( கட்டுரையாளர்: மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் , முன்னாள் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்)
தேன்கூடு போல் தொங்கும் இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்பு அழகான – அமைதியான ஆசிய நகரங்களில் ஒன்று. அதன் தோற்றத்தை மலேசியாவின் பினாங்கு தீவோடு ஒப்பிடலாம்.
அழகிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாக திகழும் கொழும்புக்கு சிறப்பு சேர்ப்பது அதன் அழகிய கடற்கரை .
அந்த அழகிய கடற்கரையில் துறைமுகத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஜாமிஉல் அல்பர் பள்ளிவாசல்.
1908 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 1909 ல் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.
இதனை சம்மாங்கோட்டுப் பள்ளி என்ற புனைபெயருடனும் அழைக்கிறார்கள்.
Red Mosque என்று ஆங்கிலத்திலும், ரத்து பள்ளிய என சிங்களத்திலும் அழைக்கிறார்கள்.
இளம்சிவப்பும், வெண்மை கோடுகளும் இப்பள்ளியின் அழகை தூக்கி நிறுத்துகின்றன.
மாதுளம் பழ வடிவிலான குவி மாடங்களும், ஐந்து மினாராக்களும், இரண்டு மணி கூடுகளும் பள்ளிவாசலின் கட்டிடக்கலைக்கு சிறப்புகளை சேர்க்கின்றன .
இந்த பள்ளிவாசல் இலங்கையின் பெருமிதங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அந்த பள்ளிவாசலின் அழகும், உள்கட்ட அமைப்புகளும் காண்போரை பழமையான காலகட்டத்திற்கு நகர்த்தி செல்வதை உணர முடியும் .
இது மிக முக்கியமான வணிகப் பகுதியில் அமைந்திருக்கிறது.
குறிப்பாக இந்திய – தமிழ்நாட்டு கடலோர மக்கள் இப்பகுதியில் வணிகம் செய்த போது, தங்களுக்கென்று வழிபடுவதற்கு ஒரு பள்ளிவாசல் தேவை என முடிவு செய்துள்ளனர்.
அப்போது இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதிராம்பட்டினம் கொ . முஹம்மது அப்துல்லா ஆலிம், கொ. செய்து அப்துல் காதிர் ஆலிம் ஆகிய இரு சகோதரர்கள் இப்பணியை தலைமையேற்று செய்திருக்கிறார்கள்.
காயல்பட்டினம் P.S.K.V பல்லக் லெப்பை, P.B. உம்பிச்சி போன்ற செல்வந்தர்களும் உதவியுள்ளனர்.
அதிராம்பட்டினம் தொடங்கி காயல்பட்டினம் வரை உள்ள தொண்டி, கீழக்கரை, கோட்டைப் பட்டினம், அம்மா பட்டினம் போன்ற பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் அப்போது இலங்கையில் தொழில் செய்த போது இக்கட்டுமான பணிகளில் பெரிய அளவில் பங்கேற்றுள்ளனர்.
ஆரம்பத்தில் 500 பேர் தொழக்கூடிய வசதிகளோடு ஆரம்பிக்கப்பட்டு, பிறகு சுமார் 1500 பேர் தொழக்கூடிய பள்ளியாக இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு பள்ளிவாசல் மேலும் விரிவுபடுத்தப்பட்டு 3000 பேர் தொழக்கூடியதாக மாற்றப்பட்டிருக்கிறது.
2007 ஆம் ஆண்டு மேலும் இப்பள்ளியை விரிவு படுத்துவதற்கான முன் முயற்சியில் எடுக்கப்பட்டிருக்கிறது.
முழுமையாக 2015 ஆம் ஆண்டு அனைத்து கட்டிடப் பணிகளும் நிறைவு பெற்றிருக்கிறது .
தற்போது ஐந்து மாடிகள் கொண்டதாக இப்பள்ளி காட்சியளிக்கிறது.
இருபுறங்களில் இரண்டு நுழைவாயில்கள் மூலம் மக்கள் வந்து செல்லும் வகையில் வசதி செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது சுமார் 11,000 பேர் ஒரே நேரத்தில் தொழக்கூடிய அளவிற்கு இந்த பள்ளி இட வசதி பெற்றிருக்கிறது.
பெண்கள் தொழுவதற்கும் இப்பள்ளியில் தனி பகுதியும் உண்டு. பள்ளியின் மத்தியில் அமைந்துள்ள பிரம்மாண்டம் மரத் தூண்கள் இலங்கையின் புத்தளம் பகுதியை சேர்ந்த புகழ்பெற்ற மறைக்காயர் வணிகக் குடும்பத்தினரால் அன்பளிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இப்பள்ளியின் கட்டிட கலைஞரான ஹபீபு லப்பை பொறியியல் தொழில்நுட்பம் படித்தவர் அல்ல. அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடியேறி வணிகம் செய்ய வந்தவர். ஆனால் அற்புதமான வகையில் இப்பள்ளியை கலை நயத்துடன் கட்டி உள்ளனர் என்பதை N. சரவணன் என்ற எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புக்கு வருகை தரக்கூடிய முஸ்லிம்கள் இப்பள்ளிக்கு வருகை தருவதை தங்களுடைய பயணத் திட்டங்களில் ஒன்றாக வைத்திருக்கிறார்கள் .
உலகின் பல நாடுகளில் இருந்து கொழும்புக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் இப்பள்ளிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்
புனித ரமலானில் சுமார் 2000 பேர் வரை ஒரே நேரத்தில் அமர்ந்து நோன்பு துறக்கும் காட்சிகள் இப்பள்ளியில் நிகழும்.
தற்போது இலங்கையின் குடிமக்களாக உள்ள தமிழ்நாட்டு வம்சாவளியினரே இப்பள்ளியை நிர்வாகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நான் கொழும்பு வந்த போது இப்பள்ளிக்கு வருகை தந்தேன்.
மௌலவி J.S.ரிபாயி மற்றும் மௌலவி முகைதீன் உலவி போன்றவர்களும் உடன் வந்தனர் . இப்பள்ளியின் அழகிய கட்டிடக்கலையை பார்த்து வியந்தோம்.
அடிக்கல் நடப்பட்ட நாள் முதல் விரிவுப்படுத்தப்பட்டுக் கொண்டே ; வளர்ந்து வந்த இப்பள்ளிக்கு தற்போது வயது 125 ஆகிறது. ஆனாலும் மாறாத பழமையுடன் புதுப் பள்ளியை போலவே அது காட்சியளிக்கிறது.