2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் செலவுகள் தொடர்பான விபரத்திரட்டை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் தொடர்பான விபரம் பொலிஸ்மா அதிபருக்கு புதன்கிழமை (28) சமர்ப்பிக்கப்படும்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தமது உறுப்பினர் பட்டியல் விபரங்களை இதுவரையில் முழுமையாக சமர்ப்பிக்காத காரணத்தால் உறுப்பினர் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிப்பதில் ஆணைக்குழு சிக்கல் நிலையை எதிர்கொண்டுள்ளது.
ஆகவே 30 ஆம் திகதிக்குள் பெண் பிரதிநிதித்துவம் மற்றும் உறுப்பினர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு வர்த்தமானி பிரசுரம் ஊடாக அறிவுறுத்தியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.
தேர்தல் செலவினங்களை சமர்ப்பிப்பதற்கு சட்டத்தின் பிரகாரம் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம்.
ஆகவே குறித்த காலப்பகுதிக்குள் செலவின விபரங்களை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் உறுப்பினர்களது விபரங்களை பொலிஸ்மா அதிபரிடம் இன்றைய தினம் ஒப்படைப்போம்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பொலிஸார் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.