புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு நல்லிணக்க மற்றும் சமாதானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில் மிகவும் சிறப்பான ஓர் பணியை புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு கடந்த 21ம் திகதி வியாழக்கிழமை மேற்கொண்டது.
மதங்கள் மனிதர்களின் நலன்களுக்காகவே இருக்கின்றன.மனிதர்களின் பிரச்சினைகளை, தேவைகளை இனங்காண்பதும் அது குறித்து கவலைப்படுவதும் அதனை தீர்ப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்வதும் மதங்களின் பிரதான பணியாகும்.
அந்தவகையில் இவ்வமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற நான்கு மதங்களையும் சேர்ந்த மதத் தலைவர்களும் ஏனைய அங்கத்தவர்களும் இணைந்து புத்தளம் வன்னத்திவில்லு பிரதேசத்தில் அமைந்துள்ள பின்தங்கிய கிராமமான மல்வில கிராமத்திற்கு விஜயம் செய்து அங்கு வசிக்கும் சுமார் 40 குடும்பங்களைச் நேர்ந்த சிங்கள,தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தேவைகள் என்பவற்றை நேரடியாக அறிந்துகொள்ளும் வகையில் இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது புத்தளம் சர்வமத அமைப்பை சேர்ந்த தலைவர்களான கௌரவ புத்தியாகம ரத்ன தேரர், இந்து மத குருக்கள் அம்பலவாணன் சர்மா ,அருட் தந்தை திலங்க பெரேரா, அருட் தந்தை உபுல் நிரோஷன் அஷ்ஷெய்க் எம்.எஸ் அப்துல் முஜீப் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இவர்களோடு இப்பிரதேச கிராம அதிகாரியான செல்வி எம்.ஜே.எப் இம்ரானாவும் அபிவிருத்தி உத்தியோகத்தரான ஜே.ஏ. பேகமும் இணைந்துகொண்டனர்
இந்த ஊரின் பெளத்த தேவாலய வளாகத்தில் இவ்வூர் மக்களோடு மாவட்ட சர்வ மத அமைப்பு பிரமுகர்களும் ஒன்றாக அமர்ந்து பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
இதன் போது இவ் ஊர்மக்கள் நீண்டகாலமாக அனுபவிக்கின்ற துன்பங்கள் ,கஷ்டங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டதோடு அக் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு தரப்பினரின் பங்களிப்புகளோடு எவ்வாறெல்லாம் முயற்சிகளை செய்ய முடியும் என்பதற்காக ஆலோசனைகளும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
கலந்துரையாடலைத் தொடர்ந்து இப்பிரதேசத்தில் காணப்படுகின்ற தொல்பொருள் தொடர்பான பிரதேசத்தையும் மாவட்ட சர்வமத அமைப்பினர் பார்வையிட்டனர்.
உண்மையில் இந்த விஜயமானது கலந்துகொண்ட அனைவர் மத்தியிலும் மக்களின் தேவைகளை நேரில் சென்று பார்ப்பதன் முக்கியத்தை உணர்த்தியதோடு இதுபோன்று பல்வேறு மனிதாபிமானம் சார்ந்த பணிகளையும் அனைத்து மதத்தவரும் இணைந்து ஈடுபடுவதன் ஊடாக நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தலாம் என்ற உணர்வையும் இங்கு வந்த குழுவினர் பெற்றுக்கொண்டனர்.