துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் திங்களன்று பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
தொலைபேசி உரையாடல் மூலம் பேசிய துருக்கி ஜனாதிபதி அர்தூகான் ட்ரம்பை நாட்டுக்கு வருகை தருமாறு அழைத்தார்.
ட்ரம்பிடம் பாதுகாப்புத் துறைத் துறையில், வாஷிங்டனுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு துருக்கி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.
காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும், காசாவில் மனிதாபிமான நெருக்கடி ‘மோசமான நிலையை’ எட்டியுள்ளது, உதவி வழங்குவதற்கும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கும் துருக்கியின் தயார்நிலையை அர்தூகான் ட்ரம்பிடம் வெளிப்படுத்தினார்.
போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் அணுகுமுறைக்கு ஆதரவை வெளிப்படுத்திய அர்தூகான், ஈரானுடனான பேச்சுவார்த்தை செயல்முறையிலும் ரஷ்யா-உக்ரைன் போரை தீர்ப்பதிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை துருக்கி பாராட்டுவதாகக் கூறினார்.
சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் அதன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் துருக்கி பாடுபடுவதாக அர்தூகான் மேலும் கூறினார். இந்த செயல்முறைக்கு பங்களிக்க சிரியா மீதான தடைகளை தளர்த்துவதற்கான அமெரிக்க முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.