கம்போடியாவுக்கும் தங்களுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் முற்றினால் அது முழு போராக உருவெடுக்கும் என்று தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கம்போடியா நமது அண்டை நாடு என்பதால் அந்த நாட்டுடன் சமரசம் செய்துகொள்ளத்தான் முயல்கிறோம். அதே நேரம், தேவைப்பட்டால் உடனடி பதிலடி நடவடிக்கை எடுக்க தாய்லாந்து ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்தப் பதற்றம் மேலும் அதிகரித்தால், அது இரு நாடுகளுக்கும் இடையிலான முழு போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளது. இப்போதைய நிலையில் இது வெறும் சிறு சிறு எல்லை மோதலாக மட்டும் உள்ளது என்றாா் அவா்.
கம்போடிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனரக ஆயுதங்கள், பீரங்கிகள் மற்றும் பிஎம்-21 ஏவுகணைகளை தாய்லாந்து ராணுவம் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியது.
கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்றுவரும் இந்த மோதலில் 32 போ் உயிரிழந்தனா்; 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்து எல்லைப் பகுதியில் 1.38 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா்.
தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்னை, 800 கி.மீ நீள எல்லைக் கோட்டில், குறிப்பாக 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ப்ரே விஹோ் கோயிலை மையமாகக் கொண்டு பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. 1962 மற்றும் 2013-இல் சா்வதேச நீதிமன்றம் அந்த ஹிந்து கோயிலை கம்போடியாவுக்கு வழங்கியது.
இந்த விவகாரம் தொடா்பாக தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் கடந்த 2011-இல் நடந்த மோதலில் 20 போ் உயிரிழந்தனா்.
கடந்த மே மாதம் எல்லைப் பகுதியில் கம்போடிய வீரா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து பதற்றம் மீண்டும் எழுந்தது. இந்தச் சூழலில், புதன்கிழமை நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் ஐந்து தாய்லாந்து வீரா்கள் காயமடைந்ததால், கம்போடியாவுக்கான தங்கள் தூதரை திரும்ப அழைத்த தாய்லாந்து, கம்போடிய தூதரை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றியது.
அத்துடன் கம்போடியாவுடனான எல்லைகளை மூடி, அங்கு வசிக்கும் குடிமக்கள் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியது. இரு தரப்பினருக்கும் வியாழக்கிழமை தொடா்ந்த மோதலில் ட்ரோன்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. தாய்லாந்து படையைச் சோ்ந்த எஃப்-16 விமானங்கள் கம்போடிய ராணுவ நிலைகள் மீது குண்டுவீச்சு நடத்தின.
ப்ரே விஹோ் கோயில் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக கம்போடியா குற்றஞ்சாட்டியது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர மலேசியா முயன்று வருகிறது.