வங்கியில் போதுமான நிதி இல்லாமல் காசோலையை வழங்கும் ஒருவருக்கு அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மிஞ்சாத சிறைத்தண்டனை வழங்கும் வகையிலான சட்டத் திருத்தமொன்று விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
காசோலை வழங்கிய ஆறு மாதங்களுக்குள் காசோலை வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், பணம் பெறுபவர் அல்லது காசோலையை வைத்திருப்பவர் காசோலை ரிட்டர்ன் ஆனது குறித்த தகவல் கிடைத்த 90 நாட்களுக்குள் காசோலையைத் தந்தவரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக பணம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்தால், மற்றும் காசோலைக்கு 90 நாட்களுக்குள் பணம் செலுத்தத் தவறினால் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
போதுமான நிதி இல்லாமல் காசோலைகளை வழங்குவோருக்கும் பாவனையில் இல்லாத கணக்கிலிருந்து காசோலைகளை வழங்குபவருக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.
காசோலை எந்தப் பெறுமதிக்கு வழங்கப்பட்டதோ அந்தத் தொகையையே அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆதாரமாக ரிடர்னான காசோலை கருதப்படும்.