ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு காசா நிர்வாகத்தை கைவிட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ், ஏழு வருடங்களுக்கான நீண்டகால யுத்த நிறுத்தத்தை இஸ்ரேலுடன் மேற்கொள்ளும் யோசனையை எகிப்திய அதிபர் ஸீஸி கட்டார் அமீரிடம் முன்வைத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்திற்காக மத்தியஸ்தம் செய்து வரும் எகிப்து மற்றும் கத்தார், நீண்டகால போர்நிறுத்தம் மற்றும் காசாவிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறுவதை உள்ளடக்கிய ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளன.
இந்த திட்டத்தில் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கும் போர்நிறுத்தம், போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவருதல், காசாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவத்தை முழுமையாக திரும்பப் பெறுதல், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பலஸ்தீன கைதிகளுக்கு அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் பரிமாறிக்கொள்வது” ஆகியவை அடங்கும்.
மத்தியஸ்தர்கள் முன்வைத்த இந்த புதிய திட்டம் குறித்து விவாதிக்க இஸ்ரேலிய பிரதிநிதிகள் குழு ஞாயிற்றுக்கிழமை மாலை கெய்ரோவுக்குச் சென்றதாகவும் கத்தாரை தளமாகக் கொண்ட அல்-அரபி அல்-ஜதீத் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், ஹமாஸ் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட இஸ்ரேலிய போர்நிறுத்த சலுகையை நிராகரித்தது, ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவருவது உள்ளிட்ட திட்டங்களைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வார இறுதியில் ஹமாஸ் அழிக்கப்பட்டு அனைத்து பணயக்கைதிகளும் திருப்பி அனுப்பப்படும் வரை போரை முடிவுக்குக் கொண்டுவரப் போவதில்லை என்று அறிவித்தார்.