ருஷ்தி விவகாரம்: சிட்டுக்குருவியை வீழ்த்த பீரங்கியை பயன்படுத்தும் ஒரு செயல்- சட்டத்தரணி மாஸ் எல்.யூசுப்

Date:

பலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டிய ‘குற்றத்திற்காக’ சுமார் 20 வயதுடைய முகமது ருஷ்தி என்ற இளைஞனை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்குமாறு அண்மையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பிறப்பித்த தடுப்பு உத்தரவு பல தரப்பினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இளைஞன் பின்னர் உயர் நீதிமன்ற ஆணையின் படி விடுவிக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நடவடிக்கைகள் விகிதாசாரக் கொள்கைக்கு உட்பட்டவையாகும். இதன் போது ஒரு நபரின் உரிமைகளில் தலையிடுவதற்கு முன்பு சட்டத் தரநிலைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இருக்கும் தெரிவுகளில் மிகச்சிறந்ததை தெரிவு செய்வது நிர்வாகத்திற்கு சாத்தியமாகும் விதத்தில் நிர்வாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன,
பிரசித்திப்பெற்ற GCHQ வழக்கில், லார்ட் டிப்லாக் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

‘விகிதாசாரக் கொள்கை எனப்படுவது ஒரு பொது அதிகாரம் அதன் குறிப்பிட்ட நோக்கங்களுக்கும் அந்த நோக்கங்களை அடைவதற்கான வழிமுறைகளுக்கும் இடையில் ஒரு சமநிலையைப் பராமரிக்க வேண்டும் என்பதாகும்.

குறைந்தபட்சம் பொது நலனைப் பாதுகாக்க தேவையான அளவிற்கேளும் அவ்வாறு செய்தால் மட்டுமே அதன் நடவடிக்கை தனிநபர்களின் உரிமைகளில் தலையிடாமல் இருக்கும்’ ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டியதற்காக ஒரு இளைஞனுக்கு மூன்று மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிப்பதானது ஒரு சிட்டுக்குருவியை வீழ்த்த பீரங்கியை பயன்படுத்துவது போன்ற ஒரு நகைப்பிற்கிடமான செயலாகும்.

கோயம்புத்தூர் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் ஊழியர் சங்கம் இடையே நடைபெற்ற வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு (2007 INSC 448) இதற்கான நல்லதொரு உதாரணமாகும்.

அத்தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது: ஒரு கொட்டையை உடைக்க ஒரு சிறு கத்தி போதுமானதாக இருக்கும் போது, விகிதாசாரக் கொள்கையைப் பயன்படுத்துவதன் பேரில் நிர்வாகம் அதற்காக ஒரு சுத்தியலைப் பயன்படுத்தியுள்ளது.

அதற்கு இந்த நீதிமன்றம் அனுமதி அளிக்காது, அதேபோன்று, அமல் சுதத் சில்வாவிற்கு எதிராக கொடிதுவக்கு, பொலிஸ் பரிசோதகர் மற்றும் ஏனையோர் தொடுத்த வழக்கின் [(1987) 2 = ஸ்ரீ. எல்.ஆர் 11 பக்கம் 127] போது நீதிபதி அத்துகோராள கீழ்வருமாறு கூறினார்:

‘மனுதாரர் கருணை காட்ட சிறிதும் தகுதியற்ற ஒரு மோசமான குற்றவாளியாக இருக்கலாம். ஆனால் நமது ஜனநாயக கட்டமைப்பில் அரசியலமைப்பு உத்தரவாதங்களுக்கு ஏதேனும் அர்த்தம் அல்லது பெருமானம் இருக்க வேண்டுமென்றால், நமது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாதுகாப்பை அவர் இழக்காமல் இருப்பது அவசியமாகும்’

ஜனாதிபதி அறிந்திருந்தாரா?

தடுப்புக்காவல் உத்தரவில் கையெழுத்திடுவதற்கு முன்பு, சந்தேக நபரை தற்போதுள்ள வேறு சில சட்டங்களின் கீழும் கைது செய்யலாம் என்பதை ஜனாதிபதி அறிந்திருந்தாரா?

அவருக்கு அது தெரியாமல் இருந்திருந்தால், அவரைச் சுற்றியுள்ள அதிகாரிகள் அவை பற்றி ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியிருக்க வேண்டுமல்லவா?

ஜனாதிபதியாக பதவி ஏற்கு முன்னர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடாத்திய ஒரு தலைவராக, ஜனாதிபதி அனுர, தனது கையொப்பத்திற்காக மனுவை சமர்ப்பித்த அதிகாரிகளிடம் ‘இந்த இளைஞனுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன?’ என்று கேட்டிருக்க வேண்டுமல்லவா?

அல்லது இந்தியப் பிரதமர் மோடியின் வருகையின் டென்ஷனில் இருந்த ஜனாதிபதி விவரம் அறியாமலே இந்த சர்ச்சைக்கிடமான உத்தரவில் கையெழுத்திட்டாரா?
இந்த சம்பவம், ஜனாதிபதியைச் சுற்றியுள்ள அதிகாரிகளின் திறமையின்மையையே காட்டுகின்றது என்றால் அது தவறாக இருக்க முடியாது.

