புதிய வருடத்தில் ஐந்து முக்கிய அம்சங்களை செயற்படுத்த திடசங்கற்பம் பூணுவோம்- உலமா சபையின் புதுவருடச் செய்தி

Date:

முஹர்ரம் 1447 இஸ்லாமிய புது வருடத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள செய்தி…

இஸ்லாமிய ஹிஜ்ரி வருடக் கணக்கீடானது கலீபா உமர் இப்னு அல்-கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்ட காலக்கணிப்பு முறையாகும்.

இஸ்லாமிய அடிப்படையில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாக காணப்படுவதோடு அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவையாக திகழ்கின்றன என அல்-குர்ஆன் பறைசாற்றுகிறது.

“அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கையானது, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும்.” (09:36)

அந்தவகையில் இஸ்லாம் கூறும் புனித மாதங்களில் ரஜப், துல் கஃதா, துல் ஹிஜ்ஜாஹ் மற்றும் நாம் தற்போது அடைந்திருக்கக் கூடிய முஹர்ரம் மாதமும் ஒன்றாகத் திகழ்கிறது.

அதேபோன்று ரமழானின் இறுதிப்பத்து, துல் ஹிஜ்ஜாவின் முதற்பத்து என சிறந்த பத்து நாட்களை கொண்ட மாதங்களின் வரிசையில் இஸ்லாமிய புது வருடமான முஹர்ரத்தின் முதல் பத்து நாட்கள் மிகவும் சிறப்புமிக்கவையாக திகழ்கின்றன.

இது பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

“ரமழான் மாத நோன்புக்கு அடுத்ததாக மிகச்சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பிறகு மிகச்சிறந்த தொழுகை இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.” (முஸ்லிம் : 2157)

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

“புனிதமிக்க நான்கு மாதங்களிலும் நோன்பு நோற்பது விரும்பத்தக்கது (முஸ்தஹப்) ஆகும். அவற்றில் மிகச்சிறந்தது முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும்.”  (அல் மஜ்மூ)

இந்த வகையில் ஒரு புதிய வருடத்தின் தொடக்கம், நம் வாழ்வில் நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும் சந்தர்ப்பமாக அமையப் பெறவேண்டும். கடந்த ஆண்டில் நமது ஈமான் மற்றும் மார்க்க ஈடுபாடு எவ்வாறு இருந்தது என்பதை இச்சந்தர்ப்பத்தில் சுய பரிசோதனை செய்தல் வேண்டும். இனி வரவிருக்கும் நாட்களில் நமது வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை நாம் தீர்மானிக்க வேண்டும்.குறைந்த பட்சம் பின்வரும் ஐந்து முக்கிய அம்சங்களை நாம் நமது வாழ்வில் செயற்படுத்த திடசங்கற்பம் பூண வேண்டும்.

1. நமது தினசரி வணக்கங்களை சீரமைத்தல்.

2. கொடுக்கல் வாங்கல்களை தூய்மையாக அமைத்துக் கொள்ளல்.

3. இல்லற வாழ்வை ஒழுங்கு படுத்தல்.

4. மனிதநேயத்தோடும் பாசத்துடனும் உயரிய பண்புகளை பேணல்.

5. நல்ல முஸ்லிமாகவும், நாட்டிற்கு நல்ல குடிமகனாகவும் வாழ்தல்.

ஆக, இந்த முஹர்ரம் மாதத்தை அல்லாஹ் நமக்குச் சிறந்த செயல்களின் தொடக்கமாக ஆக்கியருள வேண்டும், நமது வாழ்விலும், நமது நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பிரார்த்திக்கின்றது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...