற்கு பறைசாற்ற இயலும்.
இவ்விடயமானது, தற்போதைய அரசாங்கம் நேர்மையான மற்றும் இலட்சியமுள்ள ஒன்றா என்பதை பார்ப்பதற்கான ஒரு சோதனையுமாகும்.

(எல்.எல்.பி (ஹானர்ஸ்) பட்டம் பெற்ற கட்டுரை ஆசிரியர், சில காலம் ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியின் தனிப்பட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்).

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...