அக்டோபர் 2023 இல் ஆரம்பித்த பலஸ்தீன மக்கள் மீதான இன அழித்தொழிப்பு தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தப் பிரகடனங்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (ACJU) வருடாந்த பொதுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டதாக 17 ஞாயிறன்று (17) உலமா சபை செய்தி வெளியிட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள இந்தப் பிரகடனத்தில், உலககெங்குமுள்ள முஸ்லிம் தலைவர்களுக்கும் மற்றும் அரசாங்கங்களுக்குமானதும், சர்வதேச சமூகம் மற்றும் உலகத் தலைவர்களுக்கானதும், உலகளாவிய சிவில் சமூகத்திற்கானதும், இலங்கை அரசாங்கத்திற்குமான கோரிக்கைகளும் முறையீடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
சியோனிச அமைப்பு சர்வதேச சட்டத்திற்கு இணங்கி அதன் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரும் வரை அதனுடன் உள்ள அனைத்து இராஜதந்திர, அரசியல், வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை உடனடியாக நிறுத்துமாறும்.
காஸா மற்றும் பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளில் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை அல்லது பொதுமக்களைக் கொல்வதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்ட எவரும் இலங்கைக்குள் நுழைவதைத் தடை செய்யுமாறும்.
ஐ.நா மற்றும் பிற உலகளாவிய அமைப்புகளில் பாலஸ்தீன சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்து வலியுறுத்துமாறும்;, சியோனிஸ ஆட்சியாளர்கள் மேற்கொண்ட அநீதிகளுக்கு அவர்களே பொறுப்புக் கூறவேண்டும் என வாக்களிக்கப்படும் சந்தரப்பத்தில் சியோனிஸத்துக்கு எதிராக வாக்களிக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரகடனத்தின் முழு வடிவம்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்..!
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (ACJU) வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஒன்று சேர்ந்த அதன் உறுப்பினர்களான நாங்கள்,
அல்-குர்ஆன், அஸ்ஸுன்னா மூலம் வழிகாட்டப்பட்டதும், நேர்வழி பெற்ற கலீபாக்கள் மூலமும் பிக்ஹ் உடைய அறிஞர்கள் மூலமும் பாதுகாக்கப்பட்ட கொள்கைகளான உண்மை, நீதி மற்றும் மனித கண்ணியத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்கான எங்கள் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
பாலஸ்தீனத்தில், குறிப்பாக காஸா, மேற்குக் கரை மற்றும் புனித நகரான அல்-குத்ஸில் உள்ள எமது அடக்குமுறைக்குட்பட்ட சகோதர சகோதரிகளுடன் நாங்கள் ஒன்றாக நிற்கின்றோம்.
சியோனிச ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான குண்டுவெடிப்புகள், திட்டமிட்ட கொலைகள், முற்றுகைகளால் ஏற்படுத்தப்பட்ட பட்டினி மற்றும் திணிக்கப்பட்ட இடம்பெயர்வு உள்ளிட்ட அட்டூழியங்கள் – இஸ்லாமியக் கொள்கைகளுக்கும் மற்றும் சர்வதேச மனித உரிமைகளுக்கும் எதிரான வெளிப்படையான
மீறல்களாகும்.
வாழ்க்கை புனிதமானது என்று இஸ்லாம் போதிக்கிறது:
“எவரொருவர் மற்றோர் ஆத்மாவின் கொலைக்குப் பிரதியாகவோ அல்லது பூமியில் (உண்டாக்கும்) குழப்பத்தி(னைத் தடை செய்வத)ற்காகவோ தவிர (அநியாயமாக மற்றொருவரை) கொலை செய்கிறாரோ அவர் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவர் போல ஆவார் என்றும் எவர் அதனை (ஓர் ஆத்மாவை) வாழ வைக்கிறாரோ அவர் மனிதர்கள் யாவரையுமே வாழ வைத்தவர் போல ஆவார்.” (அல்-குர்ஆன் 05:32)
பாலஸ்தீனமும், குறிப்பாக அல்-மஸ்ஜிதுல்-அக்ஸாவும், அல்லாஹ்வால் புனிதப்படுத்தப்பட்டவை:
“தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பெற்ற பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன் (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால் நாம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தி யடையச் செய்திருக்கிறோம்.’ (அல்-குர்ஆன் 17:01)
“விசுவாசிகள் ஒரே உடலை ஒத்தவர்கள்” என நபி முஹம்மது ﷺ அவர்கள் கூறினார்கள்.
“விசுவாசிகள் ஒர் உடலைப் போன்றவர்கள். அதில் ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டால், முழு உடலும் காய்ச்சலுடனும் தூக்கமின்மையுடனும் பதிலளிக்கும்.” (ஸஹீஹ் அல்-புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
எனவே, பாலஸ்தீன மக்களையும், நிலத்தையும் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மார்க்கக் கடமையாகும். அது ஒடுக்குமுறையை எதிர்ப்பதிலும் (zulm) நீதியை (adl) நிலைநிறுத்துவதிலும் வேரூன்றியுள்ளது.
நாங்கள் நினைவு கூர்கின்றோம்:
* 1948ஆம் வருட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் அனைவருக்கும் வாழும் உரிமை, சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கான உரிமையை உத்தரவாதம் செய்கிறது.
* 1949ஆம் வருடம் நடைபெற்ற நான்காவது ஜெனீவா மாநாடு பொதுமக்களை குறிவைத்தல், கூட்டுத் தண்டனை மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பை அழித்தல் ஆகியவற்றைத் தடை செய்கிறது.
* ஐக்கிய நாடுகள் சபையின் பல தீர்மானங்கள் பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை, இறையாண்மை மற்றும் மீள்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துகின்றன.
