இலங்கையிலிருந்து 3,500க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் உட்பட உலகம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 16 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்று கூடிய 2025ஆம் ஆண்டுக்கான ஹஜ் கிரியைகள் சிறப்பாக நிறைவு நிலைக்கு வந்துள்ளது.

ஹஜ் கிரியைகள் இடம்பெறும் முக்கியமான இடங்களான மக்கா முதல் அரபா, மினா, முஸ்தலிபா, ஜம்ராக்கள் மற்றும் மதீனாவில் உள்ள புனித பள்ளிவாசல் வரை சவூதி அரசின் நவீனம் கலந்த துல்லியமான ஏற்பாடுகளைக் காணக்கூடியதாக இருந்தது.
இந்த ஆன்மீகப் பயணம் இஸ்லாத்தின் மிக முக்கியமான புனிதத் தலமான கஃபா அமைந்துள்ள மக்காவின் மஸ்ஜித் அல் ஹராமில் தொடங்கியது. இவ்வாண்டு, மஸ்ஜித் அல்-ஹராமில் முன்னில்லாத அளவுக்கு மேம்படுத்தல்களும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சவூதி அதிகாரிகள், உலகின் மிகப்பெரிய பள்ளிவாசல் குளிர்சாதன அமைப்பை அறிமுகப்படுத்தி, மஸ்ஜித் முழுவதும் குளிரூட்டும் கட்டமைப்பை விரிவுபடுத்தியிருந்தனர். 40°C வரையான வெப்பத்திலும் உள்ளக வெப்பநிலையை கட்டுப்படுத்த, 4,000க்கும் மேற்பட்ட காற்றோட்ட மற்றும் நீர்விசிறும் விசிறிகள் அமைக்கப்பட்டன.
மேலும் மஸ்ஜித் வளாகத்தில் தூய்மையை பேண தினமும் 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, ஆயிரக் கணக்கான லீற்றர் கிருமி நாசினிகள் பயன்படுத்தப்பட்டன.
ஹஜ் காலத்தை முன்னிட்டு குறிப்பாக கிரியைகள் நடைபெறும் இடங்களில் சவூதி அரசாங்கம் டிஜிட்டல் சேவைகளையும் மேம்படுத்தியது.
யாத்திரிகர்கள் அதிவேக 5G இணையசேவையை பயன்படுத்த முடிந்ததுடன், “நுசுக்” மற்றும் “தவக்கல்னா” எனும் செயலிகள் மூலம் தொழுகை நேரங்கள், சுகாதார எச்சரிக்கைகள், அவசர உதவிகள் மற்றும் கூட்ட நெரிசல்களில் வழிநடத்தல் போன்ற தகவல்களை நேரடியாகப் பெற்றனர்.
நவீன முக வாசிப்புக் கேமராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் கண்காணிப்பு முறைகள் யாத்திரிகர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் உறுதி செய்தன. டிஜிட்டல் கைப் பட்டிகள் பயன்பாட்டின் வழியாக தவறிவிட்ட அல்லது நெருக்கடியில் உள்ள யாத்திரிகர்களை கண்டறிய உதவிகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட “ஸ்மார்ட் ஹஜ்” செயலி, மருத்துவ உதவி, இருப்பிடம் பகிர்வு மற்றும் ஹஜ்ஜின் ஒவ்வொரு கடமைக்குமான வழிகாட்டுதல்களை வழங்கியது.
மக்காவில் ஹஜ் கடமைகள் முடிந்ததும், மில்லியன் கணக்கான யாத்திரிகர்கள் தஷ்ரீக் நாட்களில் தங்குவதற்காக மினாவில் அமைந்துள்ள கூடாரங்களை சென்று சேர்ந்தனர். தீயெதிர்ப்பு வசதிகள், தூய்மையான குடிநீர் வழங்கல் மற்றும் பாதுகாப்பான மின்சார அமைப்புகள் உடைய 1,00,000-க்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட கூடாரங்கள் சவூதி அரசால் கனகட்சிதமாக அமைக்கப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில் “தனாசுல்” என்ற திட்டம் இம்முறை ஹஜ்ஜிலும் செயல்படுத்தப்பட்டது, இது யாத்திரிகர்களுக்குத் தங்களது ஹஜ் கடமைகள் மற்றும் தங்கும் நாட்களுக்கு இலகுவான திட்டமிடலை வழங்கியது.
ஒரு இடத்திலிருந்து மறு இடத்துக்கு இடம்பெயர்வதற்கான போக்குவரத்து வசதிகள், மினா, அரபா மற்றும் முஸ்தலிபா ஆகிய இடங்களுக்கிடையே தினசரி 3.5 இலட்சம் யாத்திரிகர்களை ஏற்றிச் செல்லும் வகையில் “அல் மஷா’யிர்”, “அல் முகதஸ்ஸா” மெட்ரோ ரயில்த் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மினாவில் ஒழுங்கீனங்கள் ஏற்படாமல் இருக்க, சவூதி அரசு கூட்டத்தினை நிர்வகிக்கும் முறைமைகளை முழுமையாக டிஜிட்டல் அடிப்படையில் மாற்றியதோடு 60,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மற்றும் அவசர உதவி பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தியிருந்தது.
