யாழ்ப்பாணம் – செம்மணியில் “அணையா தீபம் ”மூன்று நாள் போராட்டம் இன்று ஆரம்பமாகிறது.
அதேநேரம், வலிகாமம் வடக்கில் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் நீதிகோரி சமூக ஆர்வலர்கள் அணையா தீபம் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
”தமிழ் மக்கள் பலரது உடல்களைத் தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்துச் செல்கின்றன. எனினும் இதற்கு உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
குறித்த விடயத்தை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதன் மூலம் உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ‘அணையா தீபம்’ எனப்படும் போராட்டம்” இன்று செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதேநேரம், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள இரண்டாயிரத்து 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி அந்த பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, செம்மணி அணையா தீபம் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திலும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.