இஸ்லாமிய கலை உலகுக்கு ஒரு மேடையாக அமைந்த 2025 அங்காரா சர்வதேச கண்காட்சி

Date:

கடந்த 2025 மே 7 முதல் 11 வரை, துருக்கியின் தலைநகரான அங்காராவில் ‘சர்வதேச இஸ்லாமிய கலை கண்காட்சி’ என்ற பெயரில் ஒரு முக்கிய இஸ்லாமிய கலாச்சார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கண்காட்சிக்கு பல நாடுகளில் இருந்து கலைஞர்கள், கலாச்சார பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்.

இதன் போது இஸ்லாமிய கலை மரபுகளின் அழகியல் ஆழத்தையும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் பல்வேறுபட்ட ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

துருக்கியின் கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சுடன் மத விவகாரங்களுக்கான தலைமைகம் (தியானெத்) இணைந்து ஏற்பாடு செய்த இந்த கண்காட்சி, அதன் அளவிலும் லட்சியத்திலும் தேசிய அளவில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வாகும்.

கண்காட்சியைத் திறந்து வைத்த துருக்கி ஜனாதிபதி ரெஸப் எர்டோகன் அவர்களின் பாரியார் திருமதி எமின் எர்டோகன், இஸ்லாமிய கலையின் ஆன்மீக அடித்தளங்கள் மற்றும் தார்மீக அடித்தளங்களை மேற்கோள் காட்டி ஒரு நெகிழ்ச்சியான உரையை நிகழ்த்தினார்.

‘இஸ்லாமிய கலையின் நோக்கம் அழகை உருவாக்குவது மட்டுமன்றி அதன் மூலம் தெய்வீகத்தை சந்திப்பதும் ஆகும்’ என்று கூறிய அவர் ‘இங்கு காட்சிப்படுத்துள்ள ஆக்கங்கள் அவற்றின் புனிதத்தின் நறுமணம் மூலம் நம் ஆன்மாக்களை ஈர்க்கின்றன’ எனப் பாராட்டினார்.

மேலும் பிரபல துருக்கிய கவிஞர் நெசிப் ஃபாசில் கிசாகுரெக்கின் ‘கலை என்பது கடவுளைத் தேடுவதாவதோடு ஏனையவை அனைத்தும் வீண் விளையாட்டே’ என்ற புகழ் பெற்ற கவிதை வரிகளையும் மொழிந்து காட்டிய துருக்கியின் முதல் பெண்மணி, இஸ்லாமிய கலையை ‘கண்ணுக்குப் புலப்படும் உலகத்திற்கும் ஆழ்நிலை உண்மைக்கும் இடையிலான பாலம்’ என வர்ணித்தார்.

பாரம்பரிய கலை வடிவங்களான எழுத்துக்கலை (ஹூஸ்னுஹாத்), ஒளியூட்டல்; (தேஜாஹிப்), துருக்கிய பளிங்கு கலை (எப்ரு), மட்பாண்டங்கள், நுண்ணளவு ஓவியம் மற்றும் காடி கலை எனப்படும் தற்போது ஆரவாரமின்றி மறுமலர்ச்சி பெற்று வரும் ஒரு வித சிக்கலான ஒட்டோமான் கால காகித வெட்டு நுட்பம் உட்பட பல கலையாக்கங்கள் இந்நிகழ்வில் இடம்பெற்றன.

தொடர்ந்து பேசிய திருமதி எர்டோகன் ‘பாரம்பரிய கலைகள் வெறும் அலங்காரம் மட்டுமல்ல. அவை நெறிமுறை, ஆன்மீகம் மற்றும் நாகரிக வெளிப்பாடுகள் ஆகும்’ என விவரித்து ‘பரிசுத்த இதயம் கொண்ட ஒரு உண்மை விசுவாசியின் உள்ளத்தில் இருந்து பிறக்கும் ஒரு கலைப்படைப்பைக் காணும்போது, நமது ஆன்மாக்கள் மகிழ்ச்சியால் சிறகடிக்கின்றன’ என்றும் நெகிழ்வுடன் கூறினார்.

