ஈரானில் பாந்தர் அப்பாஸ் என்ற நகரில் உள்ள துறைமுகத்தில் மிக மோசமான வெடி விபத்து 2 நாட்களைக் கடந்தும் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில், இதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 1000+ மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரானை உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க அந்நாட்டின் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் நாட்டில் உள்ள பாந்தர் அப்பாஸ் நகரில் அமைந்துள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் சனிக்கிழமை மிக மோசமான வெடி விபத்து ஏற்பட்டது.
அங்கு கண்டெய்னர்கள் வைக்கப்பட்டிருந்த கெமிக்கல் வெடித்துச் சிதறியதே விபத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கிலோ கணக்கில் வைக்கப்பட்டிருந்த கெமிக்கல் வெடித்துச் சிதறியதால் அங்கு மோசமான வெடி விபத்து ஏற்பட்டது.
அந்த கெமிக்கல் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் அதுவே வெடித்துச் சிதறியதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. அங்குச் சமீப காலங்களில் நடந்த மிகப் பெரிய வெடி விபத்துகளில் ஒன்றாகவே இது கருதப்படுகிறது.
இது அங்கு நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முக்கிய நகரம் தெற்கு ஈரானில் உள்ள இந்தப் பந்தர் அப்பாஸ் நகரம் அந்நாட்டின் முக்கிய வர்த்தக மையமாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக ஈரானுக்கான எண்ணெய் ஏற்றுமதியில் இந்த நகரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கிருந்து தான் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி மட்டுமின்றி, ஈரான் இறக்குமதிக்கும் இந்த நகரமே முக்கியமானதாக இருக்கிறது.
இந்தச் சூழலில் தான் பாந்தர் அப்பாஸ் துறைமுக கன்டெய்னர் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. அங்கிருந்த கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. திடீரென இந்த கெமிக்கல் வெடித்துச் சிதறியதில் பல கிமீ தூரத்திற்கு அதிர்வலைகள் உணரப்பட்டன.
இந்த தீ விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 1000+ மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் ஈரான் முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதனால் இந்த வெடி விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் உத்தரவிட்டுள்ளார். மேலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்தில் காயமடைந்தோரை நேரில் சந்தித்தார்.
வெடி விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கெமிக்கல் வைத்திருப்பது ஆபத்து என தெரிந்தும் ஈரான் ஏன் இவ்வளவு கிலோ கெமிக்கலை துறைமுகத்திலேயே வைத்திருந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சர்வதேச நாடுகள் இது குறித்தும் கேள்வி எழுப்பி வருகிறது.