அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்ற சட்ட நடைமுறைக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடரும் மூன்றாவது நாள் போராட்டங்களை அடக்குவதற்கு உதவும் வகையில், லாஸ் ஏஞ்சல்ஸின் வீதிகளில் கலிபோர்னியா பாதுகாப்பு
படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான பின்னணியிலேயே அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றியும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் ட்ரம்பின் தீர்மானத்திற்கமைவாக கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக தேசிய பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவர்கள் எனவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு படையினரை மீள அழைக்குமாறு கலிபோர்னிய ஆளுநர் கெவின் நிவ்சம் ஜனாதிபதி ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்ப் தலையீடு செய்யும் வரை, தமது பிராந்தியத்தில் பிரச்சினை இருக்கவில்லையென அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை இறையாண்மை மீதான பாரிய மீறல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அமைதியாக செயற்படுமாறும் கலிபோர்னிய ஆளுநர் கெவின் நிவ்சம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.