மேலும் இந்த கலை வடிவங்களை புறக்கணிப்பு காரணமாக மறைந்து போகாமல் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் அவற்றின் அழகை எதிர்கால சந்ததியினருக்கும் எல்லைகளையும் கடந்து கொண்டு செல்ல வேண்டியதன் அவசரத் தேவையையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் மெஹ்மத் நூரி எர்சோய், குடும்பம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் மஹினூர் ஓஸ்டெமிர் கோக்டாஸ் மற்றும் மத விவகாரத் தலைவர் அலி எர்பாஸ் ஆகியோர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கலாசார முதலீடு

இதன் போது பேசிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் மெஹ்மத் நூரி எர்சோய், கலையாக்கங்களை பாதுகாப்பதன் முக்கியத்துசம் பற்றி திருமதி எர்ரேடகன் முன்வைத்த கருத்துக்களை ஆமோதித்தவராக ‘இஸ்லாமிய கலைகளாவன, ஆழ்ந்த நம்பிக்கை, பொறுமை மற்றும் நேர்த்தியின் வெளிப்பாடாவதால். நாம்; அவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவற்றை மீண்டும் உயிர்ப்பித்து, நிகழ்காலத்தில் அவற்றிட்காக நாம் குரல் கொடுப்பது மிக அவசியமாகும்’ என வலியுறுத்தினார்.

இறுதியாக கண்காட்சியின் முக்கிய இரட்டை நோக்கங்களான ‘இஸ்லாமிய கலையாக்கங்களை பாதுகாத்தல் மற்றும் புத்துயிர் அளித்தல்’ என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அமைச்சர், தமது அமைச்சின் விரிவான முயற்சிகளின் பயனாக கடந்த காலங்களில் துருக்கியில் இருந்து திருடிச்செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கலைப்பொருட்களை திருப்பிப் பெற முடிந்துள்ளமை பற்றியும் தெளிவு படுத்தினார்.

இதன் காரணமாக துருக்கி தற்போது இஸ்லாமிய தொல்லியல் மற்றும் அரும்பொருட்களின் தலைநகராக ஆகியுள்ளது எனவும் அவர் பெருமதிதத்துடன் கூறினார். இறுதியாக இந்த மகத்தான நிகழ்வானது இஸ்லாத்தின் கடந்த காலத்திற்கான அஞ்சலி மட்டுமன்றி, அதன் எதிர்காலத்திட்கான வாக்குறுதியும் ஆகும் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

புதுமை மற்றும் பாரம்பரியம்

இந்தக் கண்காட்சியில் 24 புகழ்பெற்ற எழுத்துக் கலைஞர்களின் 41 படைப்புகள் இடம்பெற்றிருந்ததுடன் அவை காலவரிசைப்படி அமைக்கப்பட்டிருந்தன. இதில் த்தாத் ஹாபீஸ் ஒஸ்மான் எஃபெண்டி, இரண்டாவது சுல்தான் ம்மூத் மற்றும் மூன்றாவது சுல்தான் அஹமது போன்ற வரலாற்று புகழ் பெற்ற நபர்களின் தலைசிறந்த ஆக்கங்களும், மெஹ்மெத் ஓஸ்கே, அலி டாய் மற்றும் ஃபெர்ஹாட் குர்லு போன்ற சமகால கலைஞர்களின் தலைசிறந்த படைப்புகளும் இடம் பெற்றிருந்தன.

இவை பாரம்பரிய வேர்களிலிருந்து நவீன காலம் வரையான எழுத்துக்கலையின் பரிணாமத்தை பிரதிபலித்தன.இதன் போது வளர்ந்து வரும் இளம் பெண் கலைப்படைப்பாளியாகிய இஸ்தான்புல் நகரை பிறப்பிடமாகக் கொண்ட நிதா ஒஸ்பெனிமின் படைப்புக்கள் சிலவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

‘இந்நிகழ்வில் எனது ஆக்கங்களை காட்சிப்படுத்த எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அவை முதல் தடவையாக சர்வதேச அளவில் அறிமுகம் பெறும் என அறிந்த நான் பெரு மகிழ்ச்சி அடைந்தேன்’ எனக் கூறிய ஒஸ்பெனிம் கண்காட்சியின் போது அவை பெரிதும் பாராட்டப்பட்டமை தனது மகிழ்ச்சியை பல மடங்காக உயர்த்தியதாக பெருமிதத்துடன் கூறினார்.

