சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் குண்டுவெடிப்பு: மதவழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்

Date:

-அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி)

சிரியாவின் டமாஸ்கஸ் இல் அமைந்துள்ள Mar Elyas Greek Orthodox Churchல் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை தற்கொலைத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. 22 பேர் கொல்லப்பட்டு பலர் காயப்பட்டுள்ளனர்.

‘இஸ்லாமியத் தீவிரவாதிகள்?’ அதனைச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இஸ்லாத்தின் மீது சேறு பூசுவதற்கும் இஸ்லாத்தை வன்முறை மார்க்கமாக காட்டுவதற்கும் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் சக்திகள் இதுபோன்ற தீவிரவாதிகளை முஸ்லிம் சமூகத்துக்குள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இத்தாக்குதலை முஸ்லிம்கள் செய்தார்களா அல்லது வேறு யாரும் செய்தார்களா என்பது ஒரு புறமிருக்க யார் செய்திருந்தாலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

2014 டிசம்பர் மாதக் காலப்பிரிவில் இலங்கையின் பல பள்ளிவாயில்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அக்காலப் பிரிவில் ஆக்கமொன்று எழுதப்பட்ட பேருவளை ஜாமிய்யா நளீமிய்யா இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி உஸ்தாத் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) அவர்களால் எழுதப்பட்ட ஆக்கத்தை வாசகர்களுக்கு தருகிறோம்….

இனங்களுக்கிடையில் புரிந்துணர்வின்மையும் மோதல்களும் ஏற்பட்டு வருவதன் விளைவாக தெய்வ நிந்தனை செய்யப்படுவதும் மதவழிபாட்டுத்தலங்கள் மீது அத்துமீறல்கள் மேற்கொள்ளப்படுவதும் மத சுதந்திரத்திற்கு தடைகள் விதிக்கப்படுவதும் சர்வ சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. இது மிகுந்த கவலையைத் தருகிறது.

பல்லின சமுதாயத்தில் மிகவும் உயர்ந்த பட்சமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய மத மற்றும் வழிபாட்டு சுதந்திரங்களுக்கு வேட்டுவைக்கப்பட்டு வருகிறது.

இது மனித மனங்களில் நிலவும் வன்மைக்கும் ஆவேசத்துக்குமான தெளிவான வெளிப்பாடுகள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இஸ்லாமிய நோக்கு

(1)உயிர், (2)உடமை, (3)மானம், (4)உடல், (5)மதம், (6)ஞானம் என்ற மனிதனுக்கான அடிப்படை ஆறு உரிமைகளையும் வழங்கி அவற்றை பாதுகாத்துக் கொடுக்க உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய ஷரீஆவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு “மஸாலிஹ்” என்று கூறப்படும்.

அந்த வகையில், நாகரீகமடைந்த – மனித விழுமியங்களுக்கு மதிப்பு வழங்கும் எந்தவொரு சமூகமும் இவற்றை பாதுகாக்கவன்றி அழிப்பதற்கு முயற்சிக்கமாட்டாது.

இஸ்லாமிய நோக்கில் எந்த வொரு மதத்தை சார்ந்தவர்களது மத நம்பிக்கைகளுக்கும் அவர்களது வழிபாட்டுத் தலங்களுக்கும், வழிபாடுகளுக்கும், கலாசார தனித்துவங்களுக்கும் ஊறு விழைவிக்கப்படக் கூடாது. இஸ்லாம் தவிரவுள்ள அனைத்து மதநம்பிக்கைகளும் வழிபாடுகளும் பிழையானவை என்று ஒரு முஸ்லிம் நம்பினாலும் தனது மதத்தை பிறரில் திணிப்பதற்கோ அதற்காக எவரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலாத்காரப்படுத்துவதற்கோ அவனுக்கு உரிமை வழங்கப்படவில்லை.

“மார்க்கத்தில் பலாத்காரமில்லை’’, “அவர்கள் அழைத்துப் பிரார்த்திக்கின்ற அல்லாஹ் அல்லாதவர்களை(தெய்வங்களை) நீங்கள் ஏச வேண்டாம். அவ்வாறு நீங்கள் ஏசும்பட்சத்தில் அதன் விளைவாக எவ்வித அறிவுமின்றி அத்துமீறி அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள்”(6:108) என அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்.

