சர்வதேசப் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இரு தரப்பும் இணைந்து செயற்படுவதற்கான முன்மொழிவொன்றை ஜனாதிபதி பில் கிளின்டன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் முதலாவது சந்திப்பின் போது முன்வைத்ததாக புதிய தகவல்கள் நேற்று வெளியாகியுள்ளன.
2000 ஜூன் 4 ஆம் திகதி இது தொடர்பில் கிரம்ளினில் பரிமாறப்பட்ட ஆவணங்கள் அமெரிக்க ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுயாதீன ஆராய்ச்சிப் பிரிவொன்று முன்வைத்த தகவல் அறியும் கோரிக்கையின் ஊடாக வியாழனன்று (21) வெளியிடப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்துக்கு எதிராக, குறிப்பாக உஸாமா பின் லாடனுக்கு எதிராக நாமிருவரும் ஒத்துழைத்துச் செயற்பட்டால் என்ன என பில் கிளின்டன் கேட்டதாகவும் தொடர்ந்து வொஷிங்டன்- மொஸ்கோ இணைந்து செயற்படுவதற்கான மூலோபாயமொன்றை முன்வைத்ததாகவும் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
அவ்வேளை வடக்கு கௌகாசஸில் இஸ்லாமிய கிளர்ச்சிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த புதிதாகத் தெரிவு செய்யப்படிருந்த ஜனாதிபதி புட்டின், சர்வதேச பயங்கரவாதம் என அவரால் வர்ணிக்கப்பட்டதுக்கு எதிரான பொதுக் கூட்டணியொன்றின் அவசியத்தை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
9/11 தாக்குதலுக்குப் பின்னர் எதிரும் புதிருமான இரு நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் பல முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட்டன. ஈராக் மீது அமெரிக்கா தன்னிச்சையாக போர் தொடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா ஒத்துழைப்பு வழங்குவதில் இருந்து பின்வாங்கியது.
இந்த வருட ஆரம்பத்தில் ரஷ்யாவின் வெளிநாட்டமைச்சர் செர்ஜி லாரொவ், இரட்டை நிலைப்பாடு இல்லாத எந்த நாட்டுடனும் தாம் இந்த விடயத்தில் ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
குறித்த சந்திப்பின் போது, ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையில் முழு அளவிலான உறவு இருக்க வேண்டும் என ரஷ்யத் தலைவர் குறிப்பிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.