“அன்பு என்பது ஒருவர் மற்றவர் மீது அதிகாரம் செலுத்துவது பற்றியது அல்ல – அது கண்ணியம், சமத்துவம், வன்முறையின்மை மற்றும் பரஸ்பர மரியாதை பற்றியது.” என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பாலின சமத்துவம் மற்றும் ஒப்புரவு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் பிரபா மனுரத்ன குறிப்பிட்டார்.
SRHR மற்றும் இணையவழி பாலின அடிப்படையிலான வன்முறை குறித்த ELEVATE திரைப்பட விழாவில் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.
பேராசிரியர் மனுரத்ன மேலும் கூறுகையில், பாலின வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், அனைத்து மாணவர்களுக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகளை (SRHR) மேம்படுத்துவதற்கும், அமைதியான கற்றல் சூழலை உருவாக்குவதற்கும் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொள்வதும் மதிப்பதும் முக்கிய பண்புகளாகும் என்றார்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பெண் இளங்கலை மாணவியர் தயாரித்த, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் (SRHR) மற்றும் இணையவழி பாலின அடிப்படையிலான வன்முறையைத் (CGBV) தடுப்பது தொடர்பான 10 குறும்படங்களின் திரையிடல் அண்மையில் நடைபெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகமும் பாலின சமத்துவம் மற்றும் ஒப்புரவு மையத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் கலாநிதி ஏ.டபிள்யூ.என். நளீபா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
பதில் துணைவேந்தர் கலாநிதி யூ. எல். ஏ. மஜீத் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்தத் திரையிடல், இளங்கலை மாணவர்களுடன் தொடர்புடைய SRHR மற்றும் CGBV பிரச்சினைகள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்கு வித்திட்டது.
இந்த நிகழ்வின் போது, பேராசிரியர் மனுரத்ன பல்கலைக்கழக உறவுகளில் வன்முறை கலாச்சாரம் நிலவுவதையும், பன்முகத்தன்மையின் அழகை உணர்ந்து அதை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மாணவர்கள் மத்தியில் நிலவும் பல்வேறு பின்னணிகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் சுட்டிக்காட்டிய அவர், வேறுபாடுகளைக் கொண்டாடுவது முக்கியம் என்றும், ஒருவரையொருவர் மரியாதை, சகிப்புத்தன்மை மற்றும் புரிதலுடன் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் வன்முறை மற்றும் கட்டுப்பாடு மூலம் மற்றவர்களைக் கட்டுப்படுத்துவது தவறானது என்றும், ஆரோக்கியமான உறவுகளுக்கு பரஸ்பர மரியாதை அவசியம் என்றும் சுட்டிக்காட்டிய அவர், பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பன்முகத்தன்மையை மதிக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ELEVATE திட்டத்தின் ஒரு பகுதியாக SRHR குறித்த திரைப்பட திரையிடலில் சுமார் 400 பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
10 திரைப்படங்களின் திரையிடலைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் மூத்த கல்வியாளர்கள் திரைப்படங்களின் பின்னணியில் உள்ள முக்கிய பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகள் குறித்து கருத்துரைத்தனர்.
சமூகவியல் பேராசிரியரும் சமூகவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ். எம். ஐயூப் கலந்துகொண்டு பேசுகையில், “பெண்கள் பெரும்பாலும் பலவீனமான பாலினமாக முத்திரை குத்தப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் எந்த பாலின அடையாளத்தைக் கொண்டவர்களைப் போலவே சக்திவாய்ந்தவர்கள்” என்றார்.
மேலும், டிஜிட்டல் உலகம் எண்ணற்ற கல்வி வாய்ப்புகளை வழங்கினாலும், அது பெண்களுக்கு சவால்களை தோற்றுவித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாலியல் அல்லது பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முகங்கொடுக்காமல் டிஜிட்டல் வெளியில் எவ்வாறு பாதுகாப்பாக முன்னோக்கிச் செல்வது என்பதைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை மற்றும் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்திற்கான மையத்தினைச் சேர்ந்த கலாநிதி ஏ.டபிள்யூ.என். நளீபா, ELEVATE திட்டத்தில் உள்ள 10 திரைப்படங்களும் இளம் இளங்கலை மாணவர்களின் வாழ்க்கையுடன் எவ்வளவு பொருத்தமானவை என்பதை கலந்துரையாடினார்.
அவர் மேலும் கூறுகையில், பெண்கள் பொதுவெளியில் எதிர்கொள்ளும் களங்கம், தவறான கருத்துக்கள் மற்றும் சந்தேகம் போன்ற சவால்களைக் களைந்து, அவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு தனிநபரையும் மதித்து, அவர்கள் சுதந்திரமாகத் தங்களை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உறவுகளில், தனிநபர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவற்றுக்கு ஆம் என்றும், வன்முறை அல்லது கட்டுப்பாடு உட்பட ஏற்றுக்கொள்ள முடியாதவற்றுக்கு இல்லை என்றும் சொல்லும் தைரியத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். பாலினத்தின் அடிப்படையில் யாரும் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் இல்லை என்றும் டாக்டர் நளீபா குறிப்பிட்டார்.
ELEVATE திரைப்பட விழாவில், வரலாற்றுத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் எஸ். அனுஷ்யா, இளைஞர்களிடையே பாலியல் கல்வியை மரியாதையுடனும், பாரபட்சமின்றியும் அணுகுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பாதுகாப்பான பாலியல் கல்வி பாடசாலைகளில் இருந்தே தொடங்க வேண்டும் என்றும், இளைஞர்கள் பல்கலைக்கழகத்தை அடையும் போது, அவர்களுக்கு பாலியல் மற்றும் பாலினம் பற்றிய தெளிவான புரிதல் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
8,256 மாணவர்களைக் கொண்டுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகம், அங்குள்ள அனைத்து மாணவர்களுடனும் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துகிறது என கலாநிதி ஏ.எல்.எம். ஐயூப்கான் குறிப்பிட்டார்.
கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவர் ஒருவர், பாலியல், மாதவிடாய் மற்றும் உறவுகள் போன்ற தலைப்புகள் பெரும்பாலும் வெட்கக்கேடானதாக பார்க்கப்படுகின்றன. ஆனால் இந்த விடயங்களைப் புரிந்துகொள்வதில் எந்த வெட்கமும் இல்லை என்பதால், நாம் அவற்றைப் பற்றி வெளிப்படையாக கலந்துரையாட தைரியம் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ELEVATE திட்டத்திற்காக SRHR பற்றிய 25 திரைப்படங்களைத் தயாரிக்க iPhone களை வழங்கிய Futureworld நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரமே டி சில்வா, இந்த நிகழ்வில் உரையாற்றுகையில், Futureworld ஒரு பெருநிறுவன பின்னணியில் இருந்து வந்தாலும், ELEVATE திட்டத்தில் மாணவிகளால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள், கல்வி அமைப்புகளில் இளைஞர்களின் வளர்ச்சி குறித்த தமது சிந்தனையை மாற்றியமைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த அனுபவம் தமது நிறுவனத்திற்குள் ஒரு மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது என்றும், இப்போது நிறுவனம் சிறந்த எதிர்காலத்திற்காக இளைஞர்களுக்கு ஆதரவு வழங்க உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.