அந்தவகையில், மார்க்கப் பிரசாரம் பலாத்காரமாக மாறுவதை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. “அவர்களுடன் நீங்கள் மிகவும் அழகிய முறையில் கருத்துப் பரிமாறுங்கள்”.(16:125) என்று கூறியதன் மூலம் பிரசாரத்துக்கான வழிமுறையானது ‘அழகியது’என்ற நிலையிலிருந்து “மிகவுமே அழகியது” என்ற பண்பைப் பெற்றிருக்க வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

‘மிகவும் அழகிய வழிமுறை’ எனும் போது ஆதாரங்களோடு பேசுவது, அறிவு பூர்வமாகவும் இங்கிதமாகவும் இனிமையாகவும் உரையாடுவது, பிறருக்கான மதிப்பையும் மரியாதையையும் கொடுத்து கருத்துப் பரிமாறுவது போன்ற பண்புகளை அது பெற்றிருக்க வேண்டும் என்பதனைப் புரிய முடிகிறது.

மிகவுமே அழகிய வழிமுறைகளில் ஒரு முஸ்லிம் தனது பிரசாரத்தை மேற்கொண்ட பின்னரும் பிற சமயத்தவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர்களைப் பலாத்காரப் படுத்தாமல் அவர்களை முழுமையாக சகித்துக் கொள்வதுடன் அவர்களுடன் சகவாழ்வை மேற்கொள்வது கடமை என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு குர்ஆனின் பல வசனங்கள் உதாரணமாக அமைகின்றது.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த பின்னர் யூதர்கள், கிறிஸ்தவர்கள், சிலை வணங்கிகள் அனைவரையும் ‘தீம்மீ’ க்கள் (பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்) எனப் பெயரிட்டு மதீனா சாசனத்தின் கீழ் அவர்களுக்கான சகல உரிமைகளையும் வழங்கினார்கள்.

அவரவர் தத்தமது மத நம்பிக்கைக் கோட்பாடுகளிலேயே தொடர்ந்தும் இருப்பதற்கும் வழிபாடுகளை மேற்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டது.

குர் ஆனின் (22:40) இல் இடம் பெற்றுள்ள வசனத்தில் இஸ்லாமிய ஆயுதப் போராட்டத்தின் நோக்கங்களில் ஒன்று பிற மத ஆலயங்களைப் பாதுகாப்பதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாலயங்கள் மீது எவரும் அத்து மீறல் செய்யும் போது அவற்றை தடுத்து நிறுத்த முஸ்லிம்கள் முன் வருவார்கள் என்பது அந்த வசனம் உணர்த்தவரும் கருத்தாகும்.

“மனிதர்களின் சிலரைக் கொண்டு சிலரை அல்லாஹ் தடுக்காதிருந்தால் கிறிஸ்தவ பாதிரிகள் தங்கும் மடங்களும் கிறிஸ்தவ தேவாலயங்களும் யூதர்களது வழிபாட்டுத் தலங்களும் அல்லாஹ்வின் நாமம் அதிகமாக ஞாபகப்படுத்தப்படும் பள்ளிவாசல்களும் இடித்து நொறுக்கப்பட்டிருக்கும்.

அல்லாஹ் தனக்கு உதவி செய்பவர்களுக்கு கட்டாயமாக உதவி செய்வான், நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன், யாவரையும் மிகைத்தவன்”(22:40) என அல்லாஹ் கூறுகிறான்.

இந்த வசனம் அற்புதமான கருத்துக்களை முன்வைக்கின்றது. இதற்கு விளக்கம் கூறும் கலாநிதி முஸ்தபா சிபாஈ அவர்கள், ‘ஜிஹாதின் நோக்கம் தேவாலயத்தின் இடிபாடுகள் மீது பள்ளிவாசல்களை அமைப்பதல்ல. மாறாக தேவாலயத்துக்குப் பக்கத்தில் பள்ளிவாசலை அமைப்பதாகும்.” என்கிறார்.

ஸையித் குதுப் இவ்வசனத்தை விளக்குகையில், “மேற்படி குர்ஆன் வசனத்தில் அல்லாஹ்வின் நாமம் அதிகம் உச்சரிக்கப்படும் பள்ளி வாசல்களைப் போல வேறு ஏனைய சமயத்தவரது வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

பள்ளி வாசல்களைப் பற்றி குறிப்பிடுவதற்கு முன்னரே பிற வழிபாட்டுத்தலங்கள் பற்றிக் குறிப்பிட்டிருப்பது அவற்றின் மீது அத்து மீறுவதை தடுப்பதை வலியுறுத்துவதாகும். அப்படியாயின், இது வழிபாட்டு உரிமையை அனைவருக்கும் நிச்சயப்படுத்த விடுக்கப்படும் அழைப்பாகும்.

