விஷன் 2030 திட்டத்திற்கு அமைவாக, சவூதி அரேபியா டிஜிட்டல் மற்றும் தொழிநுட்ப துறைகளில் தொடர்ந்தும் பல விதமான வியத்தகு முன்னேற்றங்களை கண்டு வருகிறது.
இந்த நவீன டிஜிட்டல் நுட்பங்கள் ஆண்டு தோறும் ஹஜ் மற்றும் உம்ரா பயணங்களை இலகுபடுத்தி யாத்திரிகர்களுக்கு புதியதொரு அனுபவத்தை வழங்கவும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த ஆண்டினை பொருத்தமட்டில் புனித ஹஜ் யாத்திரைக்காக, உலகம் முழுவதிலும் இருந்து வரும் கோடிக்கணக்கான யாத்திரிகர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, மேம்பட்ட டிஜிட்டல் கருவிகள், நவீன உட்கட்டமைப்புகள் மற்றும் டிஜிட்டல் சேவை வழங்கிகள் என்பன முன்னைய வருடங்களை விட அதிகமாகவும் புதிதாகவும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
முக்கியமான இந்த முயற்சிகளில் ஒன்றாக “Road to Makkah” என்ற திட்டத்தின் விரிவாக்கம் அமைகிறது.
இந்த திட்டமானது பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் பிற நாடுகளிலிருந்து வரும் யாத்திரிகர்களுக்கான குடிவரவுச் செயன்முறைகளை எளிமைப்படுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் மூலம், யாத்திரிகர்கள் தங்கள் புறப்படும் நாட்டிலேயே விசா மற்றும் குடியேற்றச் செயல்முறைகளை முடித்துக் கொள்ள முடியுமாக உள்ளது, இதனால் சவூதி அரேபியாவில் அவர்கள் வருகை சீரானதாகவும் சிரமமின்றியதாகவும் அமைகிறது.
இந்த முயற்சியை மேலும் இலகுபடுத்தி சீர்படுத்தும் வகையில், சவூதியின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட “NUSUK” தளமும் செயல்படுகிறது. இது ஒருங்கிணைந்த டிஜிட்டல் சூழலைக் கொண்ட ஒரு தளமாகும். 120 க்கும் மேற்பட்ட சேவைகள் — e விசா, தங்குமிடங்களுக்கான ஏற்பாடு முதல் நேரடி வழிகாட்டல் வரை அனைத்தையும் இந்த தளம் வழங்குகிறது.
இது யாத்திரிகர்கள் தங்கள் பயணத்தை திட்டமிடும் தருணத்திலிருந்தே முழுமையான ஆதரவை வழங்க கூடியதாக அமைகிறது.
சனத்திரளின் சீரான பாதுகாப்பையும் நகர்வையும் உறுதிப்படுத்து வதற்காக, சவூதி தரவுத் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையமான SDAIA, “Baseer” மற்றும் “Sawaher” போன்ற மேம்பட்ட தளங்களை நிறுவியுள்ளது.
செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் இந்த அமைப்புகள், யாத்திரிகர்களின் அசைவுகளையும், நகர்வுகளையும் கண்காணித்து பகுப்பாய்வு செய்கின்றன அத்தோடு அதிக நெரிசல் ஏற்படும் இடங்கள் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகளை எச்சரிக்கின்றன. குறிப்பாக தவாப் மற்றும் ஸஈ போன்ற கிரியைகளில் அதிக கூட்டம் நிறைகின்ற நேரங்களில் கூட்டத்தை கண்கானித்து சீர்படுத்தவும் இது உதவுகிறது.
“Banan” போன்ற உயிரணு விபர சான்றிதழ் கருவிகளால் யாத்திரிகர்கள் சுலபமான முறையில் சேவைகளை அணுகவும் பயணத்தை இலகுவாக முடித்துக்கொள்ளவும் முடிகிறது. மிக முக்கியமாக இது சேவைகளுக்கான பாதுகாப்பான அணுகலை உறுதிப்படுத்துகிறது.
அத்தோடு, Nusuk தளத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பட்டிகள் மற்றும் அடையாள அட்டைகள், யாத்திரிகர்களின் இருப்பிடங்களை கண்காணிக்கின்றன, அவசர நிலைகளில் உதவுகின்றன, மேலும் புனித தளங்களில் அவசியமான வழிகாட்டல்களையும் வழங்குகின்றன.
