“அவர்களால் அதிகபட்சம் காகிதங்களில் மட்டுமே கருணை காட்ட முடியும் “: அரபுத் தலைமைகள் குறித்து தமீமுன் அன்சாரியின் கண்டன வரிகள்

Date:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய அரபு நாடுகளுக்கான பயணத்தின் போது, பல ஆயுத வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், பலஸ்தீன மக்களின் துயரங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக  தமிழ்நாடு மனிதநேய ஜனநாயகக்கட்சியின் தலைவர்  தமீமுன் அன்சாரி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள், கடந்த வாரம் அரபு நாடுகளுக்கு வருகை தந்ததும்  பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டதும்; உலகம் முழுக்க பேசு பொருளானது.

அவருக்கு அரபு நாட்டு அரசர்களும், இளவரசர்களும் அளித்த உற்சாக வரவேற்பில் டிரம்ப் அகமகிழ்ந்து போனார்.
அவர் தன் இரு மகன்களுடன் வருகை தந்திருந்தது முக்கியத்துவம் பெற்றது.

அவ்விருவரும் ட்ரம்புக்கு நிகராக பன்னாட்டு வணிகத்தில் வெற்றிகரமாக இயங்கி வருபவர்கள்.

அரசு முறை பயணத்தில் அவர்கள் வந்தது குறித்து பெரிய அளவில் வினாக்கள் எழுப்பப்படவில்லை.

ட்ரம்பின் வருகையின்போது, தங்களுடைய மனிதாபிமான பிரச்சனைகள் பேசப்படும் என்று பலஸ்தீனர்கள் எதிர்பார்த்து இருந்திருப்பார்கள். அப்படி எதுவும் பேசப்படவில்லை என்பது இஸ்ரேலுக்கு ஆறுதல்.
ஆனால் வளம் கொழிக்கும் வர்த்தக ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

சவுதி அரசுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் 142 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அது கால்குலேட்டர்களால் கூட கணக்கு சொல்ல முடியாத இந்திய ரூபாய் மதிப்பிலான தொகையாகும்.

முக்கியமாக அமெரிக்கா தயாரிக்கும் ஆயுதங்களை கொள்முதல் செய்வது இதில் பிரதானமானது.

இப்பொழுதும் அமெரிக்காவின் ஆயுதங்களை அதிகமாக கொள்முதல் செய்யும் நாடுகளில் முதலிடத்தில் சவுதி தான் இருக்கிறது.

இதே போன்ற அமெரிக்கா விற்பனை செய்யும் ஆயுதங்களை எவ்வாறு இயக்குவது என்று இஸ்ரேலுக்கு சொல்லிக் கொடுக்கப்படும்.

ஆனால் அரபு நாடுகளுக்கு அந்த வாய்ப்பு இல்லை.

ஆயுதங்களை வாங்க வேண்டும்; அதை சந்தையில் விற்க வேண்டும்; அமெரிக்காவின் வணிகத்துக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பது மட்டும்தான் எழுதப்படாத விதி என கூறப்படுகிறது.

ட்ரம்பின் மீது அன்பை பொழிந்த மற்றொரு நாடு ஐக்கிய அரபு அமீரகம்.

ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை விட, தற்போது உலகின் கவனத்தை கவர்ந்திருக்கும் ஆசிய நாடுகளில் முதன்மையானது அமீரகம்.

அடுத்த 10 ஆண்டுகளில் 14 லட்சம் கோடி அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்யும் என்று அமெரிக்காவுடன் ட்ரம்ப் ஒப்பந்தம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

ஏற்கனவே அமெரிக்காவின் ஆயுத கொள்முதலில், அமீரகம் முக்கிய இடத்தை வகிக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

வளைகுடாவில் சவுதி மற்றும் அமீரகத்துக்கு வணிக ரீதியில் போட்டி நாடாக கத்தார் தன்னை உருவாக்கியிருக்கிறது.

வளைகுடாவின் வர்த்தக போட்டிகளையும் கடந்து, கத்தார் அரசியல் ரீதியாகவும் தன்னை உலகில் கவனத்திற்குரிய நாடாக வளர்த்து வருகிறது.

கத்தார் தனது பங்களிப்பாக 3,440 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு விமானத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அது பரிசளித்துள்ளது.

பாவம், டிரம்ப்!