ஹஜ் கடமையின் மிக முக்கியமான கட்டம், துல் ஹஜ் மாதத்தின் ஒன்பதாம் நாளில், யாத்திரிகர்கள் அரபா மலைப்பரப்பில் நண்பகல் முதல் சூரியஅஸ்தமனம் வரை பிரார்தனைகளில் ஈடுபடும் தருணம் ஆகும். இந்தப் புனித இடத்திலும் சவூதி அரசு முக்கியமான மேம்பாடுகளைச் செய்திருந்தது.
அரபா மைதானப் பிரதேசம் முழுவதும் நீர் விசிறும் விசிறிகள் மற்றும் நிழல்பரப்பும் ஓய்வுப் பகுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி உரையை வழங்கிய நமிரா பள்ளிவாசல், நவீன குளிர்சாதன அமைப்புகள் மற்றும் மேலதிக ஒலி பெருக்கிகள் மூலம் முழுமையாக மேம்படுத்தப்பட்டு இருந்தது. அரபா நாளின் குத்பா பிரசங்கம் நேரடியாக 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.
வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் மற்றும் அவசர நிலைகளுக்குத் துரிதமாக எதிர்வினை அளிக்க, எல்லா இடங்களிலும் நடமாடும் மருத்துவ குழுக்கள், வான், தரை வழியாக செயல்படும் ஆம்புலன்ஸ்கள், மற்றும் அவசர மருத்துவ கூடார்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சூரிய அஸ்தமனத்தின் பின்னர், யாத்திரிகர்கள் முஸ்தலிபாவுக்கு புறப்பட்டனர். அங்கு அவர்கள் தொழுகைகளை நிறைவேற்றி, அடுத்த நாள் கடமைகளுக்காக கற்கள் சேகரித்தனர். இந்த பகுதியில் சவூதி ஹஜ் அமைச்சகம் பல மேம்பாடுகள், வசதுகளை மேற்கொண்டிருந்தது. போதுமான மின்சார வசதிகள், கழிவறைகள் மற்றும் தூய்மைப் படுத்தல் வசதிகள் மேம்படுத்தப்பட்டிருந்தன.
ஓய்வு மற்றும் நீர் வசதிக்காக தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் குடிநீர் விநியோக மையங்கள் நிறுவப்பட்டன. அரபா மற்றும் மினாவுக்கு இடையிலான 9 கிமீ தூரத்தைக் கடந்த பெரிய மக்கள் திரளின் நெரிசலை தவிர்க்க, மெட்ரோ ரயில் சேவை இரவு முழுவதும் செயல்பட்டது, இதன் மூலம் நடந்து செல்வதால் ஏற்படும் நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டது.
மீண்டும் மினாவிற்கு திரும்பிய யாத்திரிகர்கள், ஷைத்தானை கல்லால் அடிக்கும் “ரம்யுல் ஜமராத்” எனப்படும் முக்கிய கடமையை நிறைவேற்றினர். இந்த மூன்று ஜமராத் தூண்கள் பாரம்பரியமாக மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படும் இடமாக இருந்தாலும், இந்த ஆண்டு பல்வேறு நிலைகளில் அமைந்த ஜமராத் பாலப்பகுதி (Jamarat Bridge system) மேலும் விரிவுபடுத்தப்பட்ட வழித்தடங்களுடன் செயல்படுத்தப்பட்டது.
கூட்டநெரிசலை தவிர்க்க, தனித்தனி நேரங்கள் (time slots) ஒதுக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் நேரடி கூட்டநிலை கண்காணிப்பில் ஈடுபட்டன, மேலும் 10,000 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மிகுந்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
நபி இப்ராஹீமின் (அலை) தியாகத்தை நினைவுகூரும் (உழ்ஹிய்யா) குர்பானி கடமை, சவூதி அதாஹி (Adahi) திட்டம் மூலம் கட்சிதமாக நிருவகிக்கப் பட்டது. யாத்திரிகர்கள் ஒன்லைனில் பணம் செலுத்தி தங்களது குர்பானிகளை பதிவு செய்ய முடிந்தது. இந்த பலியிடல்கள் நவீன, சுகாதார முறையிலான அறுப்பு மையங்களில் மேற்கொள்ளப்பட்டு, அதன் இறைச்சிகள் உலகம் முழுவதும் தேவையுள்ள வறியவர்களுக்கு முறையாக விநியோகம் செய்யப்பட்டது.

