வியாழனன்று (15) இலங்கைக்கான இஸ்ரேல் அரசின் தூதராக தனது நற்சான்றுப் பத்திரத்தை வழங்கிய ரெவ்வென் அசார், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தை அவரது அமைச்சு அலுவலகத்தில் நேற்று சந்தித்தார்.
பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையிலான விடயங்கள் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடபட்டுள்ளன.
இஸ்ரேலில் பல்வேறு துறைகளில் தற்போது ஏராளமான இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும், இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்க இஸ்ரேல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தூதர் அமைச்சர் விஜித ஹேரத்திடம் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக விசா காலாவதி காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை பணியிடத்தில் இணைக்குமாறும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு தெரிவிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கை தொடர்பில் உடனடியாக இஸ்ரேல் அரசாங்கத்திற்கு அறிவிப்பதாக தூதுவர் ஒப்புக்கொண்டார்.