கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர் ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அந்த மாணவர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கேகாலை பகுதியை சேர்ந்த 24 வயதான ஆசிரி ஷானக என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் சாட்சியமளித்த இறந்த மாணவரின் தந்தை, மகன் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லாமையினால் அது குறித்து வினவிய போது, வாழ்க்கை மிகவும் சலிப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் வீட்டில் ஒரு நாய் இருந்தது. என் மகனும் மகளும் அந்த நாயை மிகவும் நேசித்தார்கள். அந்த நாய் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டது.
நாய் இறந்த பிறகு, என் மகன் மிகவும் சோகமாக இருந்தார். பின்னர், கண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் மகனை அழைத்து செல்ல முன்பதிவு செய்திருந்தேன்.
கடந்த 2 ஆம் திகதி, என் மனைவி, மகன் மற்றும் மகள் என நாங்கள் நான்கு பேரும் வீட்டில் இருந்தோம். காலையில், என் மகன் என்னுடன் சாப்பிட்டார். என் மகனிடம் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை. அவர் நன்றாக இருந்தார்.
பின்னர் நான் சுமார் 8.30 மணிக்கு கேகாலை பொது மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றேன். மனைவி, மகன் மற்றும் மகள் வீட்டில் இருந்தனர். என் மகன் வீட்டின் மேல் மாடியில் ஒரு அறையில் இருந்தார்.
காலை 9.45 மணியளவில், என் மனைவி என்னை தொலைபேசியில் அழைத்து, சீக்கிரம் வீட்டிற்கு வரச் சொன்னார். நான் சீக்கிரம் வீட்டிற்குச் சென்று பார்த்த போது மகன் உயிரிழந்து கிடந்தார்” என தந்தை குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவனின் தந்தை மற்றும் தாயார் தொழில் ரீதியாக மருத்துவர்கள், அவரது ஒரே சகோதரியும் மருத்துவ மாணவியாகும். உயிரிழந்த மாணவன் ஆசிரி ஷானகவின் இறுதிச் சடங்குகள் நேற்று கேகாலை பொது மயானத்தில் நடைபெற்றுள்ளன.
சம்பவம் குறித்து கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.