எழுத்து– காலித் ரிஸ்வான்
சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர் மீண்டும் உலகளாவிய ஊடகத் துறையின் மையமாக உருவெடுத்திருக்கிறது.
அந்த வகையில் இந்நகரில், இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அவர்களின் அனுசரனையின் கீழ், 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 முதல் 4ம் திகதி வரை, 5வது சவூதி ஊடக மன்றம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு, மத்திய கிழக்குப் பிராந்திய மற்றும் உலகளாவிய ஊடக, தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஒன்றிணைக்கும் இந்த முக்கியமான நிகழ்வானது, உலக ஊடகத் துறையில் மிகப் பெரிய மாற்றங்கள் இடம்பெற்றுவரும் முக்கியமான இக்காலப்பகுதியில் நடைபெறுகிறது.
புதிய தொழில்நுட்பங்கள் முதல் ஊடக உள்ளடக்கங்கள் சார்ந்த புதிய முயற்சிகள் வரை, ஊடகத்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கலந்துரையாடல்களையும் திட்டங்களையும் இந்த முக்கிய மாநாடு உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“மாற்றங்கள் காணும் உலகில் ஊடகம்” என்ற மகுடம் தாங்கி நடைபெறவுள்ள இந்த மன்றமானது, செயற்கை நுண்ணறிவு (AI), Extended Reality (XR), மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம் போன்ற துறைகளின் நவீன முன்னணி மாற்றங்கள் மற்றும் போக்குகளை வெளிக்கொண்டுவரும் எனவும் எதிர்பார்கப்படுகிறது.
இந்த மன்றத்தில் 100 க்கும் மேற்பட்ட குழுக் கலந்துரையாடல்கள் மற்றும் துறைசார் பயிற்சிப்பட்டறைகள் இடம்பெறும் எனவும் இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஒளிபரப்புத் துறையில் நிகழ்ந்துள்ள சமீபத்திய முன்னேற்றங்களை வெளிக்காட்டுவதற்கான ஒரு சிறப்புப் பகுதியும் இம்முறை மாநாட்டில் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சவூதி ஊடகத் துறை அமைச்சர் ஸல்மான் அல்-தோசரி, உலக அரங்கில் இந்த நிகழ்வின் வளர்ந்து வரும் தாக்கத்தை சுட்டக்காட்டிப் பேசியதோடு, இது, போட்டித்திறன் மிக்கதும் புதுமைகள் சாரந்ததுமான ஊடகத் துறையை உருவாக்கும் சவூதி அரேபியாவின் தூரநோக்கிற்கு வழி சமைக்கின்ற ஒரு மூலோபாய தளமாகவும் உள்ளது என்றும் அவர் விவரித்தார்.
“இந்த மாநாடு, சவூதி அரேபியாவின் பார்வைகளை உலகளவில் தெளிவாகவும் அதற்கே உரிய உயர் முறையிலும் பகிர உதவுகிறது” எனவும் அவர் கூறிப்பிட்டார்.
மேலும், ஊடகத்துறையை தொடர்ந்து ஊக்குவித்து ஆதரவுகளை அளிக்கின்ற சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் வழிநடத்தலுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
சவூதி ஒளிபரப்புக் ஆணையகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், ஊடக மன்றத்தின் தலைவருமான முஹம்மத் அல் ஹார்த்தி அவர்கள், 2026இல் நடைபெறவுள்ள மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில், விடயப்பரப்பு அல்லது உள்ளடக்கங்கள் உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவும் (AI) மற்றும் XR ஆகியவை ஏற்படுத்தியிருக்கும் புதுமையான மாற்றங்களை ஆழமாக ஆராய்வது முக்கியமாக அமையும் என்பதை வலியுறுத்தினார்.
இது, சர்வதேச ஒத்துழைப்புகளுக்கான வாயில்களைத் திறப்பதுடன், சவூதி திறமைகளை வளர்க்கும் பணிக்கும் உறுதுணையாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய கலந்துரையாடல், தொழில்முறை முன்னேற்றம் மற்றும் ஊடகத் துறைசார் புதுமைகளுக்கான முன்னணி தளமாக சவூதி ஊடக மன்றம் தற்போது உறுதியாக நிலைபெற்றுள்ளது.
இது, சவூதி அரேபியாவின் உலகளாவிய ஊடகத்துறையிலான பிரசன்னத்தை உயர்த்துவதற்கான விஷன் 2030 திட்டத்தின் முக்கிய நோக்கதுக்கு துணையாகவும் அமைகிறது.
ஊடகத் துறை வேகமான மாற்றங்களை கண்டுவரும் இந்த காலகட்டத்தில், ரியாத் நகரம் பிராந்திய மட்டத்தில் மட்டுமன்றி, தகவல் பரிமாற்றம் மற்றும் காட்சிப் படுத்தலை வடிவமைக்கும் ஒரு உலகளாவிய சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.