இஸ்லாம் தன்னைப் பின்பற்றுவோருக்கு மட்டும் வழிபாட்டு உரிமையை விரும்பாமல் தன்னுடன் முரண்பட்டுள்ள மதங்களைச் சார்ந்தோருக்கும் அதனை நிச்சயப்படுத்துகிறது. மேலும், இந்த உரிமையை சகலருக்கும் பெற்றுக் கொடுக்க அதற்காகப் போராடும் படியும் முஸ்லிம்களைக் கட்டாயப்படுத்துகிறது.

இந்தக் கொடியின் கீழ் போராட அவர்களுக்கு அனுமதிக்கிறது. இதன் மூலம் அது தன்னை ஒரு சுதந்திரமான சர்வதேச உலக ஒழுங்கு என்பதை வலியுறுத்துகிறது’ என்கிறார்.

முஸ்லிம்கள் பிற நாடுகளை வெற்றி கொண்ட சந்தர்ப்பங்களி லெல்லாம் அவ்வப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்களது மத உரிமைகளுக்கு பூரண உத்தரவாதங்களை வழங்கியுள்ளார்கள். அதற்கான பல சான்றுகள் இருப்பினும் அவற்றில் ஒன்றை இங்கு குறிப்பிடலாம்,

உமர் (ரலி) அவர்களது கிலாபத்தின் போது ஜெரூஸலம் கைப்பற்றப்பட்ட போது அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு அவர்கள் வழங்கிய உத்தரவாதம் வருமாறு :-

“இது விசுவாசிகளின் தலைவர் உமர், ‘ஈலியா’ மக்களுக்கு வழங்கும் பாதுகாப்பாகும். அவர்களுக்கும் அவர்களது சொத்துக்களுக்கும் தேவாலயங்களுக்கும் சிலுவைகளுக்கும் அவர்களது மார்க்கத்தின் ஏனையவற்றுக்கும் அவர் பாதுகாப்பு வழங்கியுள்ளார்.

அவர்களது தேவாலயங்களில் எவரும் குடியிருக்கலாகாது. அவை இடிக்கப் படலாகாது. கட்டங்களின் பகுதிகள் குறைக்கப்படலாகாது. அவற்றிற்குரிய காணிகளோ சிலுவைகளோ அவர்களது செல்வங்களோ குறைக்கப்படலாகாது.

அவர்களது மார்க்கத்திலிருந்து வெளியேறும் படி அவர்கள் பலாத்காரப்படுத்தப்படமாட்டார்கள்.'(இப்னு ஹிஷாம்-சீரத்துன்நபி – 4/181)

முஸ்லிம்கள் புதிதாக வெற்றி கொண்டு ஆட்சி நடாத்திய எகிப்து, லிபியா உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளாக இருக்கட்டும், இந்தியா, ஸ்பெய்ன், இந்தியா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளாக இருக்கட்டும் அவற்றில் அன்று முதல் இன்று வரை முஸ்லிம் அல்லாதவர்கள் வாழ்ந்து வருவதாயின் அவர்களது வழிபாட்டுத் தலங்கள் இன்றும் பாதுகாப்பாக இருப்பதுடன் அவற்றில் வழிபாடுகளும் நடந்து வருவதாயின் அது இஸ்லாத்தின் மத சகிப்புத் தன்மை (RELIGIOUS TOLERANCE ) க்கான ஆதாரங்களாகும்.

ஆனால், வரலாற்றில் ஒரு சில முஸ்லிம் ஆட்சியாளர்கள் அல்லது தளபதிகள், தனி மனிதர்கள் பிற மதஆலயங்களுக்கு ஊறு விளைவித்திருந்தால் அதனை வைத்து இஸ்லாத்தை எவரும் மதிப்பீடு செய்வது முறையல்ல.

பாமியான் புத்தர் சிலை விவகாரமும் அப்படித்தான் நோக்கப்பட வேண்டும். அது அவரவரது தனிப்பட்டமுடிவுகளாகவே பார்க்கப்பட வேண்டும். தலதா மாளிகையை சிலர் தாக்கினார்கள் என்றால் அவ்வாறு தாக்கியவர்கள் சார்ந்திருக்கும் அவர்களது மதம் தான் அவர்களை அதற்காகத் தூண்டியது என எவரும் பார்க்கலாகாது.