புதியதொரு ஸ்ரீ லங்கா பற்றி அனுர அரசு கோஷமிட்டு, ‘பழைய குறுடி கதவைத்திறடி’ என்ற கதைத்தான் தொடர்கின்றது என்ற விரக்தி மக்கள் மத்தியில் ஏற்பட இது போன்ற விவேகமற்ற செயல்கள் காரணமாகி விடலாம் எனபதை அரசு புரிந்து கொள்வுத நல்லது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அர்ப்பணிப்புடன் போராடி வந்தவதவரே தற்போதைய ஜனாதிபதி அனுர. மேற்படி சம்பவம் மூலம் அவருடைய நம்பகத்தன்மை மிது பாரிய சநதேகம் ஏற்பட இடமுண்டு.

ஒரு இளைஞனின் அடிப்படை உரிமைகளை மறுத்தமை, அவனது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியமை அவனது குடும்பத்தினருக்கு உள ரீதியான உளைச்சலை ஏற்படுத்தியமை, அவனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அறிமுகமுள்ளவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியமை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அனுர அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியமை, மக்கள் மத்தியில் எதிர்பு ஆர்பாட்டங்கள் வெடிக்கும் சாத்தியத்தை ஏற்படுத்தியமை போன்ற பல பாதிப்புக்களை மேற்படி நடவடிக்கையின் மோசமான விளைவுகளாக பட்டியலிடலாம்.

வீரவன்ஸவிற்கு எதிராக சட்ட மா அதிபர் மற்றும் ஏனைய சிலர் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் பின்வரும் நிலைப்பாட்டை வெளியிட்டது:

அதன் போது நீதிபதி பெர்னாண்டோ கூறியதாவது: ‘அமைச்சர் தனிப்பட்ட அறிவு அல்லது நம்பகமான தகவல்களின் அடிப்படையில் தனது அரசியலமைப்பு விருப்புரிமையை சுயாதீனமாகப் பயன்படுத்தவில்லை. மாறாக அவர் இரண்டாவது பிரதிவாதியின் கருத்தையே தழுவியுள்ளார். இதுவானது தெளிவாகவே விருப்புரிமையை புறக்கனிப்பதாகும்’

இந்த இடத்தில் பல நியாயமான கேள்விகள் நமது மனதில் எழுகின்றன.
ஜனாதிபதி அனுர, ருஷ்தியை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தாரா? மேலும், ருஷ்தி பற்றிய நம்பகமான தகவல்கள் ஜனாதிபதிக்குக் கிடைத்தனவா? அல்லது வேறொருவரின் கருத்தை ஏற்றே ஜனாதிபதி தடுப்புக் கட்டளையில் கையெழுத்திட்டாரா? அவர் அவ்வாறு செய்திருந்தால், அது அவர் தனது சுயவிருப்பத்தைத் தெளிவாகக் கைவிட்டதாகவே இருக்கும்.

அல்லது தடுப்புக்காவல் உத்தரவில் கையெழுத்திட்ட பிறகு, அரசாங்கம் இப்போது தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த அவசரமாக ஆதாரங்களைத் தேடுகின்றதா?
நீதிபதி பெர்னாண்டோவின் கருத்துப்படி, ‘அமைச்சருக்கு விடய ரீதியாகத் தேவையான நம்பிக்கை அல்லது சந்தேகம் இருப்பது மட்டுமல்லாமல், அத்தகைய நம்பிக்கைக்கான புறநிலை காரணங்களும் இருந்தாக வேண்டும்.

(2000 SLR 387)   இது, தடுப்பு உத்தரவில் கையெழுத்திட்டபோது ஜனாதிபதி அனுரவிற்கு என்ன மாதிரியான நம்பிக்கை அல்லது சந்தேகம் இருந்திருக்க வேண்டும் மற்றும் அதற்கான காரணங்கள் யாவை என்ற கேள்விகளை இயல்பாகவே எழுப்புகின்றது.

இதனடிப்படையிலேயே இந்த உச்ச நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது’
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 9(1) இன் கீழ் பாதுகாப்பு அமைச்சர் 02.05.96 தேதியிட்ட தடுப்புக்காவல் உத்தரவை பிறப்பித்ததும், அதன் பிறகாரம் மனுதாரரைக் கைது செய்ததும் சட்டவிரோதமானது மற்றும் செல்லாதவை ஆகும்.

மேலும் (i) சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த நியாயமான சந்தேகத்தை நியாயப்படுத்தும் வகையில் எதுவும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவுமில்லை (ii) எனவே மனுதாரரைக் காவலில் வைத்திருப்பது 13(2) பிரிவை மீறும் ஒரு செயலாவதோடு அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை பயன்படுத்தாது ஏன்?

