புத்தளம் மாநகர சபையை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: மேயராக ரின்சாத் அஹ்மத்: பிரதி மேயராக நுஸ்கி நிசார் தெரிவு

Date:

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மாநகர சபையினையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது.

இதன் பிரகாரம் புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தேசிய மக்கள் சக்தியின் முதலாம் வட்டார வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் மாநகர சபையின் முதலாவது பிரதி மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாம் வட்டார வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற நுஸ்கி நிசார் திறந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நுஸ்கி நிசார் புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் நஸ்மி நிசாரின் சகோதரர் ஆவார். புத்தளம் வாழ் பொதுமக்கள் அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட புத்தளம் மாநகர சபைக்கான முதலாவது கன்னி அமர்வு மாநகர சபையின் பொது நூலகத்தில் அமையப்பெற்றுள்ள மாநகர சபையின் சபா மண்டபத்தில்,  இன்று (16)   இடம்பெற்றது.

சபைக்கு தெரிவாகியுள்ள தேசிய மக்கள் சக்தியின் 07 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 04 உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 03 உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியின் 03 உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியின் 01 உறுப்பினர் மற்றும் பந்து சின்னம் சுயேட்சை குழுவின் 01 உறுப்பினர் என மொத்தமாக 19 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருந்தனர்.

சபை நடவடிக்கைகளின் போது மேயராக பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

பிரதி மேயருக்கு விஜித பிரசன்ன மற்றும் நுஸ்கி நிசார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதனையடுத்து நடைபெற்ற பகிரங்க வாக்களிப்பில் நுஸ்கி நிசார் 10 : 06 வாக்குகளினால் வெற்றி பெற்று பிரதி மேயராக தெரிவானார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியின் 03 உறுப்பினர்களும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

இதனையடுத்து புதிய மேயர் சபையினை பொறுப்பேற்று தனது கன்னி உரையினை நிகழ்த்தினார். ஏகமனதாக தன்னை தெரிவு செய்ததற்கு நன்றி தெரிவித்த அவர், ஊரின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் என தெரிவித்தார்.

புதிய மேயரையும், பிரதி மேயரையும், உறுப்பினர்களையும் வரவேற்பதற்காக அதிகளவான பொதுமக்கள் புத்தளம் பொது நூலகத்துக்கு முன்பாக திரண்டிருந்தனர்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோரும் இதன் போது பிரசன்னமாகி இருந்தனர்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...