புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவுக்கு இலங்கையின் காதி நீதவான்களின் சம்மேளனம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது.
காதி நீதிமன்ற அமைப்பைப் பாதிக்கும் வகையில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அவசரமான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இலங்கை காதி நீதவான்கள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி எம். இஃப்ஹாம் யெஹியாவின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், நீதித்துறையின் 49வது பிரதம நீதியரசராக பதவி உயர்வு பெற்றமைக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள அதே வேளையில், நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் திறம்பட நீதி வழங்குவதில் உள்ள முக்கிய சவால்களைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் பிரதம நீதியரசருக்கு சுட்டிக் காட்டியுள்ளனர்.
நீதிச் சேவைகள் ஆணைக் குழுவினால் (JSC) இலங்கை முழுவதும் தற்போது 65 காதி நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,
முன்னாள் பிரதம நீதியரசர் பிரியந்த ஜெயவர்தன, முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதிச் சேவைகள் ஆணைக் குழுவிடமும் இதற்கு முன்னர் முறைப்பாடுகள் முன்வைக்கப் பட்ட போதிலும் தமக்கு தீர்வுகள் எதுவும் கிட்டவில்லை என இந்தக் கடிதம் மூலம் எடுத்துக்காட்டியுள்ளனர்.
தங்கள் முந்தைய முறைப்பாடுகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மௌனம் காக்கப்பட்டு வருவதனாலேயே இது தொடர்பில் கவனத்தை ஈர்க்க வேண்டி வந்ததாகவும் காதிகள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
பல மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் தாபரிப்பு கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பான தற்போதைய நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைகள் பற்றி அறிந்திருக்கவில்லை எனவும், சில சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரர்கள் தவறாக நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர் அல்லது பிடி விராந்துகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் இது நடைமுறைகளுக்கு மாறாக உள்ளது எனவும் சம்மேளனம் சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும், வழக்குகளை சிறப்பு காதிகளுக்கு மாற்றுவதில் பெரும்பாலும் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை தாமதமாவதாகவும் நீதி தாமதப்படுவதற்கு காதி நீதிபதிகள் மீதே நியாயமற்ற முறையில் பழி சுமத்தப்படுவதற்கு இது வழிவகுக்கிறது எனவும் சம்மேளனத்தின் தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேல்முறையீட்டு நடவடிக்கைகளின் போது பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் கடிதம் எடுத்துக் கூறி யுள்ளது. மேல்முறையீட்டில் உள்ள விவாகரத்து அல்லது தாபரிப்பு தொடர்பான வழக்குகளின் போது, காதிகள் சபைக்கு பெரும்பாலும் இடைக்கால தாபரிப்பு கொடுப்பனவுகளை உத்தரவிட முடியாமல் போகிறது, இதனால் பாதிக்கப்படக்கூடிய பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நீண்ட காலத்திற்கு நிதி உதவி கிடைக்காமல் போகிறது.
இது பெரிய ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது, பெண்கள் தரப்பினர் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதிக்கப்படுகையில் ஆண் தரப்பினர் இஷ்டத்துக்கு செயற்பட வழியமைக்கிறது எனவும் சம்மேளனத்தின் தலைவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
காதி நீதிபதிகளுக்கான தொடர்ச்சியான தொழில்துறைப் பயிற்சி இல்லாமை தொடர்பிலும் கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது, கடந்த பத்து ஆண்டுகளில் புதியவர்களுக்கான நிகழ்ச்சிகள் நான்கு மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து காதி நீதிபதிகள் சம்மேளனம் பயிற்சிகளையும் வழிகாட்டல் அமர்வுகளையும் நடத்த அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தக் கடிதத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கென விரிவுரை மண்டபங்கள், நிதியுதவிகள், சான்றிதழ்கள் போன்றவற்றையும் நீதிச் சேவைகள் ஆணைக்குழு பெற்றுத் தர வேண்டும் என்றும் இதற்கான கற்கை நெறி ஒருங்கிணைப்பாளர்களை தம்மால் ஏற்பாடு செய்ய முடியும் என்றும் சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், 2008 முதல் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் இல்லாததையும், நீதிபதிகளுக்கு ரூ. 7,500 வும் அலுவலகப் பணிகளுக்காக ரூ. 6,250 வும் மட்டுமே வழங்கப்படுவதாகவும் போதுமான மாதாந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை எனவும் காதிகள் சம்மேளனம் பிரதம நீதியரசருக்கு எடுத்துக்காட்டியுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவும் நீதித்துறை கடமைகளை திறம்படச் செய்யும் அவர்களின் திறனை மேம்படுத்தவும் பயணக் கொடுப்பனவு உட்பட கொடுப்பனவுகளை மறுபரிசீலனை செய்யுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காதி நீதிமன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதம நீதியரசருடன் விரிவாக கலந்துரையாடுவதற்கான அவகாசத்தையும் காதிகள் சம்மேளனத் தலைவர் சட்டத்தரணி இஃபாம் யஹ்யா கோரியுள்ளார்.
புதிய பிரதம நீதியரசரின் தலைமையின் கீழ், நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் இலங்கை முழுவதும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் நலனை நாடி காதிகள் அமைப்பின் கண்ணியமும் செயல்திறனும் மீட்டெடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் காதி நீதிபதிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.