யூதர்களே இல்லாத ஒரு நாட்டில் எங்களுக்கு சபாத் வழிபாட்டுத் தளங்கள். இவை வெறும் வழிபாட்டுத் தளங்கள் அல்ல, அவை குறிப்பாக வலதுசாரி தீவிர சியோனிச மதப் பிரிவுக்கானவை.
இவற்றுக்கு இலங்கை அரசால் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? என கலாநிதி தயான் ஜயதிலக்க கேள்வி எழுப்பினார்.
ஜே. ஆர். ஜயவர்தன கலாசார நிலையத்தில் நேற்று (20) நடைபெற்ற அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வில் கலந்து கொண்டு பிரதான உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தனது உரையில், இலங்கையில் எங்களுக்கு இருதரப்பையும் சார்ந்த கொள்கையே இருந்தது. அது வலதுசாரியாக இருந்தாலும் சரி, இடதுசாரியாக இருந்தாலும் சரி. அப்போது பண்டாரநாயக்க அம்மணி இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தார். .
இப்போதும் எங்களுக்கு இந்த இருதரப்பையும் சார்ந்த கொள்கை இருக்கிறது. ஆனால் இலங்கை இப்போது காசாவில் ஏறக்குறைய ஒரு இனப்படுகொலையில் ஈடுபட்டிருக்கின்ற IDF வீரர்களுக்கான ஓய்வுக்கும் பொழுதுபோக்குக்குமான இடமாக மாறியுள்ளது, அருகம்பேயில் உள்ள இலங்கையின் இளம் நீர்ச்சறுக்கல்காரர்கள் இது கிட்டத்தட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக மாறியிருக்கிறது என்று எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
மேலும், சிரியாவில் நடந்த போரில் தங்கள் தோழர்களில் ஒருவர் கொல்லப்பட்ட பிறகு, சில IDF வீரர்கள் பரிகாரத்துக்காக எப்படி இலங்கைக்கு வந்தார்கள் என்பது பற்றி அருகம்பே என்ற பெயரில் விருது பெற்ற திரைப்படம் கூட உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் மனுஷா நாணயக்கார ஆகியோரின் முந்தைய நிர்வாகத்தின் கீழ் இலங்கை அப்படித்தான் மாறிவிட்டது என்று நான் சொல்ல வேண்டும்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தின் தற்போதைய அரசாங்கமும் இதனைத் தொடர்கிறது.
நான் ஒரு ஜனநாயகவாதி. 70கள் மற்றும் 80களில் நாம் இருந்த விதத்திற்கு நாம் திரும்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த விடயத்தில் அரசியல்வாதிகள், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் பேசுவதில்லை. பாராளுமன்றத்திலும் அவர்கள் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள்.
முந்தைய தசாப்தங்களில், அப்போதிருந்த முக்கிய அரசியல் கட்சிகள் பாலஸ்தீன் தொடர்பில் நிலைப்பாடுகளை எடுப்பதற்கு ஜனநாயக முஸ்லிம் தலைமைகளின் அழுத்தமும் வாக்காளர்களின் கருத்தைத் திரட்டிக் கொடுத்தமையும் உதவியது. ஆனால் இன்று, அதில் எதையும் நாம் காணவில்லை. அமைதியே நிலவுகிறது.
இலங்கை மரபாகப் பேணி வரும் பாலஸ்தீனுடனான நட்புறவு கைவிடப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், காசாவின் பாலஸ்தீன மக்கள் வேதனைப்படும் இந்த நேரத்தில் சக மனிதர்களாக நமது கடமையைச் செய்வதற்கும் முஸ்லிம் சமூகத்திற்குள்ளிருந்து , பிரதான நீரோட்டத்திலுள்ள அரசியல் கட்சிகள், தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் கெஞ்சிக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் சபாநாயகரும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகத் தலைவருமான தேசமான்ய எம் ஏ பாக்கிர் மாக்கார் பற்றிய நினைவுகளை முன்வைத்தார்.
தேசமான்ய பாக்கிர் மாக்கார் பற்றி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட உரைகளை உள்ளடக்கிய ஹேரஸ் பெர்னாண்டோவினால் தொகுக்கப்பட்ட நூலொன்றும் அன்றைய தினம் வெளியிடப்பட்டது.
நிகழ்வின் தலைமை உரையையும் வரவேற்புரையையும் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் நிகழ்த்தியதோடு நன்றியுரையை உதவிச் செயலாளர் அஹமட் பர்ஹான் நிகழ்த்தினார் .
நிகழ்வில் சிங்கள முஸ்லிம் சமூகப் பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், கல்விமான்கள், அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்கள், மாவட்டப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.