காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையங்கள் கொலைக்களங்களாக மாறி வருகின்றன.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 27 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காசாவின் உதவி தேடுபவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மே 27 முதல் GHF முகாம்கள் நோக்கி வரும் மக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. 340 பேர் காயமடைந்துள்ளனர்.
காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால், கடந்த மூன்று மாதங்களாக உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
குழந்தைகள் கடுமையான பசியில் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காஸாவின் வடக்கு பகுதியில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 16 வீதத்தினர் ஊட்டச் சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
மருத்துவமனைகளில் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் மற்றும் பசிப்பிணியில் சிக்கிய குழந்தைகள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேலின் தடைகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள், உதவித் திட்டங்களை செயல்படுத்துவதில் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன. இதனால், மக்கள் தினசரி உணவுப் பொருட்கள், குறிப்பாக மாவு மற்றும் பிற அடிப்படை தேவைகளுக்காக போராடுகின்றனர்.
உணவைக் கட்டுப்படுத்தி மக்கள் மீது அழுத்தம் செலுத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் பட்டினியின் கொடுமையை மேலும் மோசமாக்குகின்றன.
காசாவில் வசிக்கும் 23 லட்சம் மக்களும் பசியின் விளிம்பில் உள்ளதாகவும், இது,மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு எனவும் ஐக்கிய நாடுகள் சபை வேதனை தெரிவித்துள்ளது.