இஸ்லாத்தில் சகவாழ்வு, மத நல்லிணக்கம், பொறுப்புணர்வு, மற்றும் நடுநிலைமை பேணல் என்ற அடிப்படைகளை மையமாகக் கொண்ட கல்விக் கருத்தரங்கின் இறுதிநாள் நிகழ்வுகள் வியாழனன்று (15) கொழும்பில் இடம்பெற்றன.
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார, தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சின் அனுசரனையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் மேற்பார்வையில் நடத்திய இந்தக் கல்விக் கருத்தரங்குகளின் இறுதி நாள் நிகழ்வில் சவூதி அரேபியத் தூதுவர் கௌரவ காலித் ஹமூத் அல்-கஹ்தானி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அவர் தனது உரையில், சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், தஃவா மற்றும் வழிகாட்டுதல் அமைச்சின் ஆதரவு மற்றும் அனுசரணையுடன், இலங்கையின் மத, கலாச்சார விவகார அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடனும், இலங்கை குடியரசில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் மேற்பார்வையின் கீழும், இலங்கை குடியரசில் நடைபெற்ற முதல் அடிப்படை அறிவு சார்ந்த பாடநெறியின் முடிவு நேரமான இந்த ஆசீர்வதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் .
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மற்றும் அவரது பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆகியோருக்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் சேவையில் அவர்கள் காட்டும் அக்கறை மற்றும் அனுசரணைக்காகவும், உலகம் முழுவதும் தஃவா மற்றும் வழிகாட்டுதல் திட்டங்களுக்கு அவர்கள் அளித்து வரும் தாராள உதவிகளுக்காகவும் எனது உயர்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களிடையே நடுநிலைத் தன்மையைப் பரப்புகின்ற, அமைதியான சகவாழ்வை ஊக்குவிக்கின்ற சவூதி ராஜ்ஜியத்தின் செய்தியைப் பிரதிபலிக்கும் வகையில் ஆழமான தாக்கம் செலுத்தக் கூடியதாக இந்த பாடத்திட்டத்தை ஒழுங்கமைப்பதில் வழங்கிய அன்பான வழிகாட்டுதல்களுக்காக இஸ்லாமிய விவகாரங்கள், தஃவா மற்றும் வழிகாட்டுதலின் கௌரவ அமைச்சர் டாக்டர் அப்துல்லதீப் பின் அப்துல் அஸீஸ் அஷ்ஷேக் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பாடநெறியின் ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கும் ஏற்பாடுகளுக்குமாக இலங்கை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துக்கும் நான் நன்றி கூற வேண்டும், இது இந்த நிகழ்வின் வெற்றியில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தியது.
இறுதியாக, புகழ்பெற்ற அறிஞர்கள், இஸ்லாமிய கல்லூரிகள், இஸ்லாமிய சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள், சன்மார்க்கப் போதகர்கள், மாணவர்கள் மற்றும் இந்த பாடநெறியில் கலந்து கொண்டு வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
இந்த முயற்சிகளை ஆசீர்வதிக்கவும், அனைவருக்கும் அதற்கான வெகுமதியை வழங்கவும், நமது இரு நட்பு நாடுகளுக்கும் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பலப்படுத்தவும், அல்லாஹ்வுக்கு விருப்பமான விடயங்களில் நமது மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்பவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை நான் பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்தார்.
இக்கல்விக் கருத்தரங்கின் அங்குரார்ப்பண அமர்வில் சவூதி அரேபியாவின் கலாசார அமைச்சின் ரியாத் பிரிவிற்குப் பொறுப்பாகவுள்ள முஹம்மத் பின் சுலைமான் அல் புரைஹ் சிறப்புரையாற்றியதோடு, இறுதிநாள் நிகழ்வில் முஹம்மட் பின்த் ஹசன் அல்-செஹ்ரி சிறப்புரையாற்றினார்.
விளையாட்டுத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் (14) புதன்கிழமை இரண்டு அமர்வுகளும் (15) வியாழக்கிழமை டவர் மண்டபத்தில் மேலும் இரண்டு அமர்வுகளுமாக இரண்டு நாட்களும் 4 அமர்வுகளாக இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் உட்பட திணைக்களத்தின் உயரதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் கொழும்பு வட பிராந்திய அரபுக் கல்லூரி பிரதிநிதிகள் உள்ளிட்ட 2000க்கு மேற்பட்ட உலமாக்கள், புத்திஜீவிகள், அரச உயர் அதிகாரிகள் அரபுக் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் உஸ்தாத்மார்கள், உயர் தர மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எனப் பலரும் நிகழ்வில் பங்குபற்றி இதன்மூலம் நன்மையடைந்தனர்.
இறுதிநாள் நிகழ்வில், சிறப்புரையாற்றிய முஹம்மட் பின்த் ஹசன் அல்-செஹ்ரி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்ள் திணைக்களத்தினால் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
சவூதி அரேபிய அரசின் பூரண அனுசரணையில் வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சவூதி அரேபிய மன்னருக்கும் மற்றும் சவூதி அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.