இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையே அதிகரித்து வரும் போர் காரணமாக காயமடைந்தவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லையென இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் அதிகரித்து வரும் போர்ச் சூழலையடுத்து இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை குறித்து மேலும் கருத்து வெளியிட்ட இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார,
நாங்கள் வசிக்கும் டெல் அவிவின் வடக்கே உள்ள ஹெர்ஸ்லியா பகுதியில் ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலிய விமானப்படை மற்றும் இரும்பு டோம் வான் பாதுகாப்பு அமைப்பு தகர்த்து அழிக்கும்போது சுவர்கள் குலுங்கின.
வீடுகளின் கண்ணாடிகள் குலுங்கின. பல பகுதிகளில் கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் இலங்கையர்கள் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை தொடர்ந்து அமுலில் உள்ளது. டெல் அவிவ் சர்வதேச விமான நிலையமும் இஸ்ரேலிய வான்வெளியும் மூடப்பட்டுள்ளன.
இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு பயணித்த மூன்று இலங்கையர்கள் டுபாய் விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் தொடர்பில் டுபாயில் உள்ள துணைத் தூதரகமும், அபுதாபி விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் ஐந்து இலங்கையர்கள் தொடர்பில் இலங்கைத் தூதரகமும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
அவர்களுக்கு தற்காலிக தங்குமிட விசாக்கள் மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தற்போது விடுமுறையில் உள்ள அனைவரும் தங்கள் கடவுச்சீட்டின் நகலையும், இஸ்ரேலுக்குள் மீண்டும் நுழைவதற்காக வழங்கப்பட்ட விசாவின் நகலையும் தூதரகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.