உழ்ஹிய்யா தொடர்பான தேசிய ஷூறா சபையின் சட்ட மற்றும் நடைமுறை வழிகாட்டல்

Date:

உழ்ஹிய்யா தொடர்பான தேசிய ஷூரா சபையின் வழிகாட்டல்கள்

“குர்பானியின் ஒட்டகத்தை (கால்நடையை) அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்கு பெரும் நன்மை இருக்கிறது.” (அல்குர்ஆன் 22:36)

இந்த அல்-குர்ஆன் வசனம் உழ்ஹிய்யாவின் முக்கியத்துவத்தையும் அது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்று என்பதையும் உணர்த்துகின்றது.

“நிச்சயமாக அல்லாஹ், செய்வனவற்றை திருந்தச் செய்யும்படி பணித்திருக்கின்றான்” _(ஸஹீஹ் முஸ்லிம்) இந்நபிமொழி இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான ‘அல்-இஹ்ஸான்’ (செய்வதைச் சிறப்பாக, உரிய முறையில் செய்தல்) என்ற கருத்தை விளக்குகின்றது.

அதற்கு உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் குர்பான் கொடுப்பதைக் குறிப்பிடுகின்றார்கள். “நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங் கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்!

(விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள்” என்று நபி(ஸல்) அவ ர்கள் கூறினார்கள்.

மிருகத்தை அறுக்கும்போது முறையாக அறுக்க வேண்டும்; கத்தியை கூர்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்; அறுக்கும் மிருகத்தின் கஷ்டத்தை எளிதாக்க வேண்டும் என்றெல்லாம் நபியவர்கள் இங்கு விளக்கம் சொல்கின்றார்கள்.

உழ்ஹிய்யா என்பது அதற்கு சக்தி பெற்றவர்கள் மேற்கொள்ளும் ஒரு வணக்கமாகும். ஹஜ்ஜுப் பெருநாள் தினத்திலும் அதற்கடுத்து வரும் அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் மூன்று நாட்களிலும் இதனை வழங்குவது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையாகும்.

அந்த வகையில் பல்லினங்களும் பல்சமயங்களும் உள்ள ஒரு தேசத்தில் வாழும் இலங்கைவாழ் முஸ்லிம்கள் இச்சிறப்பான மார்க்க அனுஷ்டானத்தை நிறைவேற்றும் போது பின்வரும் வழிகாட்டல்களை கவனத்திற்கொள்ளுமாறு தேசிய சூரா சபை கேட்டுக் கொள்கிறது.

01. உழ்ஹிய்யா தொடர்பான மார்க்க சட்ட திட்டங்களை உலமாக்களை அணுகி அறிந்து கொள்ளுதல்.

02. உழ்ஹிய்யாவை நாட்டின் சட்டவிதிமுறைகளையும் மாற்று மத சமூகங்களின் சமய உணர்வுகளையும் சமூக மரபுகளையும் மதித்து பொறுப்புணர்வுடன் நிறைவேற்றல்.

03. ஆடு, மாடுகளைக் கொள்வனவு செய்தல் – எடுத்துச் செல்லல் தொடர்பாக பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளல்:

கிராம உத்தியோகத்தரினால் (GS) விலங்கின் உரிமை அத்தாட்சிப்படுத்தப்படல்.

மிருக வைத்தியரிடமிருந்து (Veterinary Surgeon) விலங்கின் உரிமைக்கான சான்றிதழ், கால்நடை விபரச்சீட்டு (Cattle Voucher), சுகாதார அத்தாட்சிப் பத்திரம் (Health Certificate) என்பவற்றைப் பெற்றுக்கொள்ளல்.

விலங்குகளை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை (Transport Permit) பிரதேச செயலகத்தில் (DS Office) பெற்றுக்கொள்ளல்.

விலங்குகளை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அரசாங்க வர்த்தமானியின் படி விலங்குகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை பேணப்படல். (இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானிப் பத்திரிகை (அதி ) 2. 1629/17 – 2009.11.26)

ஆடு, மாடு ஆகியவற்றை உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியுமாக இருந்தாலும் பசு, காளை போன்ற விலங்குகள் சில மதங்களில் புனிதமாகக் கருதப்படுவதால் ஆடுகளை குர்பானிக்காக தெரிவு செய்வது விரும்பத்தக்கதாகும்.