மர்மாரா பல்கலைக்கழகத்தின் பட்டதாரியும், ஃபாத்தி சுல்தான் மெஹ்மத் வக்கிஃப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியுமான ஓஸ்பெனிம், காகிதம் அல்லது தோலை மலர் வடிவங்கள், வடிவியல் வடிவங்கள் மற்றும் கையெழுத்து வடிவங்களாக சிக்கலான முறையில் வெட்டுவதை உள்ளடக்கிய ஒரு கலை வடிவமான காட்டி கலையை மீண்டும் உயிர்ப்பிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இப்போது அவர் கைவினைப்பொருள் உருவாக்ககுவதை நேரிலும் இணயம் ஊடாகவும் கற்பித்து வருகின்றார்.

பதினைந்தாம் நூற்றாண்டளவில் ஆரம்பமாகிய காடி கலை ஒரு கால கட்டத்தில் எழுத்துக்கலை பிரதிகள், புத்தகப் பிணைப்புகள் மற்றும் எழுத்துப் பலகைகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்டது.

நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் விடப்பட்ட போதிம், வரலாற்று நம்பகத்தன்மையை சமகால வடிவமைப்புடன் கலக்கும் ஓஸ்பெனிம் போன்ற இளம் கலைஞர்களால் இந்த நுட்பம் மறுமலர்ச்சியை அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘கண்காட்சிக்கு வருகை தந்திருந்த பல பார்வையாளர்களுக்கு, காடி கலையை சமீபமாக பார்ப்பது இதுவே முதல் தடவையக இருந்தது.

எனது படைப்புகளை இணயத்தில் பார்த்து வந்த வந்த பலர் இன்றுதான் என்னை முதன் முதலில நேரில் சந்தித்தோடு இது நம் அனைவருக்கும் மிகுந்த நெகிழ்ச்சியை எற்படுத்தயது’ எனவும் ஒஸ்பெனிம் கூறினார்.

‘கண்காட்சி முடிந்ததும், தற்காலத்திற்கு அதன் பொருத்தமும் முக்கியத்துவமும் மிகத் தெளிவாகியது. இது வெறுமனே ஒரு கண்காட்சியை விட பாரம்பரியம் புதுமையுடன் உரையாடிய மற்றும் தெய்வீகம் அர்ப்பணிப்புள்ளவர்களை, உலகளாவிய கலை மொழி மூலம் சந்திக்ன வைத்த ஒரு கலாச்சார மறுமலர்ச்சியாகும் எனலாம்’ எனவும் ஒஸ்பெனிம் விவரித்தார்.

ஓஸ்பெனிமின் வார்த்தைகளில் கூறுவதாயின் இந்தக் கண்காட்சி என்பது வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ‘மிகவும் அவசியமான ஒரு தளம்’ எனக்குறிப்பிடலாம். இது போன்ற பல நிகழ்வுகள் சர்வதேச அளவில் விரிவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இறுதியாக, ‘பாரம்பரிய இஸ்லாமிய கலைகள் மீது உண்மையான உலகளாவிய ஆர்வம் இருப்பது இதன் போது புலனாகியதுடன் இது போன்ற கண்காட்சிகள் எங்களைப் போன்ற இளம் கலைஞர்களுக்கு பாலங்களை உருவாக்கவும், பார்வையாளர்களை நேரடியாக சந்திக்கவும், இஸ்லாமிய பாரம்பரியத்தை உயிரோட்டத்துடன் வைத்திருக்கவும் பெரிதும் உதவுகின்றன’ என ஒஸ்பெனிம் கூறினார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...