போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக் காட்டியதற்காக இலங்கை கால்பந்து வீரர் முகமது தில்ஹாமுக்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) 2,000 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது.
கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜூன் 10 அன்று நடைபெற்ற AFC ஆசிய கோப்பை 2027 தகுதிச் சுற்றில் சீன தைபேயை இலங்கை 3–1 என்ற கணக்கில் வென்றத, இதன் போது ஆட்டத்தில் பயன்படுத்தப்படாத மாற்று வீரராக இருந்த 19 வயதான தில்ஹாம், இறுதி விசிலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட குழுப் புகைப்படத்தின் போது தனது ஜெர்சியைத் தூக்கி, “Pray for Free Palestine ” என்ற வார்த்தைகளைக் கொண்ட ஒரு உள்ளாடையை வெளிப்படுத்திக் காட்டினார்.
இதனையிட்டு FIFA மற்றும் AFC இணைந்து வெளியிட்ட கடிதத்தில், உத்தியோகபூர்வப் போட்டிகள் அல்லது தொடர்புடைய நிகழ்வுகளின் போது அரசியல், மத அல்லது தனிப்பட்ட செய்திகளை வெளியிடுவதைத் த் தடைசெய்யும் சர்வதேச கால்பந்து விதிமுறைகளின் கீழ் இவர் தண்டிக்கடுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
போட்டி உத்தியோகபூர்வமாக முடிந்ததன் பின்னரே அவர் இந்தச் செய்தியை வெளிப்படுத்தியிருந்த போதும், அதிகாரிகள் அதை மைதான சூழலுக்குள் நடந்த நடத்தை மீறலாகக் கருதி அவர் மீது அபராதம் விதித்துள்ளனர்.
தில்ஹாமுக்கான தண்டனையை உறுதிப்படுத்திய இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) தலைவர் ஜஸ்வர் உமர், தில்ஹாம் முன்வைத்த விளக்கத்தை வைத்து அவர் மீதான தண்டனையை குறைக்கக்கூடியதாக இருந்ததாகத் தெரிவித்தார்.
“அபராதத்தை முடிவு செய்வதற்கு முன்பு AFC, வீரருடைய வயது, நோக்கம் மற்றும் நடத்தையை கணக்கில் எடுத்துக்கொண்டது,” எனவும் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்,
2,000 டொலர் (6 இலட்சம்) அபராதமாகச் செலுத்த தில்ஹாமுக்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது, குறைந்தது இன்னும் இரண்டு வாரங்களில் அவர் இதனைச் செலுத்த வேண்டியுள்ளது,
இந்த நடவடிக்கை இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும், இது FIFA வின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கான விதிகளை மீறியதாக உள்ளது எனவும் உள்ளக ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் FFSL அறிவித்துள்ளது.