இலங்கை சிறையிலிருக்கும் பிரித்தானிய பெண்ணின் காணொளி: எப்படி வெளியாகியது?

Date:

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய பெண்ணின் காணொளி எவ்வாறு வெளியாகியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மே 12 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சார்லட் மே லீ என்ற 21 வயது பிரித்தானிய பெண் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வந்த இளம் பெண்ணின் இரண்டு பயணப் பைகளில் 46 கிலோகிராம் “குஷ்” போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த இளம் பெண் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவ்வாறானதொரு நிலையில் சம்பந்தப்பட்ட இளம் பெண் நீர்கொழும்பு சிறைச்சாலையில் குறைந்த வசதிகளுடன் இருப்பதாக பிரித்தானிய டெய்லி மெயில் வலைத்தளம் 21 ஆம் திகதி காணொளியொன்றை வெளியிட்டிருந்தது.

அதன்படி, இந்த வழக்கு விசாரணைகள் நேற்று நீர்கொழும்பு இல 02 மேலதிக நீதவான் தர்ஷிகா பிரேமரத்ன முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, ​​சிறை அதிகாரிகள் அந்த இளம் பெண்ணை நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.

விசாரணை அதிகாரிகள் இளம் பெண்ணின் பயணப் பையிலிருந்து கைப்பற்றப்பட்ட 46 கிலோ குஷ் போதைப்பொருளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர், மேலும் அதை நீதிமன்றத்தின் வழக்கு கோப்பு அறையில் வைப்பதற்கு நீதிவான் உத்தரவிட்டார்.

சந்தேகத்திற்குரிய பிரித்தானிய பெண் சார்பாக முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி சம்பத் பெரேரா, ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழு சமீபத்தில் தங்கள் கட்சிக்காரர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று, சம்பவத்தைப் காணொளியாக படம்பிடித்து உலகம் முழுவதும் ஒளிபரப்பியதாகக் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தனது கட்சிக்காரருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனை முழுமையாக ஆராய்ந்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறு சட்டத்தரணி நீதவானிடம் கோரினார்.

இந்த சம்பவம் குறித்து பதிலளித்த சிறைச்சாலை அதிகாரிகள், அந்த இளம் பெண்ணின் நண்பர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் வந்து அவருடன் பேச அனுமதி கோரியதால், வழக்கமான நடைமுறையின் கீழ் அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறினர்.

அதன்போது, அங்கு வந்த ஒருவர் பொத்தான் வடிவில் உள்ள ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி, அந்த இளம் பெண்ணுடன் நடந்த உரையாடல்களைப் பதிவு செய்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரைப் பார்க்க சிறைச்சாலைக்கு வரும் பார்வையாளர்கள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார், மேலும் அவரைப் பார்க்க வருபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

மேலும், சந்தேகநபரான பிரித்தானிய பெண்ணை ஜூன் 13 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் நீர்கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிகா பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

source: newswire

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...