இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் தல்கடோரா ஸ்டேடியத்தில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இன்று (22) ‘வக்ஃப் பாதுகாப்பு மாநாட்டை நடத்தியது.
இந்த நிகழ்வில் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் உட்பட நாடு முழுவதும் இருந்து பல முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அவர்களில் முக்கியமானவர்கள் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பீகாரைச் சேர்ந்த ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மசூத் மற்றும், மொஹிபுல்லா நத்வி ஆகியோர் ஆவர்.
வக்ஃப் சொத்துக்கள் சுரண்டப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கொண்டு வரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த வக்ஃப் திருத்தச் சட்டம் 2025ஐ எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
முக்கியமாக இந்தியாவின் அடி ஆழத்தில் ஊன்றி இருக்கும் மத வேறுபாடுகளை, பிரச்சனைகளை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இந்த சட்டம் அமைந்து உள்ளது.
இந்நிலையில் இந்த மாநாட்டில் வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025 தொடர்பாக நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தை அசாதுதீன் ஒவைசி கடுமையாக விமர்சித்தார்.
“இது ஒரு கருப்புச் சட்டம், இது எங்கள் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பதால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” சவூதி அரேபியா விஜயம் தொடர்பாக பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஒவைசி, ‘பிரதமர் மோடி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அன்புடன் சந்திப்பார், ஆனால் இந்தியாவில், முஸ்லிம்களை அவர்களின் உடையால் அடையாளம் காண்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பேசிய எம்.பி. மனோஜ் ஜா, “மக்கள் நம்மை தவறாக வழிநடத்த முயற்சிப்பார்கள் என்பதால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஆனால் அநீதிக்கு எதிராகப் போராட விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.