இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 517 மில்லியன் சவுதி ரியால்களை (SAR) மறுசீரமைப்பதற்கு சவூதி மேம்பாட்டு நிதியத்துடன் (SFD) இருதரப்பு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட 516.95 மில்லியன் சவூதி ரியால் தொகை, முன்னதாக சவூதி அரேபியாவால் சலுகை அடிப்படையிலான கடனாக வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிதி நாடு முழுவதும் உள்ள முக்கிய அபிவிருத்தித் திட்டங்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன, 2022 ஏப்ரலில் இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த பிறகும் சவூதி அரேபியா தொடர்ந்து நிதி உதவி அளித்தது என அமைச்சு தெரிவித்தது.
பொருளாதார ரீதியாக இலங்கை மிகவும் சவால்களை எதிர்நோக்கிய காலகட்டத்தில் சவுதி அரேபியா வகித்த முக்கிய பங்கை நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் பாராட்டியுள்ளது.
“சவூதியின் இந்த உதவி, அபிவிருத்தித் திட்டங்களை இடையூறுகள் இல்லாமல் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியதோடு இந்த கடன்கள் தொடர்பாக தற்போது வழங்கப்பட்டுள்ள சலுகைகள் நாட்டின் கடன் சுமைக்கு பெரியளவில் நிவாரம் வழங்கியுள்ளது எனவும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை சார்பில் திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமாவும், சவூதி அரேபியா சார்பில் SFD இன் தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அப்துல் ரஹ்மான் ஏ. அல்மர்ஷாத்தும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
கடன் மறுசீரமைப்பு என்பது ஒரு நாடு நிதி அழுத்தத்தைக் குறைப்பதற்காக அதன் தற்போதைய கடனின் விதிமுறைகளை இலகுபடுத்துவதற்காக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு செயல்முறையாகும்.
இதில் திருப்பிச் செலுத்தும் காலங்களை நீடித்தல், வட்டி விகிதங்களைக் குறைத்தல் அல்லது அசல் தொகையைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். இலங்கையைப் பொறுத்தவரை, நிதி ஸ்திரத்தன்மையை மீண்டும் பெறுவதற்கும் IMF உதவியைப் பெறுவதற்கும் அதன் வெளிப்புறக் கடனை மறுசீரமைப்பது அவசியமானதாகும்.
சவூதி அரேபியாவுடனான இலங்கையின் ஒப்பந்தம், ஏனைய நாடுகளுடன் அதன் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை இறுதி செய்வதற்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த ஒப்பந்தத்தின் முடிவு, சவூதி அரேபியா இராச்சியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை ஆழப்படுத்த நிச்சயமாக வழி வகுக்கும்” என்றும் நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.