ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலின்போது துப்பாக்கிதாரியுடன் துணிச்சலாக மோதி, சுற்றுலாப் பயணிகளைக் காக்க முயன்று, சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சையத் ஆதில் ஹுசைன் ஷாவின் வீரச் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் அனைவரின் உள்ளத்தையும் கொதிக்க வைத்துள்ளது. மிகக் கொடூரமாக நடந்துள்ள இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த சம்பவத்தின் போது சுற்றுலாப் பயணிகளைக் காக்கும் முயற்சியில் உள்ளூர் மக்கள் பலரும் முயன்றது தெரிய வந்துள்ளது. அவர்கள்தான் முதலில் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு கொண்டு செல்ல உதவியுள்ளனர்.
சிலர் நடக்க முடியாத நிலையில் இருந்தபோது முதுகில் தூக்கிக் கொண்டும் சுமந்து சென்றுள்ளனர்.
பஹல்காமின் பேரெழில் கொஞ்சும் பைசாரன் புல்வெளிப் பகுதியில் குதிரைப்பாகனாக இருந்து வந்தார். தனது குதிரை மூலம் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று மகிழ்விப்பதுதான் இவரது தொழிலாகும்.
தாக்குதலின் போது சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றுவதற்காக துப்பாக்கிதாரிகளிடமிருந்து துப்பாக்கியை பிடுங்க முயற்சித்திருக்கிறார்.
ஆனால் , ஈவு இரக்கமே இல்லாமல் ஷாவையும் சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டனர். ஷாவின் தந்தை இந்த கொடூரமான சம்பவம் குறித்து கதறி அழுதபடி கூறுகையில்,
இந்த செயலுக்குக் காரணமான கொடியவர்கள் தப்பமுடியாத தண்டனையை அனுபவிக்க வேண்டும். நேற்று என் மகன் பிழைப்புக்காக பஹல்காம் சென்றான். மதியம் மூன்று மணியளவில் அந்தத் தாக்குதல் பற்றி கேள்விப்பட்டோம். உடனே அவனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.
ஆனால் அவன் போன் ஆப் ஆகியிருந்தது. மாலை 4:40 மணியளவில் அவன் தொலைபேசி ஒலித்தது, ஆனால் மறுமுனையில் யாருமில்லை.பதறிப்போய் நாங்கள் காவல் நிலையத்திற்கு விரைந்தோம். அங்குதான் அவன் அந்த கோழைத்தனமான தாக்குதலில் சுடப்பட்டு மரணமடைந்தான் என்ற துயரமான செய்தியை அறிந்தோம்.
இந்த அக்கிரமத்திற்கு காரணமான ஒவ்வொருவரும் அதன் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும் என்று ஷாவின் தந்தை கதறி அழுதபடி கோபாவேசத்துடன் கூறினார். ஷாவின் தாயும் தனது மகனை இழந்த வேதனையில் கதறித் துடித்தபடி உள்ளார்.
அவன் தானே எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கு. எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு ஏன் இந்த கொடுமையைச் செய்தாய் என்று அவர் அழுத காட்சி காண்போரையும் உருக்கியது.