அந்த மதங்களது வேதங்கள் அப்படிச் செய்யும் படி கூறியுள்ளனவா என்பதையே பார்க்க வேண்டும்.

அந்த வகையில், இஸ்லாம் பிறருக்கான மத சுதந்திரத்திற்கு உத்தரவாதமளிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் மதக்கிரியைகள் கூட அச்சமற்ற, சுதந்திரமான சூழலில் மேற்கொள்ளப்பட இடமளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இதற்காக ஏகப்பட்ட சான்றுகள் உள்ளன.

வரலாற்றுத் தவறுகள்

எனவே, ஒரு காலத்தில் தலதா மாளிகையின் மீதும் ஸ்ரீமகா போதியின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் முதல் புத்தகயாவிலுள்ள பௌத்தர்களது புனிதத் தலத்தின் மீதான தாக்குதல்கள், கிறிஸ்தவ தேவாவலயங்கள் மீதான தாக்குதல்கள் வரை நாம் வன்மையாகக் கண்டிக்கறோம்.

இவற்றை யார் எந்த நோக்கங்களோடு செய்திருந்தாலும் அவை மகாபெரும் தவறுகளாகும்.

அதேவேளை, வடக்கு கிழக்கில் நடந்த யுத்தத்தின் போது பல பள்ளிவாயல்களும் விகாரைகளும் கோயில்களும் தேவாலயங்களும் சேதப்படுத்தப்பட பலர் காரணமாக அமைந்தனர். இது இஸ்லாம் கூறும் யுத்த தர்மத்துக்கு முரணான செயலாகும்.

பள்ளிவாயல்கள் பற்றிப் பேசும் போது புலிகள் பள்ளிவாயல்களை சேதப்படுத்தியதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. பள்ளிவாயல்களுக்குள் தொழுதுகொண்டிருந்த நிராயுத பாணிகளைக் கூட கொன்றார்கள். இது புலிகள் தரப்பினர் செய்த கண்டிக்கத்தக்க செயலாகும்.

அதேவேளை, அனுராதபுரதிலிருந்த ஸியாரம் தாக்கப்பட்டமையிலிருந்து அண்மைக் கால சம்பவங்கள் ஆரம்பித்தன. முஸ்லிம்களது பள்ளிவாயல்களும் தாக்கப்பட்டு வருகின்றன. தம்புள்ளை, கேகாலை, மஹியங்கனை, தர்கா நகர், தெல்லியாகொன்ன, நிகவெரடிய போன்ற பல இடங்களிலுள்ள பள்ளிவாயல்களும் திட்டமிடப்பட்ட குழுக்களால் தாக்கப்பட்டன.

முஸ்லிம்கள் உண்பதற்கு தடுக்கப்பட்ட பன்றியின் உடற்பாகங்கள் மஹியங்கணைப் பள்ளிவாயலுக்குள் போடப்பட்டமை மத வைராக்கியத்தின் உச்சநிலைக்கு ஆதாரமாகும்.

முஸ்லிம்களது தனித்துவங்களாகவும் வரலாற்றுத் தொன்மைக்கு சான்றாக உள்ள அடையாளச் சின்னங்களாகவும் இருக்கும் பள்ளிவாயல்கள் மீதான இந்த அத்துமீறல்களை அவர்கள் தமது உயிர்கள், உடைமைகள் மீதான தாக்குதலை விட கொடூரமானவையாகவே கணிக்கிறார்கள்.

மியன்மாரிலும் பிரித்தானியாவிலும் உள்ள பள்ளிவாயல்கள் தாக்கப்படும் அல்லது தீக்கிரையாக்கப்படும் காட்சிகளை முஸ்லிம்கள் பார்க்கும் போது அது அவர்களது உள்ளங்களுக்கு தீ மூட்டப்படுவதாக உணருகிறார்கள்.

மனித விழுமியங்களும் பள்ளிவாயல்களும்

முஸ்லிமின் வாழ்வோடு பள்ளிவாயல்கள் பின்னிப் பிணைந்தவை. ஐவேளை தொழுகையை ஒரு முஸ்லிம் பள்ளிவாயலில் நிறைவேற்ற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. வீட்டில் தொழுவதை விட பள்ளியில் தொழுவதால் 27 மடங்கு நன்மை கிடைக்கும் என முஹம்மத்(ஸல்) கூறியிருக்கிறார்கள்.

