தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவாதம் இன்றையதினம் (05) பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இதற்கு ஆதரவாக 177 வாக்குகளும், எதிராக எவ்வித வாக்கும் அளிக்கப்படவில்லை.
வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்திருக்கும் வகையில் ஒரு வாக்கும் கிடைக்கப் பெற்றது.அதற்கமைய குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதைத் தவிர்ப்பார்கள் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்திருந்தார்.
தேசியப் பட்டியல் எம்.பியான நாமல் ராஜபக்ஷ, டி.வி. சானக (அம்பாந்தோட்டை), சானக மடுகொட (காலி) ஆகிய 3 எம்.பிக்களே இம்முறை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் 4.10 மணிக்கு ஆரம்பமானது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வாக்களிப்பிலிருந்து விலகியிருக்கும் வகையில் மஞ்சள் நிற பொத்தனை அழுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பிரகாரம் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.