மினாவில் கடமைகளை நிறைவு செய்த பிறகு, யாத்திரிகர்கள் மீண்டும் மஸ்ஜித் அல் ஹராமிற்குத் திரும்பி, ஹஜ் கடமைகளின் முக்கிய பகுதியாகிய “தவாஃப் அல் இபாழா” மற்றும் பின் புனிதப் பயணத்தின் முடிவைக் குறிக்கும் “தவாஃப் அல் விதா” வை நிறைவேற்றினர்.இதனுடன் அவர்களின் ஹஜ் பயணம் முற்றுப்பெற்றது. இந்த முழு காலப்பகுதியில், சவூதி அரசு சீரான நீர்விநியோகத்தை — குறிப்பாக மில்லியன் கணக்கான சம்ஸம் நீர் போத்தல்கள்— வழங்கப்பட்டது. தூய்மை மற்றும் மருத்துவ சேவைகள் இடையறாது செயல்படுத்தப்பட்டன.

மேலும், ஹஜ்ஜுக்கு முன் அல்லது பின் பல யாத்திரிகர்கள் சென்றடையும் மதீனாவின் மஸ்ஜித் அல் நபவியிலும் சவூதி அரேபிய அரசு முக்கியமான மேம்பாடுகளைச் செய்துள்ளது.
இந்த புனித பள்ளிவாசலில் இப்போது 780-க்கும் மேற்பட்ட புதிய குளிர்சாதனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன, மேலும் நிழல்தரும் வெளிக்கூடங்கள் (shaded courtyards) விரிவாக்கப்பட்டுள்ளன. நிரந்தர தூய்மை பராமரிப்பிற்காக ஸ்மார்ட் தானியங்கி துடைப்பு ரோபோக்கள் (smart cleaning robots) பயன்படுத்தப்பட்டன.
ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில், Four Seasons மற்றும் Radisson உள்ளிட்ட புதிய அதி தரமுடைய ஹோட்டல் திட்டங்கள் அறிமுகமாகி, 900-க்கும் மேற்பட்ட உயர்தர அறைகள் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சவூதி அரேபியாவின் “விஷன் 2030” இலக்குகளில் ஒன்றான ஒரு நவீன மயப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான, மற்றும் சூழலுக்கு ஏற்ற ஹஜ் சேவைகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை, சவூதி பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முஹம்மத் பின் சல்மான், இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரை வெற்றிகரமாக முடிவடைந்ததைக் குறித்து இதற்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் பாராட்டை தெரிவித்தார்.
இது, இரண்டு புனித மஸ்ஜித்களுக்கும் யாத்திரிகர்களுக்கும் சேவையாற்றுவதில் சவூதி அரேபியாவின் திடமான நம்பிக்கையின் பெருபேருகளாகும் என அவர் குறிப்பிட்டார். மன்னர் சல்மானின் பெயரில் மினா அரண்மனையில் நடைபெற்ற ஒரு வரவேற்பு நிகழ்வில் பேசிய அவர், “அல்லாஹ்வின் விருந்தினர்கள்” என அழைக்கப்படும் யாத்திரிகர்களது நலனுக்காக சவூதி அரேபியா எடுத்த முயற்சிகள் குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
ஹஜ் நடவடிக்கைகள் எளிதாகவும் அமைதியாகவும் நடைபெறுவதற்காக தங்களது கடமையை சிரப்பாக நிறைவேற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களையும் அவர் பாராட்டினார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜித்தாவில், இலங்கையின் மத விவகார அமைச்சர் கலாநிதி சுனில் செனவி மற்றும் சவூதி அரேபியாவின் ஹஜ் உம்ரா உப அமைச்சர் கலாநிதி அப்துல் பத்தாஹ் மஷாத் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட ஹஜ் ஏற்பாடுகளுக்கான ஒப்பந்தம் மூலமாக குறிப்பாக இலங்கையர்களுக்கு இவ் ஆண்டின் ஹஜ் பயணம் மேலும் சிறப்புமிக்கதாக இமைந்திருந்தது.
இந்த ஒப்பந்தம் மூலம், சிறப்பு ஒதுக்கீடுகள், விமானப் பயண ஏற்பாடுகள் மற்றும் துல்லியமான பணியமைப்புத் திட்டங்கள் ஆகியவை உறுதிசெய்யப்பட்டன.
இலங்கை ஹஜ் குழுமம் (Hajj Committee), உள்ளூர் பயண சேவை வழங்குநர்களை கட்டுப்படுத்தி, அவர்களின் சேவைகள் சீரான முறையில் நடைபெற திட்டமிட்ட ஒழுங்குகளை மேற்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும், புகார்களுக்கு பதிலளிக்கும் நோக்கில் புதிய மொபைல் செயலி (mobile app) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அனைத்து நடவடிக்கைகளும், இந்த ஆண்டின் ஹஜ் பயணத்த இலங்கையர்களுக்காக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு யாத்திரையாக மாற்றின.

சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களால் இலவசமாக வழங்கப்படும் மன்னரின் விருந்தாளிகள் ஹஜ் திட்டத்தின் கீழ் 1000 பலஸ்தீனியர்கள் உட்பட வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 2300 பேர் இம்முறையும் வழமை போல ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றிருக்கின்றனர்.