பள்ளி என்பது முஸ்லிம் சமூகத்தின் இதயமாகவும் பல்துறை சார்ந்த நடவடிக்கைகளின் மத்திய தளமாகவும் கணிக்கப்படுகின்றது. அங்கு முழுக்க முழுக்க மனிதனின் ஆன்மீக, ஒழுக்க மேம்பாட்டுக்கான போதனைகளும் கிரியைகளும் மாத்திரமே நடை பெறுகின்றன. கடும் போக்குக் கொண்டவர்களைக் கூட நிதானப்படுத்தும் இடங்களாக பள்ளிகள் திகழ்கின்றன.

பள்ளிகள் என்பவை இழிகுணங்கள் கொண்டவர்களை மகத்தான குண நலன்கள் கொண்டவர்களாக மாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டன. “நிச்சயமாக தொழுகை மானக் கேடானவற்றிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தடுக்கும்” (29;:45) என பள்ளிக்குள் இடம்பெறும் பிரதானமான கிரியையான தொழுகையைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

அங்கு இடம் பெறும் மற்றுமொரு கிரியையான ‘திக்ர்’ எனப்படும் இறை தியானம் பற்றிக் கூறும் போது “அறிந்து கொள்ளுங்கள் இறைதியானம் (ஞாபக மூட்டலின்) மூலம் உள்ளங்கள் அமைதியடைகின்றன’ .(13:28) எனக் கூறுகிறான்.

அந்தப் பள்ளிவாயில்களுக்குள் இடம்பெறவேண்டிய பேச்சுக்கள் எப்படியாக அமையவேண்டும் என்று கூறும் போது அல்லாஹ்: “(பள்ளிவாயில்களாகிய) இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.

(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள். அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான். (24:36,37,38)

எனவே, மேலுள்ள வசனங்களைப் பார்க்கின்ற போது வணக்கங்களும் இறை ஞாபகமூட்டல்களுமே பள்ளிகளில் இடம்பெறும். அங்கு இருப்பவர்களது உள்ளங்களில் உலக மோகம் இருக்கவே இருக்காது. அவர்கள் மறுமை நாளில் விமோசனம் கிட்டுமா என்று தான் சதாவும் சிந்தித்துக் கொண்டிருப்பார்களே தவிர, சிலர் கூருவது போன்று பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என சிந்திக்க மாட்டார்கள்.அப்படி அவர்கள் சிந்தித்தால் அவர்களுக்கு அவர்களது இறைவன் தருவதாக 38 ஆம் வசனத்தில் வாக்களிக்கும் மிக அழகான கூலியை அவர்கள் எப்படிப் பெற முடியும்?

ஏழை எளியவர்களது துயர் துடைக்க உதவும் ‘ஸகாத்’ எனப்படும் பணத்தின் மீதான கடமையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளும் பள்ளிவாயல்களில் நடை பெறும். அதன் பலாபலன் பற்றி அல்லாஹ் குர்ஆனில்: “நீங்கள் அவர்களது செல்வத்திலிருந்து அவர்களது தர்மப் பணத்தை பிரித்து எடுங்கள்.

அதன் மூலம் நீங்கள் அவர்களை தூய்மைப்படுத்தி பரிசுத்தப்படுத்துகிறீர்கள். அதன் மூலம் நீங்கள் அவர்களை தூய்மைப் படுத்துகிறீர்கள்” (9: 103) எனக் குறிப்பிடுகிறான்.

எனவே, பள்ளி வாயல்களுக்குள் இடம் பெறும் வழிபாடுகளும் கிரியைகளும் மனிதர்களைப் பாவங்கள், மனித விரோதச் செயல்களில் இருந்து தூரமாக்குகின்றன. உள்ளத்தில் நிம்மதியைத் தோற்றுவிக்கின்றன. உள நோய்களான அகம்பாவம், கஞ்சத்தனம் போன்றவற்றிலிருந்து ஆத்மாவைப் பாதுகாக்கின்றன. எனவே தான் முஸ்லிம்கள் தாம் போய் குடியமரும் இடங்களிலெல்லாம் பள்ளிகளை அமைத்துக் கொள்கிறார்கள். அந்தவகையில் பார்த்தால், பள்ளிவாயில்கள் என்பவை பயங்கரவாதத்துக்கான ’பங்கர்’ களாக இருக்கின்றன என்று ஒரு தடவை ஒரு மத குரு கூறியிருப்பது அவர் இஸ்லாம் பற்றிக் கொண்டுள்ள தப்பபிப்பிராயத்தின் வெளிப்பாடாகும்.

