உதவி பொருட்களுடன் காசா நோக்கி சென்ற படகு தடுத்து நிறுத்தம்? கிரேட்டா தன்பர்க்கை கைது செய்தது இஸ்ரேல்

Date:

பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டிருக்கும் தாக்குதலுக்கு எதிராக பிரபல சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பர்க் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

இந்நிலையில், நிவாரண பொருட்களுடன் அவர் காசாவுக்குள் நுழைய முயன்ற நிலையில், இஸ்ரேல் கடற்படை அவரை கைது செய்திருக்கிறது.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண உதவிகளை இஸ்ரேல் திடீரென முழுவதுமாக நிறுத்தியிருந்தது.

சர்வதேச அளவில் இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் முழுவீச்சில் இந்த பணிகள் நடைபெறவில்லை.

எனவே கிரேட்டா தன்பர்க், பலஸ்தீனிய வம்சாவளியைச் சேர்ந்தவரும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிமா ஹசன் என 12 தன்னார்வலர்களுடன், நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு காசாவை நோக்கி கடல் வழியாக ‘மாட்லீன்’ எனும் படகில் புறப்பட்டார்.

இந்த பயணத்தை ‘சுதந்திர புளோட்டிலா கூட்டணி’ (Freedom Flotilla Coalition) என்கிற தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த வாரம் இத்தாலியின் சிசிலி கடற்கரையிலிருந்து பயணத்தை கிரேட்டா தன்பர்க் தொடங்கியிருந்தார்.

படகு இன்று அதிகாலை காசாவை நெருங்கி வந்தது. ஆனால் காசாவின் கடற்பரப்பு முழுவதும் இஸ்ரேலிய கடற்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

எனவே, கிரேட்டாவையும் அவருடன் வந்த தன்னார்வலர்களையும் கடற்படையினர் வழிமறித்து கைது செய்திருக்கின்றனர். இதனால் நிவாரண பொருட்களை காசாவுக்குள் கொண்டு சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கைது செய்யப்பட்ட கிரேட்டா விளம்பர நோக்கங்களுக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியிருக்கிறது.

கிரேட்டா மற்றும் அவருடன் வந்த 12 பேரும் விரைவில் அவரவர் நாடுகளுக்கு, நாடு கடத்தப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த போரில் ஏறத்தாழ 54,000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஐநா பாதுகாப்பு சபையில் கடந்த வாரம் போர் நிறுத்தம் குறித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அமெரிக்கா இந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்துவிட்டது.

மறுபுறம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செல்லும் நிவாரண பொருட்களை கடுமையாக குறைத்திருக்கிறது இஸ்ரேல்.

எனவே, கடும் பஞ்சம் காசாவை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இந்த பின்னணியில்தான் கிரேட்டா தன்பர்க் காசாவுக்கு பயணித்தார். அவரை இஸ்ரேல் தடுத்து நிறுத்தி தற்போது கைது செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...