மேற்கு வங்கத்தில் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
சனிக்கிழமை மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர் இஜாஸ் அகமது, ஹர்கோவிந்த தாஸ் மற்றும் அவரது மகன் சந்தன் தாஸ் என 3 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வன்முறையில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வீடு, கடைகள் சூறையாடப்பட்டன. சில இடங்களில் கோயில் மற்றும் மசூதி குறிவைக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் குறைந்தது 150 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி கூறுகிறது.
மக்கள் அமைதியை கடைபிடிக்குமாறு மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல் லாபத்துக்காக வன்முறைகளை தூண்டாதீர்கள்,” என அவர் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது வாக்கு வங்கியை திருப்திப்படுத்த வன்முறையை தூண்டுவதாக திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்டுகிறது.
வன்முறையை அடுத்து மத்திய பாதுகாப்புப் படைகளை உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வக்பு திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்து வாக்களித்த திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்திலும், கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளத்திலும் வன்முறை நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.
வக்பு சட்டத்தை எதிர்க்கும் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களில் சட்டம், ஒழுங்கை கெடுக்கும் வகையில் பாஜக சார்பு காவல் அதிகாரிகள் திட்டமிட கூடும்.
ஆர்ப்பாட்டங்களை திட்டமிடும் கட்சிகள்/அமைப்புகள் மிக கவனமாக இருக்க வேண்டும்.