தேச மக்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் ஒரு சிறப்புக் கருத்தரங்கு நேற்று (19) புத்தளம் காசிமியா அரபுக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை புத்தளம் மாவட்ட சர்வமதக் குழு ஏற்பாடு செய்ததுடன், தேசிய சமாதான பேரவையின் முழுப் பங்களிப்புடன் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.
தேசிய சமாதான பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஜசானியா ஜெயரத்ன தலைமையிலான இந்நிகழ்ச்சியில், தேசிய மனித உரிமைகள் பேரவையின் புத்தளம் மாவட்ட பொறுப்பாளர் சட்டத்தரணி அபுல் கலாம் முக்கிய உரையாற்றினார்.
அதில், அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள், அதன் பின்னணி, மற்றும் கடந்த காலங்களில் அதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தெளிவான விளக்கங்களை உதாரணங்களோடு விளக்கினார். மேலும், இந்த சட்டம் எவ்வாறு ஜனநாயக அடிப்படைகளையும் மனித உரிமைகளையும் பாதிக்கின்றது என்பதனையும் விளக்கினார்.
இச்சட்டம் இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் தேவையற்றதொரு நடவடிக்கையாகவே இருப்பதாகவும், இதனை மேலும் அமல்படுத்துவது பொருத்தமற்றது என்றும் இதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க அவசியமெனவும் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வு மிகுந்த பயனுள்ளதாக அமைந்ததோடு மனித உரிமைகள் குறித்தும் ஜனநாயக உரிமைகள் குறித்தும் பயங்கரவாத தடுப்புச்சட்டம் போன்ற ஒன்றினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் குறித்தும் மிக அழகாக அறிந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பாக அமைந்ததை கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் வெற்றிக்கு தேசிய சமாதான பேரவையும், புத்தளம் சர்வமதக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திருமதி முஸ்னியா தலைமையிலான குழுவினரும் பங்களிப்பு செய்திருந்தனர்.
புத்தளம் மாவட்ட சர்வமதக்குழுவைச் சேர்ந்த கௌரவ புத்தியாகம ரத்ன தேரர், கௌரவ பொலனன்றுவை சீலரத்ன தேரர், அருட்தந்தை ஆல்பர்ட் ராஜ், அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.