இலங்கையில் அரசாங்கத்தின் அனுமதியுடன் 2 இஸ்ரேல் கலாசார நிலையங்கள்: அமைச்சர் சுனில் செனவி

Date:

இலங்கையில் இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்களென நான்கு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த பதிவு கம்பனிகள் சட்டத்தின் கீழே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பதிவு செய்யப்படாமல் இருக்கும் ஏனைய சட்டவிரோத நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போமென புத்தசாசன, சமய மற்றும் கலாாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (05) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ‘இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்கள் இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ளனவா? அவை தாபிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவை? அவற்றுக்கு சட்ட ரீதியாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேட்டிருந்தார்.

அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

இலங்கையில் இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்கள் என பொத்துவில், எல்ல, வெலிகம மற்றும் திபிரிகஸ்யாய ஆகிய பிரதேசங்களில் தாபிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தாபிக்கப்பட்டுள்ள சமய மற்றும் கலாசார நிலையங்களில் பொத்துவில் மற்றும் திபிரிகஸ்யாய ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையங்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. மற்ற இரண்டு நிலையங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பொத்துவில் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையத்தை பதிவு செய்யாமல் இருப்பதற்கான காரணம் தெரியாது.

கிராம சேவகர் அந்த பகுதியில் துறை பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், அதுதொடர்பில் தகவல் பெற்றுக்காெள்ள அங்கு யாரும் இருக்கவில்லை என்பதால் பொது மக்களிடமிருந்து தகவல் பெற்றுக்கொண்டிருக்கிறார். அதன்போது அவர்கள், இது தனியார் காணி என்றும். அதனால் அதனை பதிவு செய்யாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் இஸ்ரேல் இனத்தவர்கள் சுற்றுலா பயணிகளாக இந்த பிரதேசத்துக்கு வந்தால். இந்த மத நிலையத்தில் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தற்போது அவர்கள் இலங்கையில் இருந்து சென்றுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்ததாக கிராம சேவகரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் திம்பிரிகஸ்யாய பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டடம் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் மத நிலையமாகவோ நிறுவனமாகவோ பதிவு செய்யப்பட்டதில்லை. பூஜை வழிபாட்டுக்காக என தெரிவித்து இஸ்ரேல் இனத்தவர்கள் 4பேர் அங்கு தங்கி இருந்துடன் வெளிபிரதேசங்களில் இஸ்ரேல் இனத்தவர்கள் மத வழிபாட்டுக்காக சம்பந்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்டுள்ள வெளிகம மற்றும் எல்ல நிறுவனங்கள், நிறுவனங்கள் பதிவு செய்யும் பதிவாளர் காரியாலயத்திலே 2024- 4-22ஆம் திகதி பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்றார்.

இதன்போது மேலதிக கேள்வி ஒன்றை எழுப்பி முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குறிப்பிடுகையில்,

கொழும்பு பிரதேசத்தில் தற்போது இரண்டு இடங்களில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. அதில் ஒன்று கொழும்பு, 7 ரெட் சினமனுக்கு முன்னால் இருக்கும் ரபாப் ஹவுஸ். தெஹிவளை அல்விஸ் பிளேஸிலும் ஒரு நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு நிலையங்களும் சட்ட பூர்வமானதல்ல என்றும் பதிவு செய்யப்படவி்ல்லை என்றும் பிரதமர் கடந்த டிசம்பர் மாதம் இந்த சபையில் தெரிவித்திருந்தார்.ஆனால் அந்த இரண்டு நிலையங்களும் அரசாங்கத்தின் பொலிஸ் மற்றும் விசேட அதிரடைப்படை பாதுகாப்புடனே செயற்பட்டு வருகின்றன. சட்ட ரீதியற்ற இந்த மத நிலையங்கள் தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? என கேட்கிறேன் என்றார்.

அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், இலங்கையில் நான்கு மதங்கள் இருக்கின்றன. அவற்றுக்கென திணைக்களங்கள் இருக்கின்றன. அவை பதிவு செய்யப்படுவதற்கான முறையொன்று இருக்கிறது.ஆனால் இஸ்ரேலுக்கு சொந்தமான இந்த கட்டடங்கள் கம்பனி சட்டத்தின் கீழே பதிலாகி இருக்கின்றன.

அவ்வாறு பதிவு செய்யப்படும்போது ஹோட்டல் அல்லது சிற்றுண்டிச்சாலை வியாபார நிலையம் போன்ற வடிவமே இருக்கும். ஆனால் அங்கு வேறு விடயங்கள் இடம்பெறுவதையே காணக்கூடியதாக இருக்கிறது.

இவற்றின் தகவல்களை சேகரிப்பதும் கடினமான விடயமாகும். அது தொடர்பான தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். அதேநேரம் இந்த நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவே எனக்கு தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கொழும்பு 7இல் உள்ள நிலையத்துக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை அகற்றப்பட்டுள்ள போதும் பொலிஸ் பாதுகாப்பு தற்போதும் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான மத்திய நிலையங்கள் ஊடாக இஸ்ரேல் எமது நாட்டுக்குள் மறைமுகமாக நுழைந்திருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது.

நாடுகளுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்துகின்ற, மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கின்ற, காசாவில் இன அழிப்பை மேற்கொண்டுவரும் இஸ்ரேல் தொடர்பில் அரசாங்கம் ஏன் இலகுவான முறையில் நடவடிக்கை எடுக்கிறது? அத்துடன் இந்த சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு என்னும் எவ்வளவு காலம் தேவைப்படுகிறது என கேட்கிறேன்.

அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், யூதர்கள் எமது நாட்டுக்கு மத நடவடிக்கைகளுக்குதான் வருகிறார்கள் என எங்களுக்கு உறுதியாக தெரிவிக்க முடியாது. அவர்கள் சுற்றுலா பயணிகளாகவும் நாட்டுக்குள் வருகிறார்கள். எனவே இந்த சட்ட விரோத கட்டிடங்கள் தொடர்பில் இருக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

என்றாலும் சுற்றுலா பயணிகளாக அவர்கள் நாட்டுக்குள் வரும்போது, சுற்றுலா பயணிகளாக அவர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகளை நாங்கள் செய்துகொடுக்க வேண்டி ஏற்படுகிறது என்றார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...