உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களை புத்தளம் மக்கள் வரவேற்று அரவணைத்த நன்றி உணர்வை நினைவு கூறும் வகையில் புத்தளத்தில் நேற்று (28) நினைவுத் தூபியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பாலாவியில் உள்ள முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகமும், மகளிர் எழுச்சி குரல் அங்கத்தவர்களும் இணைந்து புத்தளம் சோல்டன்- 01 முஹாஜிரீன் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இந்த நினைவுத்தூபியை திறந்து வைத்தனர்.
புத்தளம் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம். ஜூவைரியா முகைதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட உதவி செயலாளர் கலந்து கொண்டு நினைவுத்தூபியை திறந்து வைத்தார்.
அத்தோடு அரச அலுவலக பெண்கள் பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலைய அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், மகளிர் சங்கங்களின் தலைவிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நினைவுத்தூபியை அமைப்பதற்கான இடத்தை வழங்கி ஒத்துழைப்பு வழங்கிய புத்தளம் சோல்டன் 01 முஹாஜிரீன் பள்ளிவாசல் நிர்வாகத்தினை பாராட்டி கௌரவிக்கும் முகமாக பள்ளிவாசல் நிர்வாக தலைவர் எஸ் பஸ்மின் மற்றும் செயலாளர் ஏ. எம். சன்சைஸ் ஆகியோரிடம் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிலைய நிறைவேறு பணிப்பாளர் எம். ஜுவைரியா முகைதீனின் கரங்களால் நினைவு பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
1990ம் ஆண்டு வட புல மக்களின் பலவந்த வெளியேற்றமானது ஒரு சம்பவமாக இருக்கக்கூடாது இது ஒரு வரலாற்று நிகழ்வாக கருதப்பட வேண்டும்.
எமது எதிர்கால சந்ததிகளுக்கும் கதை கூறுவதற்கான வரலாற்று மூலாதாரமாகவும் அமைய வேண்டும் என்ற அடிப்படையிலும் குறித்த நினைவுச் சின்னமானது அமைக்கப்பட்டுள்ளதுடன் இதில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்களம் கொடுத்த புத்தளம் மக்களின் கைகளின் அடையாளமும் அடைக்கலம் தேடி வந்த வடபுல மக்களின் கால்களின் தடமும் பதிக்கப்பட்டு இந் நினைவுச் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.