பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது.
கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய இராணுவம் உறுதிப்படுத்தியது.
இன்று காலை 10 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியக் குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், குப்வாரா மற்றும் பாராமுல்லா மாவட்டங்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலை அடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே அமைந்துள்ள மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்யூ -30 போர் விமானம் உட்பட ஐந்து இந்திய விமானப்படை ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.