04. குர்பான் நிறைவேற்றப்படும் இடம் மற்றும் முறை

குர்பானி விலங்குகளை பொதுமக்களுக்குத் தென்படும் வகையில் பாதையோரங்களில், பொது இடங்களில் கட்டி வைப்பதை முற்றாகத் தவிர்த்தல்.

குர்பான் செய்வதற்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை முன்கூட்டியே தீர்மானித்தல். உழ்ஹிய்யா செய்யப்படும் இடம் பொதுமக்கள் காணக் கூடிய இடமாக இல்லாமல், அவர்களின் பார்வையிலிருந்து ஒதுக்கமான இட த்தில் அந்த அனுஷ்டானத்தை நிறைவேற்றுவது மிகவும் அவசியமாகும்.

தத்தமது மஹல்லாக்களை மையப்படுத்தி பிரதேச சூழலுக்கு ஏற்ப பொது மஷூறாவின் அடிப்படையில் உழ்ஹிய்யா விடயங்களை முன்னெடுத்தல்.

உழ்ஹிய்யா நிறைவேற்றுவதன் மார்க்க ஒழுங்குமுறைகளைப் பேணி நடத்தல்.

மிருக வைத்தியர்கள் மற்றும் உள்ளுராட்சி சபையின் உரிய அதிகாரிகள் உழ்ஹிய்யா செய்யும் இடத்தைப் பார்வையிட அனுமதித்தல்.

05. சுத்தம் மற்றும் ஒழுங்குகளைப் பேணுதல்.

குர்பான் செய்யப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை (எலும்பு, கால், இரத்தம், சாணம், தோல் என்பவற்றை) மிகவும் பொறுப்புணர்வுடன், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், உரிய முறையில் அகற்றுதல் அல்லது பூமியின் ஆழத்தில் புதைத்தல்.

குறிப்பாக மேற்சொன்ன இரு விடயங்களிலும் அரசு விதிமுறைகள், அனுமதிகள், சுகாதார சட்டங்கள் ஆகியவற்றின் படி செயல்படல்.

06. குர்பான் பங்கீடு செய்யும் போது பின்வரும் விடயங்களைப் பேணி நடத்தல்:

குர்பான் பங்கீட்டின்போது ஒழுங்கு முறைப்படியும், சாணக்கியமாகவும் நடந்து கொள்ளல்.

ஒரே ஊரில், பிரதேசத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தரப்பினர் கூட்டாகவோ தனித்தனியாகவோ குர்பான் பங்கீட்டில் ஈடுபடும் பட்சத்தில் பொருத்தமான முறையில் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல்.

இம்முறை உழ்ஹிய்யா வழங்கப்படும் காலப்பகுதியில் போயா தினம் (June -10) வருவதன் காரணத்தால் அந்நாளின் உழ்ஹிய்யா கொடுப்பதையும், பங்கிடுவதையும், வாகனங்களில் வெளியூர்களுக்கு அனுப்புவதையும் முற்றாகத் தவிர்த்துக் கொள்ளல்.

07. உழ்ஹிய்யா விடயத்தில் ஜீவகாருண்யத்தைப் பற்றியும் அயலவர்களது உணர்வுகளை மதித்து நடப்பது குறித்தும் வந்துள்ள இஸ்லாத்தின் வழிகாட்டல்களை கவனத்திற் கொள்ளல்.

08. மாமிசம் சாப்பிடாத அல்லது அவற்றை உணவுக்காக அறுப்பதனை விரும்பாத சகோதர சமூகங்களது சமய உணர்வுகள் மற்றும் சமூக மரபுகளை மதித்து புத்தி சாதுரியமாக, சுய கட்டுக்கோப்புடன் நடந்து கொள்ளல்.

09. உழ்ஹிய்யா தொடர்பான விளம்பரங்கள், செய்திகள் மற்றும் புகைப்படங்களை பொது ஊடகங்களில், இடங்களில் பிரசுரிப்பதைத் தவிர்த்துக் கொள்ளல்.

தனித்தனியாகவும் கூட்டாகவும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றக்கூடிய அனைவரும் மேற்குறிப்பிடப்பட்ட நடைமுறைப்படுத்துவோமாக. வழிகாட்டல்களைக் கருத்திற் கொண்டு

நபி(ஸல்) அவர்கள்,’நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்யும் ஒரு வேலையை நேர்த்தியாகச் செய்வதை விரும்புகின்றான்’ (தபறானி) கூறினார்கள்.

எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் புரிந்துணர்வையும் அபிவிருத்தியையும் தரக்கூடிய ஒரு நாளாக அமையட்டும்!

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...