பாலஸ்தீன், சிரியா, லெபனான், ஏமன் ஆகிய நாடுகளை தொடர்ந்து ஈரான் மீதும் இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது உலகம் எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கு ஊக்கத்தையும், ஆயுதங்களையும் வழங்கி போரை ஊக்குவிக்கும் குற்றவாளி அமெரிக்கா என்ற குற்றச்சாட்டுகள் வலிமை பெற்றுள்ளது.
அந்த வகையில் அமெரிக்காவை கண்டித்து, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன், நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். முத்தரசன், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு, முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணால், மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் ஆவடி. அந்திரி தாஸ், தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தோழர். தியாகு, இந்திய தேசிய லீக் தலைவரும், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரான கோனிகா பஷீர் ஹாஜியார், வீரத்தமிழர் முன்னணித் தலைவர் பாஸ்கர், அண்ணா சாலை தர்ஹா அறங்காவலர் செய்யது மன்சூர் தீன் உள்ளிட்டோர் முழக்கங்களை எழுப்பி கண்டன உரையாற்றினர்.
பிறகு ம.ஜ.க தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் ஷியா தலைமை காஜி குலாம் மெஹதீன் கான், மஜக இணைப் பொதுச் செயலாளர் கேப்டன் செய்யது முஹம்மது பாரூக் உள்ளிட்ட திரளான மஜகவினர் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முன்னேறிய போது பொலிஸார் தடுத்து நிறுத்தி நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் நிறைவடைந்த நிலையில் தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு அவர்களும், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் அவர்களும் போராட்டத்தில் கைதானவர்களை நேரில் வந்து சந்தித்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஈரான் மீதான போர் நடத்தும் இஸ்ரேலுக்கும், அதை ஆதரிக்கும் அமெரிக்காவையும் கண்டித்து இந்தியாவில் நடைபெற்ற முதல் போராட்ட களம் சென்னையில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.