வெப்பம் மிகுந்த தற்போதைய வளைகுடா வானிலையில், அவர் மிகவும் குளிர்ந்து போய்விட்டார்!

இவற்றையெல்லாம் ஊடகங்களின் வழியாக பார்த்த மக்கள் ஆச்சரியத்திலும் மூழ்கியுள்ளனர்.

ஒரே நேரத்தில் அரபு நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் உறவுகளை பராமரிக்க எப்படி அமெரிக்காவால் முடிகிறது என்பதும் கேள்வியாக இருக்கிறது.

இதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஏனெனில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அமெரிக்கா நண்பராக இருக்கவில்லையா? அது போலத்தான் இதுவும்.அது இருக்கட்டும்.

இந்த நேரத்தில் பாலஸ்தீனத்தில் கடந்த வாரத்தில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி, அடுத்தடுத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

போரின் பாதிப்பால் -பட்டினியால் கதறியலும் பாலஸ்தீன குழந்தைகளை பற்றி யாருமே கவலைப்படவில்லை.

அமெரிக்காவின் முன்முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட ‘ஆபிரகாம் ஒப்பந்தம் மூலம் அமீரகம், பஹ்ரைன் போன்ற அரபு நாடுகள் இஸ்ரேலுடன் நெருங்கி வந்திருக்கின்றன.
அவர்கள் தங்களுடைய தோழமையை – ஒப்பந்தத்தை பயன்படுத்தி கூட பாலஸ்தீன குழந்தைகளுக்கு ஏன் உதவ முடியவில்லை என்ற கேள்வியை உலகம் எழுப்பிக் கொண்டிருக்கிறது.

மனிதாபிமான பொருள்கள் செல்வதை தடுத்து, குழந்தைகளை பசியால் கதறவிடும் மோசமான இஸ்ரேலின் செயலுக்கு எதிராக கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் கூட்டாக இஸ்ரேலை எச்சரிக்கின்றன.

புதிதாக பொறுப்பேற்று இருக்கும் மரியாதைக்குரிய பெரியவர் போப் ஆண்டவர் லியோ அவர்கள், பாலஸ்தீன குழந்தைகளை நினைத்து பதறுகிறார்.

உலக நாடுகளை கெஞ்சுகிறார். இஸ்ரேலை எச்சரிக்கிறார்.

அவர் குரலில் பாதி அளவு கூட அரபு நாடுகளில் வசிக்கும், மேன்மைமிகு மார்க்க அறிஞர்களிடமிருந்து எழவில்லை என்பதையும் உலகம் கவனிக்கிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நமது பிராந்தியத்துக்கு வருகை தருவதால், நிச்சயம் தங்களுக்காக அரபு நாட்டு ஆட்சியாளர்கள் வாதாடுவார்கள்…

மனிதாபிமான உதவிகளை பெற்றுத் தருவார்கள்… என பாலஸ்தீனர்கள் நினைத்திருக்க கூடும்.

பாவம். மீண்டும் ஏமாந்துவிட்டார்கள். எது, எப்படியோ அரபு நாடுகளின் எண்ணெய் வளங்களும், ஏற்றுமதி – இறக்குமதி வணிகமும், பணம் கொட்டும் சுற்றுலாவும் மேம்படுத்தப்படுகின்றன.

எனவே அரபு அரசர்களுக்கு இது பற்றி முயற்சி எடுத்திட நேரமில்லை. மிகவும் ‘பிசி’ யாக உள்ளனர்.

நாங்கள் பலாஸ்தீனர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்ற பதில் அவர்களிடமிருந்து எளிதாக கிடைத்துவிடும்!

அரபு ஆட்சியாளர்களையும், அவர்களது தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கும் மக்களின் மீதும், பாலஸ்தீன மக்கள் இனி எதிர்பார்ப்புகளை வைப்பது தேவையற்றது.
அவர்கள் போப் ஆண்டவரிடமும், ஐரோப்பிய நாடுகளிடமும் எதிர்பார்க்கும் உதவிகளை கூட அரபு ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க கூடாது.
காரணம், அவர்களால் அதிகபட்சம் காகிதங்களில் மட்டுமே கருணை காட்ட முடியும்.

பலஸ்தீனர்களே…

உங்கள் துயரங்களையும், ஏமாற்றங்களையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
எங்கள் கண்ணீரையும், கருணையையும் மட்டுமே உங்களுக்கு வழங்க முடியும் எனவும் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...