இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் என்பன இணைந்து இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேருக்கு இந்தியாவின் பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார உறவுகள் போன்ற பல்வேறு துறைகளில் அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பினை அண்மையில் வழங்கியிருந்தன.
இந்த வாய்ப்பைப் பெற்று இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட இத்தரப்பினர், இலங்கைக்குத் திரும்பியதும் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் இலங்கையின் அரசியல் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடனான சந்திப்பொன்றை வெள்ளிக்கிழமை (08) கொழும்பிலுள்ள தாஜ் கொழும்பிலுள்ள சமுத்ரா ஹோட்டலில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது.
இங்கு, இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், கல்வித் துறையில் காணப்படும் நவீனத்துவம், கலாச்சார உறவுகள் மற்றும் ஜனநாயக மரபுகள் உள்ளிட்ட பல துறைகளில் கருத்துக்கள் முன்வைத்து தாம் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இச்சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.