‘சியோனிச ஆட்சியின் தொடர்ச்சியான முற்றுகை, படுகொலைகள் மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவை சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க் குற்றங்களாவதுடன் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுமாகும்.’
எங்கள் கோரிக்கைகள் மற்றும் முறையீடுகள்:
முதலாவது உலககெங்குமுள்ள முஸ்லிம் தலைவர்களுக்கும் மற்றும் அரசாங்கங்களுக்குமானது:
* சியோனிச ஆட்சிக்கு எதிராக ஒன்றுபட்டு தீர்க்கமான இராஜதந்திர, பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இதில் தடைகள், சட்ட நடவடிக்கை மற்றும் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவி ஆகியவைகளும் அடங்கும்.
* விலாயா எனப்படும் பாதுகாப்புக் கடமைகளை நிறைவேற்றி சர்வதேச அரங்குகளில் பாலஸ்தீனியர்களின் உரிமைகளைப் பாதுகாருங்கள்.
இரண்டாவது சர்வதேச சமூகம் மற்றும் உலகத் தலைவர்களுக்கானது:
* சியோனிச ஆட்சியின் மீது உடனடித் தடைகளை விதித்து, அதன் தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்நிறுத்துங்கள்.
* உடனடியான, நிரந்தர போர்நிறுத்தம், முழுமையான மனிதாபிமான அணுகல் மற்றும் காஸா மீதான முற்றுகையை நீக்கக் கோருங்கள்.
* அல்-அக்ஸா பள்ளிவாயல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள அனைத்து புனிதத் தலங்களையும் பாதுகாத்து, அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் மதக் கடமைகளை நிறைவேற்றும் சுதந்திரத்தை உறுதி செய்து கொடுங்கள்.
மூன்றாவது உலகளாவிய சிவில் சமூகத்திற்கானது:
* பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு துணையாக இருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் எதிராக அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களுக்கு எதிராக விற்பனை மற்றும் தடைப் பிரச்சாரத்தை (BDS) நடத்துங்கள்.
* தவறான தகவல்களை எதிர்த்தல், இஸ்லாமிய வெறுப்பு மற்றும் பாலஸ்தீன எதிர்ப்பு இனவெறியை எதிர்த்தல் என்பவற்றுடன் பாலஸ்தீன போராட்டத்தின் யதார்த்தத்தைப் பற்றி சமூகங்களுக்குக் தெளிவுபடுத்துங்கள்.
நான்காவது இலங்கை அரசாங்கத்திற்கு:
இலங்கையர் என்ற ரீதியில், எமது அரசு வரலாற்று ரீதியாக பாலஸ்தீனத்தை ஆதரித்து வந்ததை ஏற்றுக் கொள்கிறோம். இருப்பினும், அண்மைக் காலமாக, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் சியோனிச ஆக்கிரமிப்புடன் கூடிய அரசுடன் உறவைப் பேணி வருகின்றன.
எனவே, இலங்கை அரசாங்கத்திடம் நாங்கள்:
* சியோனிச அமைப்பு சர்வதேச சட்டத்திற்கு இணங்கி அதன் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரும் வரை அதனுடன் உள்ள அனைத்து இராஜதந்திர, அரசியல், வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை உடனடியாக நிறுத்துமாறும்.
* காஸா மற்றும் பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளில் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை அல்லது பொதுமக்களைக் கொல்வதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்ட எவரும் இலங்கைக்குள் நுழைவதைத் தடை செய்யுமாறும்.
* ஐ.நா மற்றும் பிற உலகளாவிய அமைப்புகளில் பாலஸ்தீன சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்து வலியுறுத்துமாறும்;, சியோனிஸ ஆட்சியாளர்கள் மேற்கொண்ட அநீதிகளுக்கு அவர்களே பொறுப்புக் கூறவேண்டும் என வாக்களிக்கப்படும் சந்தரப்பத்தில் சியோனிஸத்துக்கு எதிராக வாகக்களிக்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.
எங்கள் உறுதிமொழி
இலங்கையின் உலமாக்களாகிய நாங்கள், பின்வரும் உறுதி மொழிகளை எடுக்கிறோம்:
* அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு நாம் உறுதுணையாக நிற்க வேண்டும் அது எமது இஸ்லாமிய கடமை என்பதனை சமூகங்களுக்கு போதிப்போம்.
* பாலஸ்தீனத்திற்காக துஆச் செய்தல், அவர்களுக்காக குரல் கொடுத்தல் மற்றும் மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து செய்தல் என்பவற்றில் ஈடுபட வேண்டுவோம்.
* நீதி நிலை நாட்டப்படும்வரை உறுதியுடனும், அச்சுறுத்தலுக்கு அஞ்சாமலும் நின்று உண்மையைப் பேசுவோம்.
முடிவுரை:
பாலஸ்தீனத்தின் நோக்கம் நம்பிக்கை, நீதி மற்றும் மனிதநேயத்திற்கான தேவைகள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
இனப்படுகொலையை தடுக்கக் குரல் கொடுக்காது அமைதியாக இருந்தவர்களுக்காக வரலாறு தீர்ப்பளிக்கும் என்பதை உலகிற்கு நினைவூட்டுகிறோம்.
அல்லாஹ் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு வெற்றியை வழங்கி, உம்மத்தை ஒன்றிணைத்து, அல்-அக்ஸா பள்ளிவாயிலின் புனிதத்தைப் பாதுகாப்பானாக.
(இப்பிரகடனமானது 2025.08.17 அன்று நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாவட்ட, பிரதேச கிளைகளின் பதவிதாங்குனர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டு சபையில் ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.)
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா