அஷ்.எச். அப்துன் நாஸிர் (ரஹ்மானி)
பணிப்பாளர்,
அப்துல் மஜீத் அகடமி
புத்தளம்.
திடீர் திடீரென வந்து சேரும் மரணச் செய்திகள் மேனியெங்கும் மின்னதிர்வைத் தருகின்றன. சிலரது மரண அறிவிப்புகள் பல ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கவைக்கின்றன, பழைய ஞாபகங்களைக் கிண்டிக்கிளறிவிடுகின்றன.
ஆட்களின் வித்தியாசத்துக்கேற்ப நினைவுகளும் வித்தியாசப்படுகின்றன. மறைந்துவிட்டதை எண்ணும்போது வியாகூலத்தில் தோய்ந்துபோகிறோம்.
நினைவுகளில் நீந்தும்போது அவர் இன்னும் நம்மருகே இருப்பது போல உணர்கிறோம். நேற்றைய முன்தினம் 2025.05.12 திங்களன்று பூவுலகிலிருந்து விடைபெற்றுக்கொண்ட மவ்லவி எம்.எச்.எம். லாபிர் (கபூரி) அவர்களின் மறைவு தொடர்ந்து இரண்டு தினங்களாக எனக்குள் இப்படித்தான் வேலைசெய்கிறது.
1990களின் பின்னரைப் பகுதியிலிருந்து எனக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவுக்குமிடையிலான உத்தியோகபூர்வ இணைப்பு துவங்குகிறது.
நிறைவேற்றுக் குழுவில் பொறுப்புக்கள் சுமந்துள்ளேன். நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் அனைவரிலும் வயது குறைந்தவனாக இருந்தேன். இக்காலப் பகுதியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழியாக எனக்கு அறிமுகமான முகங்கள் பல.
மவ்லவி எம்.எச்.எம். லாபிர் அவர்களும் இப்படியான வதனங்களுள் ஒன்று. எம்மிருவருக்குமிடையிலான உறவு 2003இல் நான் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் இன்னும் வலுப்பெற்றது.
மவ்லவி லாபிர் அவர்கள் என்னைக் காணுந்தோறும் ஏதோ ஒரு சமய அல்லது கல்வி அல்லது சமூக விடயமொன்றைக் கையிலெடுத்துக்கொள்வார். பிறகென்ன அது பற்றி விரிவாக பேசுவார்.
இதன்போதெல்லாம் அவர் இந்த சமூகத்தை எவ்வளவு நேசிக்கிறார், அதன் சன்மார்க்கக் கல்வியில் அவர் எந்தளவு ஆர்வம் கொண்டுள்ளார், அதை ஊட்டுகின்ற ஆசிரியர்கள் மீது எவ்வளவு கரிசனை காட்டுகிறார், ஆலிம்கள் மீது அவர் எந்தளவு மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார் என்பதை நான் அவதானிக்க முடியுமாகவிருந்தது.
மவ்லவி லாபிர் அவர்கள் பல்வேறு தளங்களில் பணியாற்றியவர். மஸ்ஜித், பாடசாலை, அஹதிய்யஹ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, காதிச் சேவை, தேசிய கல்வி நிறுவகம், கல்வி அமைச்சு, இலங்கை வானொலி முஸ்லிம் சேவை என அன்னார் விறுவிறுப்பாக செயல்பட்டு சேவைபுரிந்த தளங்கள் அகன்று விரிகின்றன.
எல்லா நன்மைகளையும் ஒருசேர அள்ளிக்கொண்டு அவனிக்கு அன்னார் நேற்றைய முன்தினம் விடைகொடுத்துள்ளார்.
மௌலவி லாபிர் அவர்களை நிரந்தரமாக நினைக்கவைக்கும் தொண்டுகள் பல அன்னார் பணிபுரிந்த தளங்களில் தடயங்களாக உள்ளன. அவற்றுள் அடியேன் இத்தருணத்தில் உரிமையோடு நினைத்துப்பார்க்க முயல்வது அவர் தந்த ‘கம்பஹா மாவட்டம் தந்த உலமா பெருந்தகைகள்’ எனும் நூலாகும்.
கம்பஹா மாவட்டம் ஈன்றளித்த மூத்த ஆலிம்களை சரித்திரப்படுத்தி உலகறியச்செய்துள்ளார். இந்தக் கைங்கர்யத்துக்காக மவ்லவி லாபிர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த நூலுக்கு எனது பாராட்டுரை வேண்டுமென அவர் கேட்ட சமயம் உள்ளம் நிறைந்த உவகையுடன் எழுதிக்கொடுத்தேன்.
அது அவருக்கு ஆனந்தமளித்தது. தொடர்ந்து அதன் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார். அதில் விசேட உரை நிகழ்த்த வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டார்.
2004இல் அவரது ஊர் மல்வானையில் நூல் வெளியீடு வெகு விமரிசையாக நடைபெற்றது. நானும் பங்கேற்றேன், உரையாற்றினேன். இவை யாவும் மௌலவி லாபிர் அவர்களுக்கு பெரும் பூரிப்பைக் கொடுத்தன.
இன்றைய நாட்களில் அவர் இல்லாத வேளையில் அந்த நாட்களை அமைதியாக அமர்ந்து அசைபோடுகிறேன். யாவும் இனிய, பசிய நினைவுகள்.
எம் நெஞ்சங்களுக்கு நெருக்கமான சன்மார்க்க அறிஞர் மவ்லவி லாபிர் அவர்களின் பணிகளை ஞாபகிக்க, அவற்றை இளைய தலைமுறை முன்மாதிரியாகக்கொள்ள ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியைக் காலம் தாழ்த்தாது ஒழுங்குசெய்வது நலம்.
அவரின் இயங்கு தளங்களோடு ஒட்டியிருப்போர் இதனைச் செய்யலாம். அது அன்னாருக்கான நன்றியறிதலாகவும் இருக்குமல்லவா.
மவ்லவி லாபிர் அவர்களின் பிரிவுத் துயரால் வாடுகின்ற உற்றத்தார் சுற்றத்தார் எல்லோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவருக்கும் அவர்களுக்கும் என் துஆக்கள்.
மவ்லவி லாபிர் அவர்களை அல்லாஹ் தஆலா ஏற்றருள்வானாக! அவரை மன்னித்து மணமாக்குவானாக! அவரின் நற்கிரியைகள், நற்பணிகளை அங்கீகரித்து அதி உயர்ந்த நற்கூலிகளை நல்குவானாக! அவரை ஜன்னத் அல்-பிர்தவ்ஸில் சேர்ப்பானாக!
அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்
1446.11.15
2025.05.14