கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும், அது இலங்கைக்குச் சொந்தமான தீவு என்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கச்சத்தீவின் உரிமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக அரசாலோ அல்லது ராஜதந்திர ரீதியாகவோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தற்போது தென்னிந்தியாவில் தேர்தல்காலம் ஏற்பட்டுள்ளதால், தமது அரசியல் தேவைகளுக்காக ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை கூறிவருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் அவ்வாறான அரசியல் கருத்துக்களை பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை எனவும், இராஜதந்திர மட்டத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.