தனுஷ்கவிற்கு எதிராக சி.டி. விக்ரமரத்ன தொடுத்த வழக்கில், ஜளுஊ குசு 170/2022ஸ பின்வருமாறு குறிப்பிடப்பட்டது:

1979 வருட 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் ஊடாக, ஒரு காவல்துறை அதிகாரிக்கு ஒரு சந்தேக நபரை கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 32(1) (B) பிறகாரம் ஒரு காவல்துறை அதிகாரிக்கு எந்தவொரு நபரையும் வாரண்ட் இல்லாமலயே கைது செய்யும் அதிகாரம் உள்ளது.

ஒரு நபர் அறியப்பட்ட குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக நியாயமான சந்தேகம் இருந்தால் அல்லது நியாயமான புகார் அளிக்கப்பட்டிருந்தால் அல்லது நம்பகமான தகவல் பெறப்பட்டிருந்தாலேயே அவ்வாறு செய்யலாம்.

இதன் படி நீதிமன்றம் கீழ்வாருமாறு தனது நிலைப்பாட்டை வெளியிட்டது:
‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் அதிகாரமானது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரத்தை விட விரிவானதாகும். தனுஷ்க வழக்கில், மனுதாரர் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதோடு இது முதன்மையான ஆதாரமாகும், மேலும் இது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 32(1) (B) யின் கீழும் மனுதாரரைக் கைது செய்வதற்கான அடிப்படையை உருவாக்கியுள்ளது.

‘மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 32(1) (B) யின் கீழ் கைது செய்யக்கூடிய குற்றமான சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டியமைக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து அவருக்கு எதிராக தடுப்பு உத்தரவு பிறப்பித்தமையை ஒப்பிடும்போது, இது ஒரு வினோதமான செயல் என்றே கூற வேண்டியுள்ளது.

இந்த விடயத்தை வெட்னஸ்பரி கோட்பாடும் பகுத்தறிவற்றது, சமத்துவமற்றது மற்றும் அநீதியானது என்றே கண்டிக்கும். இது எந்தளவு தர்க்க ரீதியாக ஏற்க முடியாதது மற்றும் தார்மீக தரங்களுக்கு மாற்றமானது எனில் எந்தவொரு விவேகமுள்ள நபரும் இத்தகைய முடிவை எடுத்திருக்க முடியாது’

காக்கும் கரங்களாக நீதிமன்றம்

‘பாராளுமன்ற சட்டங்களுக்கு இறையான்மை அதிகாரம் இருந்த போதிலும் வழங்கப்பட்ட அதிகாரம் மூலம் இயற்றப்படும் சட்டங்கள், அவை வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு மிகச்சரியாக இசைவாகும் போது மட்டுமே செல்லுபடியாகும்’ (வேட் நிர்வாகச்சட்டம் 5 வது பதிப்பு பக்கம் 748)
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போது அவர்களுக்கு எதிராக துணிச்சலான, அச்சமற்ற மற்றும் தளராத முடிவுகளை எடுக்கக்கூடிய விவேகமுள்ள நீதிபதிகள் இலங்கையில் இருப்பது நமது அதிஷ்டமே.

இப்பாராட்டுக்குரிய நீதிபதிகள் அவ்வாறு செய்யும்போது, அரசாங்கம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களின் மிரட்டல்கள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் முன்னே செய்வதறியாது கைகளை பிசையும் சாதாரண குடிமக்களின் நம்பிக்கை, மற்றும் நேர்மறையான அபிலாஷைகள் வலுவடைவது திண்ணம்.

நீதிபதி குலதுங்கவின் கருத்துப்படி ஒரு கைது அல்லது தடுப்புக்காவல் உத்தரவின் செல்லுபடித்தன்மயை நீதிமன்றமே தீர்மானிக்கும். நீதித்துறை ஒருபோதும் தனது கடமையை நிர்வாகத்திற்கு  அடிமையாக்க மாட்டாது.

ஏனெனில் அவ்வாறு செய்வது அரசியலமைப்பின் பிரிவு 13(1) ஆல் பாதுகாக்கப்பட்டுள்ள தன்னிச்சையான கைது நடவடிக்கையிலிருந்து விடுபடுவதற்கான அடிப்படை உரிமையைத் தோல்விடையச் செய்து விடும்.

சத்தியக் கடதாசிகளில் உள்ள வெற்று கூற்றுக்களை நம்புவதற்குப் பதிலாக, நீதிமன்றம் ஒரு முடிவை எடுக்க உதவும் வகையில், சாட்சி அறிக்கைகள், அவதானிப்புகள் போன்ற போதுமான ஆதாரங்களை நிர்வாகம் நீதிமன்றத்தின் முன் சமர்பிக்க வேண்டும்.

(திசாநாயக்க எதிர் மஹர சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் மற்றும் ஏனையோர் (1991 (2) SLR 247) இறுதியாக, இந்த நாட்டின் குடிமக்கள், ஜனாதிபதி தனக்கு ஒப்படைக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தும் போது விவேகத்துடனும் நிதானமாகவும் செயல்படுவார் என எதிர்பார்க்கின்றனர் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...