2010 – 2020 க்கு இடையிலான தசாப்தத்தில் வேகமாக வளர்ந்துள்ள முஸ்லிம்களின் சனத்தொகையின் அடிப்படையில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதமாக இஸ்லாம் திகழ்கிறது என்று பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது.
பியூ ஆராய்ச்சி மையமானது அமெரிக்காவின் வொஷிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் பக்கச்சார்பற்ற நிறுவனமாகும். இது உலக அளவிலான தரவு ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் உலகின் தீர்மானமெடுப்பவர்களால் நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படுகின்றன.
திங்களன்று (09) வெளியிடப்பட்ட பியூவின் உலகளாவிய மதப் பரம்பல் ஆய்வில் , இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு இயற்கையான சனத்தொகை வளர்ச்சியே காரணம் என்று கூறியுள்ளது.
“வேறு எந்த மதத்தினரையும் விட முஸ்லிம் சமூகத்தில் அதிகமான சிறுவர்களும் இளைஞர்களும் இருக்கிறார்கள்” என்றும் இந்த ஆய்வு கூறியுள்ளது,
“2015-2020 காலகட்டத்திற்கான தரவுகளின் அடிப்படையில், ஒரு முஸ்லிம் பெண் தனது வாழ்நாளில் சராசரியாக 2.9 குழந்தைகளைப் பெறுவார் என்று மதிப்பிட்டுள்ளோம், முஸ்லிம் அல்லாத பெண்களின் சராசரி 2.2 குழந்தைகள் மட்டுமே” என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.
2010 – 2020 க்கு இடையில் உலகளாவிய மதக் கட்டமைப்பு எவ்வாறு மாறியது என்பதை ஆய்வு செய்த போது, 2.3 பில்லியன் மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மதமாக கிறிஸ்தவம் இருந்தபோதிலும், இஸ்லாத்துக்கும் கிறிஸ்தவத்துக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து குறைந்து வருவதாக முடிவு செய்ததாக அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது. ஆய்வின்படி, 2010 முதல் உலகின் கிறிஸ்தவ மக்கள் தொகை சுமார் 1.8 சதவீதம் குறைந்துள்ளது.
உலகில் முஸ்லிம்களின் எண்ணிக்கையிலான அதிகரிப்பு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலேயே பெரிதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தான், பெனின் மற்றும் லெபனானில் உள்ள பிற மதங்களுடன் ஒப்பிடும்போது இஸ்லாம் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதே நேரத்தில் ஓமான் மற்றும் தான்சானியாவில் முஸ்லிம்களின் வளர்ச்சி குறைந்துள்ளது.
அமெரிக்காவில் மதம் எதிலும் இணைக்கப்படாத மக்களின் சதவீதம் 2010 ஐ விட 97 சதவீதம் அதிகரித்து செங்குத்தான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
எந்த மதத்துடனும் இணைக்கப்படாத மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடாக சீனா குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு 1.3 பில்லியன் மக்கள் எந்த மதத்துடனும் இணையாதவர்களாக வாழ்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் 60 நாடுகளில் 40 நாடுகளில் கிறிஸ்தவம் குறைந்தது ஐந்து சதவீதத்தால் குறைந்துள்ளதாக பியூ ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. கிறிஸ்தவ மதத்தைத் தழுவுவதை விட வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே இதற்கான காரணம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2010 – 2020 க்கு இடையில், ஒருவர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினால் மூன்று பேர் வெளியேறு பவர்களாக இருந்தனர் எனவும் அறிக்கை கூறுகிறது.
இதே வேளை எந்த மதத்தையும் சாராதவர்களின் எண்ணிக்கையில் பெரிய அளவு வளர்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது. எந்த மதத்திலும் இணைக்கப்படாத ஒவ்வொருவருக்கும், மேலும் மூன்று பேர் மத ரீதியாக இணைக்கப்படாதவர்களாக மாறியுள்ளனர்.
பௌத்தம் மற்றும் இந்து மதம் இரண்டிலும், தங்கள் மதத்தில் சேருவதை விட அதிகமானவர்கள் தங்கள் மதத்தை விட்டு வெளியேறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. வெளியேறுபவர்களை விட அதிகமானவர்கள் இணைந்து கொள்ளும் மதமாக இஸ்லாம் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு பில்லியன் மக்கள் அல்லது உலக சனத்தொகையில் கால் பகுதியினரை உள்ளடக்கி உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் உள்ளது. இது 2010 முதல் கிட்டத்தட்ட 350 மில்லியன் மக்களால் வளர்ந்துள்ளது, இது கிறிஸ்தவத்தின் வளர்ச்சியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும் என்பதோடு ஏனைய மற்ற அனைத்து மதங்களின் சனத்தொகை வளர்ச்சியை விட அதிகமாகும்.
எந்த மதத்திலும் இணையாதவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட இரண்டு பில்லியனாகும். இவர்களின் எண்ணிக்கை 2010 முதல் 270 மில்லியனாக அதிகரித்துள்ளது. மதங்களில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அடுத்தபடியான வளர்ச்சி எந்த மதத்தையும் சேராதவர்களிலேயே அவதானிக்கப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய சனத்தொகையாக எந்த மதத்தையும் சாராதோர் வளர்ச்சி அடைந்துள்ளனர்.
1.2 பில்லியன் மக்களைக் கொண்ட உலகின் மூன்றாவது பெரிய மதமாக இருந்த இந்து மதம் 126 மில்லியன் மக்களால் வளர்ந்த போதும் உலக சனத் தொகையில் அதன் சதவீதம் மாறாமல் இருந்தது.
சீக்கியம் மற்றும் பஹாய் போன்ற பிற மதங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 200 மில்லியன் மக்களாக, அதாவது உலக மக்கள்தொகையில் 2.2 சதவீதமாக வளர்ந்துள்ளது.
யூத மதம் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களால் வளர்ந்த போதும் உலக மக்கள்தொகையில் 0.2 சதவீதமாகவே தொடர்ந்தும் இருந்துள்ளது.
2010 ஐ விட 2020 இல் குறைவான மக்களைக் கொண்ட ஒரே பெரிய மதமாக பௌத்த மதம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலப்பிரிவில் 18.6 மில்லியன் மக்கள் குறைந்துள்ளது. பௌத்தர்களின் எண்ணிக்கை உலக சனத் தொகையில் சுமார் ஐந்து சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாகக் குறைந்துள்ளது.