அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்படாமை முஸ்லிம் சமூகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது – முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசிய சூரா சபை எடுத்துரைப்பு

Date:

ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று கடந்த வாரம் (20) இடம்பெற்றது.

இந்தக்கலந்துரையாடலில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் உட்பட அனைத்து ஆளும் கட்சி முஸ்லிம் எம்.பி.க்களும் பங்கேற்றனர்.

தேசிய ஷூரா சபையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் தலைமையில் நடந்த இந்தச் சந்திப்பில் தேசிய ஷூரா சபையின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் 10 பேர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, தற்போதைய சமூக-அரசியல் சூழலில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகள் குறித்து எம்.பி.க்களுக்கு தெரிவிக்கப்பட்டதுடன் மனித உரிமைகள், சட்டவாக்கத் திருத்தங்கள் மற்றும் சிறுபான்மை நலன்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல முக்கிய தேசிய பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டன.

மேலும், நாட்டின் முக்கிய தீர்மானமெடுக்கக்கூடிய தேசிய அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள கவலைகளை ஷூரா சபை எடுத்துரைத்தது.

இந்தப் புறக்கணிப்பு சமூகத்திற்குள் தீவிரமான மற்றும் விமர்சன ரீதியான விவாதத்திற்குட்பட்டுள்ளதாகவும் நிர்வாகத்தினை விரிவாக்கி அதை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசரத் தேவையையும்   வலியுறுத்தினர்.

மேலும், தேசிய ஒற்றுக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்குமான முஸ்லிம் சமூகத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை தேசிய ஷூரா கவுன்சில் பிரதிநிதிகள் இங்கு மீண்டும் வலியுறுத்தினர்.

இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் தீவிரவாத, பிரிவினைவாத அல்லது பிளவுபடுத்தும் இயக்கங்களை ஆதரித்ததில்லை என்றும் ஆனாலும் முஸ்லிம் எதிர்ப்பு வகுப்புவாத மோதல்களுக்கு அடிக்கடி பலியாகியுள்ளனர் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கடந்த கால இன மோதல்கள் மற்றும் வெளியேற்றங்கள் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பங்கள் குறித்தும் அவர்கள் எடுத்துக் காட்டினர் .

ஒத்துழைப்புக்கும் தேசிய அபிவிருத்திக்குமான அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில்,  முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள முக்கிய பிரிவுகள் மற்றும் அமைப்புகளுடனான பரந்த உரையாடலொன்றுக்கான தனது விருப்பத்தையும் தேசிய ஷூரா சபை இந்தச் சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தியது.

ஜனநாயகரீதியானதும் பரஸ்பர உரையாடலை அடிப்படையாகக் கொண்டதுமான அணுகுமுறைகள் மூலம் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆர்வத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் தேசிய ஷூரா சபை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியது.

இந்தக் கலந்துரையாடல் சுமூகமாகவும், பயனுள்ளதாகவும் அமைந்ததாகவும், அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளை முன்வைக்கப்பதற்கு கிட்டிய இந்த வாய்ப்பு சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கலாம் என்று கருதுவதாகவும் தேசிய சூரா சபையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் தெரிவித்தார்.

தேசிய ஷூரா சபை கொள்கை வகுப்பாளர்களுடனும் பங்குதாரர்களுடனும் தொடர்ந்தும் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் ஒற்றுமை, நீதி மற்றும் விரிவான தேசிய அபிவிருத்தியை மேம்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் இந்தச் சந்திப்பின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...