அகற்றப்படவேண்டியவை ஆலயங்களா?

எனவே, இப்படியாக போற்றத்தக்க – வேண்டத்தக்க கைங்கரியங்களுக்குக் காரணமாக அமையும் புனித ஸ்தலங்களான பள்ளிவாயல்கள் நிர்மாணிக்கப்பட ஊக்குவிப்பு வழங்கப்பட வேண்டுமே தவிர அவை அகற்றப்படக்கூடாது.

அகற்றப்பட வேண்டியவை பள்ளிவாயல்களோ ஆலயங்களோ அன்றி மனிதர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு தூண்டுதலாக அமையும் இடங்களான மது பானசாலைகளும், சூதாட்ட விடுதிகளும், ஆபாச சினிமாக் கொட்டகைகளுமாகும். அவற்றால் கொலைகள் இடம் பெறுகின்றன.

உடல் நலத்துக்கு கேடு விளைகிறது, குடும்பங்கள் சிதைவடைகின்றன. பாலியல் வக்கிரங்கள் நடக்கின்றன. பொருளாதாரம் குட்டிச் சுவராகின்றது.

எனவே, மனிதர்களின் ஆன்மீக விமோசனத்துக்கும் விழுமியங்களது வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கன. அவற்றைச் செய்பவர்கள் நிச்சயமாக எந்தவொரு மதத்தையும் மிகச் சரியாக விசுவாசித்தவர்களாக இருக்கமுடியாது. அவர்களது உள்நோக்கங்கள் நல்லவையாக இருக்க நியாயமில்லை.

சுய நலன்களுக்காக மதக் குழுக்களை மோத விட்டு தத்தமது இழிவான இலக்குகளை அடைந்து கொள்ள முயற்சிப்பவர்கள், தாம் மகா பெரிய தவறுகளை செய்து கொண்டிருப்பதை உணர வேண்டும். ஆகவே, நாட்டில் சௌஜன்யமும் சமாதானமும் நிலவ வேண்டுமாயின் சகல மதத்தவரதும் மத உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதேவேளை, ஒவ்வொரு மதத்தையும் அனுஷ்டிப்பவர்கள் தத்தமது மதக்கிரியைகளை பிறருக்குத் தொந்தரவாகவும் அமைத்துக் கொள்ளலாகாது. குறிப்பிட்ட ஓர் இடத்தில் பள்ளிவாயலொன்றையோ அல்லது வேறொரு மத வழிபாட்டுத் தலமொன்றையோ அமைப்பதற்கு முன்னர் அந்த இடத்திற்கு அது தேவை தானா என்பதை நன்கு சிந்தித்த பின்னரே முடிவெடுக்க வேண்டும் பாங்குக்காகவும் உபந்நியாசங்களுக்காகவும் ‘பிரித்’ ஓதுவதற்காகவும் ஓலி பெருக்கிகளை பாவிப்பதில் ஏற்பட்டுள்ள ஒழுங்கீனங்களும் கூட இவ்வகையில் கண்டிக்கத் தக்கவையாகும்.

இந்த இழுபறிகளையும் பதட்டநிலைகளையும் களைந்து சுமுகமான ஒரு சூழலை உருவாக்குவது காலத்தின் அவசியத் தேவையாகும். இதற்காக மதத்தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள் ஏற்பாடுசெய்யப்படவேண்டும். அதிகாரங்களில் இருப்பவர்கள் தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்ற வேண்டும். காலம்கடந்த ஞானமோ அசமந்தப்போக்கோ பாரிய விளைவுகளையே தோற்றுவிக்கும்.

பல நிறங்களைக் கொண்ட மலர்களால் ஜொலித்துக் கொண்டிருக்கும் பூந்தோட்டம் போல் பல்லினங்களைக் கொண்ட நாடு அபிவிருத்தியை நோக்கி நகர நாம் ஒவ்வொருவரும் எம்மால் முடியுமான பங்களிப்பை நல்குவோமாக! அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...