பாரம்பரியத்தினதும் உயர் தொழில்நுட்பத்தினதும் சிறந்த சங்கமமாக, சவூதி அரேபிய அரசு மஸ்ஜித் அல் ஹராம் மற்றும் மினா பகுதியில் பல மொழிகளில் பேசக்கூடிய ரோபோக்களை அமைத்து வைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இந்நவீன ரோபோக்கள் மதரீதியான வழிகாட்டுதலை வழங்குவதோடு பல மொழிகளில் கேள்விகளுக்கு பதிலும் அளிக்கின்றன. அத்தோடு மாற்றுத்திறனாளி யாத்திரிகர்களுக்கு உதவியாகச் ஆதரவாக செயல்படுகின்றன.
சவூதி அரேபியா சுற்றுச்சூழல்மேன்மையைக் கருத்தில் கொண்டு உட்கட்டமைப்பு மேம்பாடுகளிலும் முதலீடு செய்துள்ளது.
அதில் மிக முக்கியமான சேவையான ஹரமைன் அதிவேக ரயில், ஜித்தா, மக்கா மற்றும் மதீனா பயணத்தை சுருக்கி இரண்டு மணிநேரத்திற்குள் இணைக்கின்றது. மேலும் ஹஜ் சீசனில் அதன் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நுழைவுப் பகுதிகளில் வான் வழி டாக்ஸிகளும் சுய இயக்க ஷட்டில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இது போக்குவரத்துத் துறையில் ஓர் புரட்சிகர முக்கிய கட்டமாகும்.
மின்சார பேருந்துகள், சூரிய சக்தியால் இயக்கப்படும் குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் உக்கக் கூடிய உணவுப் பொருள் பொதிகள் என ஹஜ்ஜின் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் விரிவான திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள், நகர்ப்புற அபிவிருத்திக்கும் சூழல் மேம்பாட் டுக்குமான சவூதி அரேபியாவின் பசுமை முன்முயற்சியுடன் (Green Initiative) இணைந்ததாகச் செயல்படுகின்றன.
ஹஜ் காலங்களில் யாத்திரிகர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது சவூதி அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாகவே உள்ளது. கட்டாய தடுப்பூசிகள், வருகை மையங்களில் சுகாதார பரிசோதனைகள், மற்றும் ஹஜ் களங்களில் தற்காலிக மருத்துவமனைகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களின் சுகாதார ரீதியான ஆபத்துகளை குறைக்க உதவியுகின்றன.
இந்த முயற்சியில் முன்னேற்றமிக்க ஒரு புதிய கட்டமாக, முக்கிய இடங்களில் தொலைமருத்துவ ரோபோக்கள் (telemedicine robots) தற்போது செயல்படுகின்றன. இவை உடனடி மருத்துவ ஆலோசனைகளை வழங்கி, உடல் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை நிவர்த்தி செய்கின்றன.
நோய் அறிகுறிகளைக் கண்கானித்து, நோய் பரவல்களின் சாத்தியப்பாட்டை முன்கூட்டியே கண்டறிகின்ற செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நவீன கண்காணிப்பு முறைகள், ஹஜ் பருவத்தின் தீவிரமான சமயங்களில் விரைவான பதிலளிக்கக் கூடிய திறனும் தாக்குப் பிடிக்கும் வல்லமையும் கொண்ட ஒரு சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்குகின்றன.
இந்த ஏற்பாடுகளுக்கு , சவூதி அரேபியா 40க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வரலாற்றுத் தளங்களுக்குப் புத்துயிர் ஊட்டியுள்ளதோடு இஸ்லாமிய பாரம்பரியத்தைப் பற்றிய ஆழமான அறிவை யாத்ரீகர்களுக்கு வழங்குவதற்காக நடமாடும் அருங்காட்சியகங்களைத் தொடங்கியுள்ளது.
இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உடல் ரீதியாகவும், ஏற்பாடுகள் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் ஹஜ் 2025 புனித பயணத்தை மனித நேயம் மிக்கதாக வளப்படுத்தும் சவுதி அரேபியாவின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக அமைகிறது. .
ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் மாண்புமிகு தவ்ஃபிக் அல்-ரபியா குறிப்பிட்டது போல், “நாங்கள் இறைவனின் விருந்தினர்களை வரவேற்பது மட்டுமன்றி அன்பு. செயல்பாடுகள் மற்றும் புதுமை மூலம் அவர்களின் அனுபவத்தை மேம்படுத்துகிறோம். இது தான் அனைத்தையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் ஆன்மீக ரீதியாக ஆழமான ஹஜ்ஜுடைய எதிர்காலம்.”
எழுத்து- காலித் ரிஸ்வான்