இன்று (25) மாலை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற முஸ்லிம் சமூகத்தின் சிவில் சமூக பிரதிநிதிகளும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்ட கலந்துரையாடலில் அரசின் அண்மைக்கால செயற்பாடுகள் முஸ்லிம்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதாக கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்தனர்.
குறிப்பாக இம்முறைய ஹஜ் ஏற்பாடுகளை அரசு மிகவும் சிறப்பாக ஒழுங்குப்படுத்தி இருந்ததனால் நிறைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக கலந்து கொண்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது முஸ்லிம் ஜனாஸாக்களை கையாளுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் ஏற்கனவே கொவிட் ஜனாஸாக்களில் மரணித்தவர்களின் பெயர் பட்டியலை அரசாங்கம் உடனடியாக தர வேண்டும் என்றும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் விடுத்த வேண்டுகோளை அரசு உரிய தரப்புக்கரளுடன் பேசி முடிவெடுப்பதாக அரச தரப்பினர் அறிவித்தனர்.
அத்துடன் முஸ்லிம் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவிகளினதும் ஹிஜாப் அணியும் விவகாரம் கலந்துரையாடப்பட்டது பல்கலைக்கழகம் மாணவப் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இதன்போது அவர்கள் குறிப்பாக தாதிகளாக பணியாற்றும் முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப் அணிவதற்கான அனுமதியை பெற்றுத் தர வேண்டும் என்றும் பல மேலைத்தேய, முஸ்லிம் நாடுகளில் இது இலகுவாகவும் பாதுகாப்பானதாகவும் செயல்படுத்தப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டியதுடன் அறிக்கை ஒன்றையும் அமைச்சர் விஜித ஹேரத் அவர்களிடம் கையளித்தனர்.
அத்துடன் குர்ஆன் பிரதிகளை விடுவிப்பது சம்பந்தமாக நடவடிக்கைகளை மிகவும் அவசரமாக மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சரை வேண்டிக்கொண்டனர்.
இலங்கைக்கு கொண்டு வரும் புத்தகங்கள் தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் கடுமையான நிபந்தனைகளை மீள் பரிசீலனை செய்யுமாறு முஸ்லிம் பிரதிநிதிகள் மேற்கொண்ட வேண்டுகோளை அமைச்சர் அவர்களும் புத்த சாசன, மத விவகார அமைச்சர் சுனில் செனவி அவர்களும் உரிய தரப்புகளுடன் பேசி தீர்மானிப்பதாக குறிப்பிட்டனர்.
மஹர, ஏக்கல பள்ளிவாசல்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த மஹர பள்ளிவாசலுக்குப் பதிலாக வேறு இடத்தில் பள்ளிவாசல் அமைத்து தருவது தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
முஸ்லிம் சிவில், சமய அமைப்புகளுடன் தொடர்ந்தும் பேச இருப்பதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
முஸ்லிம் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஒரு செயற்குழுவொன்றை நியமித்துக்கொள்வதெனவும் அடுத்த சந்திப்பு ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நடைபெறும் எனவும் இச்சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் பிரதிச் சபாநாயகர் Dr. ரிஸ்வி ஸாலி, பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பு தொடர்பில் ‘நியூஸ்நவ்’விடம் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் எம்.பி அவர்கள்,
முஸ்லிம்களின் கடந்த காலங்களைப் போலன்றி முஸ்லிம்களின் பிரச்சினைகளை செவிமடுப்பதற்கு அரசாங்கம் ஒரு பொறிமுறை ஒன்றை வைத்திருப்பதாகவும் இதன் மூலம் முஸ்லிம்களின் பிரச்சினைகளை உரிய தரப்பிடம் முன்வைத்து படிப்படியாக தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இந்த சந்திப்பும் மிகவும் சாதகமாக நடைபெற்றதாகவும் பல பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் தீர்வுகள் எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.